எச்சரிக்கை...

எச்சரிக்கை...



எச்சரிக்கை...

   

எச்சரிக்கை...

முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. 

இன்று (02) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (03) முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, மேற்குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கடற்சார் சமூகத்தினரும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், அறிவுறுத்தியுள்ளது.




நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்...

   இன்று (02)  முதல் நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் மழையுடனான காலநிலை தீவிரமடையவுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.

மேலும், ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரான வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்று: மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது





பேருந்துக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பேருந்து போக்குவரத்து சங்கங்கள் அவசர கலந்துரையாடல்....

    பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பேருந்து போக்குவரத்துடன் தொடர்புடைய சங்கங்கள் அனைத்தும் இன்று(2) அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.

கடந்த நாட்களில் ஆரம்பத்தில் 12 ரூபா மற்றும் பின்னர் 24 ரூபாவினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது.

அதன் காரணமாக பேருந்துகளின் ஆரம்பக்கட்டணம் தொடக்கம் அனைத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க அனுமதி கோரி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது.

எனினும் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அதனை நிராகரித்திருந்தது. இந்நிலையில் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பேருந்து போக்குவரத்துடன் தொடர்புடைய அனைத்து சங்கங்களும் இன்று திடீர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.

பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான சங்கங்களின் நிலைப்பாடாக உள்ளது.




இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள் பதிவு...

    இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மே மாதத்தில் மாத்திரம் 8321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார். 

இந்த நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

டெங்கு நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும் கருத்துத் தெரிவித்த சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா, 

"டெங்கு நோயினால் இதுவரை 33,572 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இன்னும் ஆறு மாதங்களே ஆகியுள்ளன. 19 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்த நேரத்தில் 72 சுகாதார அதிகாரி பிரிவுகள் (MOH) அவதானமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றனர். அத்துடன் தென் மாகாணத்தில் 16 சதவீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 09 சதவீதமும் தற்போது வரை பதிவாகியுள்ளனர்" என்றார்.




விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…

     ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் நாளை மறுநாள் (04) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இறுதி அறிக்கை நாளை மறுநாள் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப இந்த முறை எரிவாயு விலையைத் திருத்த திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த மாதம் லிட்ரோ எரிவாயு விலையைத் திருத்த வேண்டாம் என்று நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு..! 

    வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக,

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செயயப்பட்டுள்ளது.

வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகரே, 

10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பல வர்த்தகரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். 

41 வயதுடைய நபரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வவுனியாவில் பல நகை கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து வந்ததுடன், 

நகைக் கடைகளுடன் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருந்தார்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசாருக்கோ அல்லது 0774101802 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.



எச்சரிக்கை...



No comments

Theme images by fpm. Powered by Blogger.