ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் ....!
அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி,
இணையதளம் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கம்பஹா, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண் ஆவார்.
பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து,
நேற்று (08) இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரால் முறைப்பாட்டாளரிடமிருந்து மோசடி செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகை 426,300 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில், மோசடி செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகையில் 186,500 ரூபாய் சந்தேக நபரின் தனிப்பட்ட வங்கித் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீகொடவில் பரபரப்பு..!
மீகொட, உடகேவத்தை பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், வெசாக் விடுமுறையைச் சாதகமாக்கிக் கொண்டு,
80 லட்சத்திற்கும் அதிகமான ரூபாயைத் திருடிச் சென்ற விசுவாசமான ஊழியர், 50 லட்சம் பணத்துடன் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது? (திடுக்கிடும் பின்னணி)
கதிர்காமம் சென்ற குடும்பம் - வெசாக் பௌர்ணமி விடுமுறையை முன்னிட்டு, தொழிலதிபர் தனது ஊழியர்கள் அனைவருக்கும் லீவு கொடுத்துவிட்டு, குடும்பத்தோடு கதிர்காம கோயிலுக்கு நிம்மதியாக வழிபடச் சென்றுள்ளார்.
பௌர்ணமிக்கு அடுத்த நாள் வரவிருந்த ஒரு கொள்கலன் (Container) பொருட்களுக்காக,முன்கூட்டியே வசூலிக்கப்பட்ட 80 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணத்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாகப் பூட்டி வைத்தே தொழிலதிபர் சென்றுள்ளார்.
ஊர் திரும்புவதாகக் கூறிய ஊழியர் -
நானும் என் சொந்த ஊருக்குப் போகிறேன் முதலாளி" என்று கூறிவிட்டுச் சென்ற சந்தேகத்திற்குரிய ஊழியர், முதலாளி வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த சில மணி நேரங்களிலேயே நைசாக வீட்டிற்குள் நுழைந்து ஒட்டுமொத்தப் பணத்தையும் அள்ளிக்கொண்டு தப்பியுள்ளார்.
சிசிடிவியில் சிக்கிய மாஸ்டர் பிளான்.!
கதிர்காம யாத்திரையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய தொழிலதிபர், கதவு உடைக்கப்பட்டு பணம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, 'நம்பிக்கையான' அந்த ஊழியரே திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.
சம்பவம் குறித்து மீகொட பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து,உடனடியாகக் களமிறங்கிய விசேட பொலிஸ் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
சந்தேகநபரின் சொந்த ஊரை முற்றுகையிட்ட பொலிஸார், அவரை அதிரடியாகக் கைது செய்ததுடன்,அவரிடமிருந்து 50 லட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மீட்டுள்ளனர்.
மீதிப் பணத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த கடற்பரப்புகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்படைச் சமூகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலை நிலவக்கூடியதால், கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
மூன்று நாள் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் முதல் நாளில் ஆய்வு செய்யப்பட்ட 31,196 இடங்களில் 2,097 இடங்களில் டெங்கு நுளம்பு கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் 14 மாவட்டங்களின் 72 சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவுகளில் நேற்று (08) தொடங்கிய இந்த விசேட நடவடிக்கையின்போது, 8,121 இடங்கள் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன் 1,165 எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டதுடன், 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், கட்டுமானத் தளங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அதிக ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட 56 பாடசாலைகளில் 7 இடங்களிலும், 178 கட்டுமானத் தளங்களில் 41 இடங்களிலும், 189 அரசு நிறுவனங்களில் 50 இடங்களிலும் டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28,230 குடியிருப்பு வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,760 வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 657 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
வானில் நிகழும் அதிசயம்...
வானியல் அதிசயங்களில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் எதிர்வரும் ஒகஸ்ட் 12ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூரியக் கிரகணமானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வந்து, சூரியனின் ஒளி பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீது விழாமல் தடுக்கும் நிகழ்வாகும்.
இதேவேளை, ஐரோப்பா, ஆபிரிக்கா, வடக்கு அமெரிக்க நாடுகளின்
குறிப்பிட்ட பகுதிகளில் பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்படும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா
போன்ற நாடுகளில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதுமட்டுமன்றி,
ஸ்பெயினில் இது போன்ற ஒரு கிரகணம் 1905ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின்
லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக,
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், சர்வதேச சந்தையில் பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் அதிகரித்து வரும் பின்னணியில்,
உள்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, புறக்கோட்டை மொத்த சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் வழங்குவதற்குத் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ள 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களுள்
-பெரிய வெங்காயம்,
-வெள்ளைச் சீனி,
பருப்பு,
- தட்டப்பயறு,
கடலை,
- பாசிப்பயறு,
- நிலக்கடலை,
- கோதுமை மா,
- சிவப்பு அரிசி,
- சிவப்பு நாடு அரிசி,
- சம்பா அரிசி,
- வெள்ளை நாடு அரிசி,
- பொன்னி சம்பா அரிசி.
ஆகியன உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கப் பொறிமுறையை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்கும் முகமாக, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட பணிப்பாளர் சபையும் உயர்மட்ட நிர்வாகமும் விசேட கவனம் செலுத்தி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments