சமூக ஊடக பயன்பாட்டில் வரப்போகும் அதிரடி மாற்றம்.........!

சமூக ஊடக பயன்பாட்டில் வரப்போகும் அதிரடி மாற்றம்.........!


சமூக ஊடக பயன்பாட்டில் வரப்போகும் அதிரடி மாற்றம்.........!



சமூக ஊடக பயன்பாட்டில் வரப்போகும் அதிரடி மாற்றம்.........!

            

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, வயதுக் குழுக்களின் அடிப்படையில் அதனை ஒழுங்குபடுத்தும் முறைமை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகரவினால் முன்வைக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை குறித்த முன்மொழிவு தொடர்பில், நேற்றைய தினம் (26) ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


தற்போதைய சூழலில் தொழில்நுட்பத்தை சிறுவர்களின் வாழ்க்கையிலிருந்து முழுமையாக ஒதுக்கிவிட முடியாது எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், இதற்காக வயது அடிப்படையில் பிரிக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றைக் கொண்டுவர அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


இதன்படி, மிகச் சிறிய வயதுடைய குழந்தைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், நடுத்தர வயதுடைய குழந்தைகளுக்குக் கல்வி சார்ந்த இணையத்தளங்களுக்கான அணுகல்களும், 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பொறுப்பான முறையில் பயன்படுத்தும் சுதந்திரமும் வழங்கப்படலாம் என அவர் விவரித்தார்.


இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து தொழில்நுட்ப ரீதியான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் முழுமையான தடைக்கு பதிலாகக் கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.



வாகன லீசிங் விதிகளில் திடீர் மாற்றம்


வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் லீசிங் மற்றும் கடன் வசதிகளில் மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 


இதனால் வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், புதிய விதிமுறைகளால் எதிர்காலத்தில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


நிதி அமைப்பின் நிலைத்தன்மையை பாதுகாக்கவும், கடன் அபாயங்களை கட்டுப்படுத்தவும், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் எல்லைகளை நேற்று (25) முதல் மட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி வெளியான புதிய திருத்தங்களின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட லீசிங் வசதி 60 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


அதேபோல், புதிய மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.


இதன்படி,


வர்த்தக வாகனங்களுக்கான லீசிங் 70% இலிருந்து 60% ஆக குறைப்பு


கார்கள், SUV, வேன், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களுக்கு 50% இலிருந்து 40% ஆக குறைப்பு என மத்திய வங்கி அறிவித்துள்ளது.


மேலும், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கடன் வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


அதன்படி,


வர்த்தக வாகனங்களுக்கு 90% வரை கடன் வசதி


கார்கள் மற்றும் SUV வகைகளுக்கு 50%


முச்சக்கரவண்டிகளுக்கு 25%


இலகுரக ட்ரக் வண்டிகளுக்கு 90%


மற்ற வாகனங்களுக்கு 70%


என புதிய சதவீதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


இதற்கிடையில், மின்சார வாகனங்களுக்கு 90% வரை கடன் வசதி வழங்கப்படும் என்றும், ஹைபிரிட் SUV மற்றும் கார்கள் போன்றவற்றுக்கு 50% கடன் வசதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய மாற்றங்களால் பொதுமக்கள் வாகனம் வாங்குவது இன்னும் கடினமாகும் என வாகன சந்தை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.




வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்



மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய நபர்களை அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 


ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், சமீபகாலமாக தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, களிமண்குண்டு, திருப்புல்லாணி மற்றும் பாம்பன் குந்துகால் உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், உரம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில், சீனியப்பன் தர்கா கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ‘ஹோவர்கிராப்ட்’ ரோந்து கப்பல் மூலம் மண்டபம், வேதாளை, சீனியப்பன் தர்கா ஆகிய கடற்கரையோரப் பகுதிகளில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது, வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் படகில் சில பெட்டிகளை ஏற்றுவதைக் கண்ட கடலோர காவல் படையினர், அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அந்தச் சமயத்தில், படகில் இருந்த இருவர் படகுடன் கடலுக்குள் தப்பிச் சென்றனர். அதேநேரம், சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் பெட்டிகளைக் கடற்கரையில் வீசிவிட்டு வாகனத்துடன் தப்பியோடினர். 


இதையடுத்து, கடற்கரையோரம் கைவிடப்பட்டுக் கிடந்த 12 பெட்டிகளையும் மீட்ட கடலோர காவல் படை வீரர்கள், அவற்றை மண்டபத்தில் உள்ள தங்களது முகாமிற்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனர். அதில், சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. 


இந்த வகையான வலி நிவாரணி மாத்திரைகள், இலங்கையில் கொக்கைன், ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் போன்ற போதைப்பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுவதால், தமிழகத்தில் இருந்து இவை அதிகளவில் இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகின்றன. 


பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த கடலோர காவல் படையினர், தப்பியோடிய மர்ம நபர்கள் மற்றும் சரக்கு வாகனம் குறித்து மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும (மரைன்) பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.




புகையிலை பயன்பாட்டினால் ஆண்டுதோறும்



புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. 


புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 


2026ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 


"இந்தச் சிறிய நாட்டிற்குள் புகையிலை பயன்பாட்டின் காரணமாக வருடத்திற்கு தோராயமாக 22,000 பேர் வரை அகால மரணமடைகின்றனர். பொருளாதார இழப்புகள் பற்றி பேசினால், 2016 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி வருடத்திற்கு தோராயமாக 214 பில்லியன் ரூபாய் செலவாகிறது. இது ஒரு தாமரைக்கோபுரம் கட்டுவதற்குச் சமம். புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பராமரிப்பதற்காக நாம் செலவிடும் தொகையானது, 16 தாமரைக்கோபுரங்களைக் கட்டுவதற்கு அல்லது இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை (Highways) அமைப்பதற்குச் செல்லும் தொகையாகும்." 


இலங்கையில் மாத்திரம் 9 முதல் 11 மில்லியன் வரையிலான சிகரெட் பில்டர்கள் சூழலில் விடுவிக்கப்படுகின்றன. இந்த உபயோகிக்கப்பட்ட பில்டர்களில் கடுமையான இரசாயனங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றால் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாதவை." என்றார்.




 எரிபொருள் தட்டுப்பாடு இல்லை



நாட்டிற்குள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


மசகு எண்ணெயைக் கொண்ட இரு கப்பல்கள் எதிர்வரும் சில நாட்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவிடமிருந்து 90000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயைக் கொண்ட ஒரு கப்பலும், ஐக்கிய அரபு இராச்சியத்திடமிருந்து 90000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயைக் கொண்ட கப்பலும் இவ்வாறு வருகை தரவுள்ளன.


பரவும் போலி பிரச்சாரங்கள் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த இடங்களில் நீண்ட வரிசை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாமெனவும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





5 ஆவது மற்றும் 6 ஆவது IMF மதிப்பாய்வுகள் இன்று



சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், இலங்கைக்குரிய ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மதிப்பாய்வுகள் (Reviews) இன்று (27) பரிசீலிக்கப்படவுள்ளன.


இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக IMF இன் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பபஜோர்ஜியு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.


கடந்த சில வருடங்களில், இலங்கையின் அதிகாரிகள் ஸ்திரமான பொருளாதார நிலையை (Macroeconomic stability) மீட்டெடுத்தல், வெளிநாட்டு கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த முயற்சிகள் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது பொருளாதாரத்தை ஒரு வலுவான அடித்தளத்தை நோக்கி கொண்டு செல்ல உதவியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இருப்பினும், சவாலான உலகளாவிய பொருளாதார சூழல் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரங்கள் புதிய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், அந்த சூழ்நிலையை கையாள்வது எளிதானதல்ல என்றும் இவான் பபஜோர்ஜியு சுட்டிக்காட்டியுள்ளார்.


அப்படி இருந்தபோதிலும், இலங்கையின் கொள்கை கட்டமைப்பு கடந்த காலத்தை விட தற்போது கணிசமாக வலுவடைந்துள்ளது. நிலையான கொள்கை வழியைப் பேணுவதும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தை மாற்றியமைக்க அனுமதிப்பதும் இதுவரையில் பெற்றுக்கொண்ட முன்னேற்றங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் என அவர் மேலும் கூறியுள்ளார்.


அதேவேளை, இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி கொண்டு செல்வதில், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் நெருங்கிய உறவைப் பேண எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.





சமூக ஊடக பயன்பாட்டில் வரப்போகும் அதிரடி மாற்றம்.........!

No comments

Theme images by fpm. Powered by Blogger.