கட்டாயமாக்கப்படும் நடைமுறை...

கட்டாயமாக்கப்படும் நடைமுறை... 



கட்டாயமாக்கப்படும் நடைமுறை...


கட்டாயமாக்கப்படும் நடைமுறை...

2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது 2026 ஜூன் 3ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான திருத்தங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல், வணிகப் பதிவு, நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றுதல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு முக்கிய பரிவர்த்தனைகளுக்கு இனி வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 குறிப்பிட்ட சில மோட்டார் வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் இலாபம், இனிமேல் வரி விதிக்கப்படக்கூடிய வருமானமாகக் கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் கூட்டுப்பங்கான்மைகளுக்கான மூலதன இலாப வரி 15 சதவீதமாகவும்; அறக்கட்டளைகள், பரஸ்பர நிதியங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது.

 மாதத்திற்கு 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட சேவைக் கொடுப்பனவுகளுக்கான 5 சதவீதம் தடுத்து வைக்கப்படும் வரியின் வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூக ஊடக நிபுணர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஒளிப்பதிவாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோரும் இனி இந்த வரி வரம்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

 வரி செலுத்துவோர் இனி மதிப்பீட்டு வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. அவற்றுக்குப் பதிலாக, காலாண்டு வரி தவணைக்கட்டணங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் வரிப் பொறுப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும். குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆயுள் காப்புறுதி முதிர்வு, கொள்கை ஒப்படைப்பு அல்லது காப்புறுதிதாரரின் மரணத்தின் போது பெறப்படும் தொகைகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை 2024/25 வரி ஆண்டு வரையிலான தாமதக் கொடுப்பனவுகள் மற்றும் குறைவான வரிச் செலுத்தல்களுக்கான வட்டித் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனினும், நிலுவையிலுள்ள அசல் வரித்தொகை 2026 டிசம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.





டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு..

 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 அவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அதன் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன், கடந்த 6 மாத காலப்பகுதியில் 40,443 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய் வேகமாக பரவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு குழு தீர்மானித்துள்ளது.

 பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் 2026.06.12 கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 நாடு முழுவதிலும் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களில் 25.8 சதவீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன் காரணமாக, அந்தப் பகுதியை 'அதி அவதானம்' மிக்க மாவட்டமாக பெயரிட தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

 கடந்த காலங்களில் நிலவிய அதிக மழைவீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

 இம்முறை டெங்கு பரவலானது வீடுகளை விட, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் அதிகமாக பதிவாகியுள்ளமை விசேடமாக கண்டறியப்பட்டுள்ளது.

 இதன்படி, டெங்கு ஒழிப்பு வாரத்தில் பொது இடங்கள் மற்றும் வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான சிரமதான வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்தல், அதி அவதானம் மிக்க வீடுகளைப் பரிசோதித்தல் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய பின்னர் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

 

 

 

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் புதுப்பிப்பு...

 தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் நேற்று (13) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல் 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 அதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 களுத்துறை மாவட்டம்- பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை, நுவரெலியா மாவட்டம்- அம்பகமுவ,     இரத்தினபுரி மாவட்டம்- அயகம, பெல்மடுல்ல, கொடகவெல, எலபாத, கலவானை, இரத்தினபுரி மற்றும் நிவித்திகலை போன்ற பகுதிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 


 


இஸ்லாமிய தீவிரவாதிகளை சலே வழிநடத்தியுள்ளார்..!

 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் சதித்திட்ட அடிப்படையில் தொடர்புபட்டிருந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே,

 அதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளை வழிநடத்தியுள்ளமை விசாரணைகளில் தெளிவாக தெரியவந்துள்ளதாக,

 பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், குறிப்பிட்டார்.

 மேலும், இந்தத் தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், சுரேஷ் சலே என்பவரால் நீர்கொழும்பு பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களுக்கு,

 முஸ்லிம் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டு,

 அங்குள்ள மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 புலனாய்வுத் தகவல் வழங்குநர் ஒருவர் இந்தத் தாக்குதல் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெளிவுபடுத்தியிருந்த போதிலும்,

 அதற்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர்,

 அசாத் மௌலானா என்பவரும் பிரித்தானியாவின்சேனல் 4’ (Channel 4) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில்,

 இந்தத் தாக்குதலுடன் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

 அத்துடன், சத்தியாக்கிரகப் போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதங்கள் நடத்தப்படுவதைக் காரணம் காட்டி,

 இந்த விசாரணை நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

 அமைச்சுசார் அறிவிப்பின் கீழ் கருத்துக்களை முன்வைக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 




ஆப்கானிஸ்தான் '' அணியை வீழ்த்தி இலங்கை '' அணி இமாலய வெற்றி!

 ஆப்கானிஸ்தான் 'அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுகளால் இலங்கை '' அணி நேற்று (13) அபார வெற்றி பெற்றுள்ளது.

 ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

 இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் '' அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

 அவ்வணி சார்பில் ஹசன் இஷாகில் 46 ஓட்டங்களையும், பஹிர் ஷா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக குணசேகர திறம்படச் செயற்பட்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 வெற்றிக்காக 246 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது மழையினால் ஆட்டத்திற்குத் தடை ஏற்பட்டது.

 இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணியின் வெற்றி இலக்கு 41 ஓவர்களில் 231 ஓட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டது.

 இந்த சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை '' அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

 இலங்கை அணியின் வெற்றிக்குத் தூணாக விளங்கிய அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.

 

 

 

 

 

 

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 37 ஓட்டங்களால்  அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

 இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்கள் குவித்தது.

 தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், நடுத்தர வரிசையில் களம் புகுந்த கமில் மிஷார பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 61 ஓட்டங்களை விளாசினார். இறுதிப் பகுதியில் அதிரடியாக விளையாடிய முன்னாள் தலைவர் தசுன் ஷானக, வெறும் 24 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

 இவர்கள் இருவரும் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 100 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 195 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது

 இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி 18.1 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

 இலங்கை அணியின் பந்துவீச்சில் மிரட்டிய துஷ்மந்த சமீர 3.1 ஓவர்களில் வெறும் 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

 

 

 


ஸ்கொட்லாந்து அணி திரில் வெற்றி

 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குரூப் 'சி' பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹைட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

 போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. எனினும், ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் ஸ்கொட்லாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜான் மெக்கின் (John McGinn) ஒரு அற்புதமான கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

 அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் இறுதிவரை ஹைட்டி அணியினரால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

 இந்த வெற்றியின் மூலம் ஸ்கொட்லாந்து அணி 3 புள்ளிகளுடன் குரூப் 'சி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதே பிரிவில் நேற்று நடைபெற்ற பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான மற்றொரு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில்  முடிந்ததால், அவ்விரு அணிகளும் தலா 1 புள்ளியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த ஹைட்டி அணி எவ்வித புள்ளிகளுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.




கட்டாயமாக்கப்படும் நடைமுறை...




No comments

Theme images by fpm. Powered by Blogger.