இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு........!
இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு........!
இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு........!
இலங்கையில் மிக இளவயதிலுள்ள சிறுமிகள் தாய்மார்களாக மாறும் நிலை, அதாவது யௌவன வயது கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது பெற்றோரும் குழந்தைகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சினையாகும் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடும்பங்களுக்குள் உள்ள உணர்ச்சி பிணைப்புகள் குறைந்து வருவது குறிப்பிடப்பட்டுள்ளது
பல பெற்றோர் வேலைப்பளுவின் காரணமாக தங்கள் மகள்களின் நாளாந்த வாழ்க்கை, பிரச்சினைகள் மற்றும் உணர்ச்சி தேவைகளை புரிந்து கொள்ள போதிய நேரம் செலவிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
வீட்டில் தேவையான அன்பும் கவனமும் கிடைக்காதபோது, சில இளம்பெண்கள் குடும்பத்திற்கு வெளியுள்ளவர்களிடமிருந்து அன்பும் ஆதரவும் தேடுவதற்கான நிலை ஏற்படுகிறது என பொலிஸாருக்கு கிடைக்கும் புகார்களில் தெரியவந்துள்ளது.
இதனால் பலர் மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தும் பழக்கத்துக்குத் தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலைகள் கல்வி பாதிப்பு, சிறுவயது இழப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என பொலிஸார் எச்சரிக்கின்றனர்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் திறந்த உரையாடலைக் கொண்டிருக்க வேண்டும், அவர்களின் நடத்தை மாற்றங்களை கவனிக்க வேண்டும், சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக Facebook, Instagram, WhatsApp போன்ற தளங்களில் அறிமுகமற்ற நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கவும், தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் பிரச்சினை, அச்சுறுத்தல் அல்லது சந்தேகம் ஏற்பட்டால் அதை மறைக்காமல் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு குடும்பங்களின் விழிப்புணர்வு மற்றும் திறந்த தொடர்பு மூலம் சிறுவர் மீதான குற்றங்கள் மற்றும் யௌவன கர்ப்பங்களைத் தடுப்பது சாத்தியம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை ஏற்பட்டால் 119, 118, 109 அல்லது 107 என்ற அவசர அழைப்பு எண்களுக்கு தகவல் வழங்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விலை மீண்டும் உயருமா? புதிய தரவுகள் வெளியீடு
உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மைய மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
கூட்டுத்தாபனம் மே 6 மற்றும் மே 10 ஆகிய திகதிகளில் தனது அண்மைய இரண்டு டீசல் கப்பல்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்கு புதிய கப்பல்கள் வருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது
நாட்டிற்கு தற்போதைய எரிபொருள் இருப்பு போதுமானதாக இருந்தாலும், கொள்வனவு செலவுகள் தொடர்ந்து உயர்ந்த மட்டத்திலேயே இருப்பதாக CPC முகாமைத்துவ பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக சந்தை விலை உயர்வு காரணமாக டீசல் மிக உயர்ந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் சுப்பர் டீசல் 303.76 அமெரிக்க டொலர் வரை உயர்ந்ததாகவும், அதே காலத்தில் டீசல் பீப்பாய் ஒன்றுக்கு 281.87 முதல் 289.47 டொலர் வரை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மார்ச் முதல் மே ஆரம்பம் வரை டீசல் விலை பீப்பாய் ஒன்றுக்கு 172.74 முதல் 303.76 டொலர் வரை மாறுபட்டதாகவும் தரவுகள் கூறுகின்றன. பெட்ரோல் விலையும் உயர்வுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
பெட்ரோல் 92 இன் விலை ஒரு பீப்பாய்க்கு 130.89 முதல் 153.70 டொலர் வரை இருந்ததாகவும், பெட்ரோல் 95 இரண்டு கப்பல்களில் முறையே 143.53 மற்றும் 154.72 டொலர் விலையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கிடையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உலக சந்தை விலை உயர்வு உள்நாட்டு பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, எரிபொருள் இறக்குமதி செலவு பெப்ரவரி மாதத்தில் 98 மில்லியன் டொலராக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 216 மில்லியனாகவும், ஏப்ரலில் 368 மில்லியனாகவும் உயர்ந்துள்ளது. மே மாதத்தில் இது 522 மில்லியன் டொலராக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான அடக்கச் செலவு 720 ரூபாயாக இருந்தாலும், பொதுமக்களுக்கு 392 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் கணக்கீடுகள் குறித்து மேலதிக விளக்கங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக, 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு முதற்கட்ட முச்சரிக்கை அறிவித்தல் இன்று (17) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.
நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக, 5 மாவட்டங்களைச் சேர்ந்த 27 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2 – Amber/Orange) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் விபரம்:
* கண்டி மாவட்டம்: 10 பிரதேச செயலாளர் பிரிவுகள்
* இரத்தினபுரி மாவட்டம்: 07 பிரதேச செயலாளர் பிரிவுகள்
* களுத்துறை மாவட்டம்: 05 பிரதேச செயலாளர் பிரிவுகள்
* குருணாகல் மாவட்டம்: 02 பிரதேச செயலாளர் பிரிவுகள்
* கொழும்பு மாவட்டம்: 01 பிரதேச செயலாளர் பிரிவு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள இந்த அறிவித்தலின்படி, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் செயற்படுமாறும், ஆபத்து அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ரயில் விபத்து – கைதான நபரின் வீட்டில் ரயில்வே உபகரணங்கள் மீட்பு
களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் பாதையின் ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல உபகரணங்களைப் பொலிஸாரால் மீட்க முடிந்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர் வசித்து வந்த வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ரயிலின் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் 03 இரும்பு லீவர்கள் மற்றும் அவற்றைக் கழற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் வனவாசல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவராவார்.
பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் மங்கள அஜித் உள்ளிட்ட குழுவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைவீழ்ச்சி!
களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (16) பதிவான மழைவீழ்ச்சி குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களு கங்கை படுகையில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் நதிப் படுகை பிராந்தியங்களில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கை பிராந்தியங்களின் சில இடங்களில் 60 முதல் 70 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், ஏனைய நதிப் பிராந்தியங்களில் 25 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர் மட்டத்தில் காணப்பட்ட போதிலும், அது தற்போது அவதான நிலைக்குக் கீழ் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
குடா கங்கையின் நீர்மட்டம் இன்னும் சிறிய அளவிலான வெள்ள நிலைமையிலேயே காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்பாய்கின்றன – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 20 பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது வான்பாய்ந்து வரும் முக்கிய நீர்த்தேக்கங்கள் மாவட்ட வாரியாக கீழே தரப்பட்டுள்ளன:
அனுராதபுரம் மாவட்டம்: இராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கங்கள்.
ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வெவ, வீரவில யோத வெவ மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்கள்.
குருணாகல் மாவட்டம்: அம்பகொல வெவ, உஸ்கல சியம்பலாங்கமுவ, மெதியாவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்கள்.
மாத்தளை / கண்டி மாவட்டம்: நாலந்த மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்கள்.
மொனராகலை மாவட்டம்: ஹதபானகல மற்றும் அலிகொட்டஆர நீர்த்தேக்கங்கள்.
புத்தளம் மாவட்டம்: இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள்.
மன்னார் மாவட்டம்: கட்டுக்கரை யோத வெவ (Giant’s Tank).
பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம்.
நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதன் காரணமாக, குறித்த ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளிலும் தாழ்நிலப் பிரதேசங்களிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற, 01.02.2009ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த நபர்கள் அது குறித்து தமது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வரவிருக்கும் பதிவுச் செயல்முறைக்கு முன்னர், தங்களது விபரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் தங்களது விபரங்கள் சரியானவையா என்பதைப் பரிசீலித்துப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு........!

No comments