உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை...
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை...

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை...
2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அதன்படி, தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் அடிப்படையில், உயர்தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், 2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கிடைக்கப்பெறுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து இம்முறை பரீட்சை ஆரம்பமாகும் நாள் வரையில் 4 மாதங்களும் 10 நாட்களும் இடைவெளி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தரமற்ற நிலக்கரி கப்பலால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுமா? :
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நிலக்கரி கப்பல் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அவசர கொள்முதல் அடிப்படையில், கொண்டுவரப்பட்ட ஐந்து கப்பல்களில் ஒரு கப்பலே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சரின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்பொன்ஸு தெரிவித்தார்.
குறித்த ஐந்து கப்பல் சரக்குகளும் இந்திய நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும், இந்த ஐந்து கப்பல்களில் ஒரு கப்பலில் கொண்டுவரப்பட்ட நிலக்கரிக்கான தரச்சான்றிதழ் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, அது திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பி அனுப்பப்பட்டுள்ள கப்பலுக்கான மாற்று நிலக்கரி கப்பலை, நாட்டுக்கு அனுப்பவுள்ளதாக குறித்த நிறுவனம் உறுதி வழங்கியுள்ளதாகவும், வலுசக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடல் சீற்றம் காரணமாக, குறித்த மாற்றுக் கப்பல், எதிர்வரும் செப்டம்பர் மாதம், முதல் வாரத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, 22 கப்பல்களிலிருந்து நிலக்கரிகள் , ஏற்கனவே வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.எம்.ஆர்.டி. அப்பொன்ஸு கூறினார்.
23 ஆவது கப்பலில் உள்ள நிலக்கரி நாளை இறக்கப்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சார உற்பத்தியைத் தடையின்றித் தொடரத் தேவையான குறைந்தபட்ச நிலக்கரி கையிருப்பை உறுதி செய்ய முடியும் என்றும், செப்டம்பர் மாதம் வரை அவசர மின் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்
நாட்டின் சில பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த பெரும்போக நெல் அறுவடைக்கு இதுவரை முறையான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் நெல்லின் விலை 120 ரூபாவாகக் காணப்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எப்பாவல பகுதியில் நேற்று(20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் வறட்சி நிலை ஏற்பட்டாலும் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மத்தியில், இரத்தினபுரி - கொடகவெல, ரன்வல பகுதி விவசாயிகள், இந்த முறை சிறுபோக நெற் பயிர்ச்செய்கையை ஆரம்பித்து ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகியும், பயிர்களுக்குத் தேவையான உரங்களை இதுவரை முறையாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், நெல் அறுவடைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முறையான விலை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட் -- 'View-once' வசதி!
பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தற்போது புகைப்படங்கள் (Photos) மற்றும் காணொளிகளை ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் அனுப்பப்படும் 'View-once' வசதியைப் போலவே, இனி சாதாரண குறுந்தகவல்களையும் (Text Messages) ஒருமுறை மட்டுமே படிக்கும் வகையில் அனுப்பும் புதிய முறையை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது.
பயனர்களின் தனியுரிமையைப் பேணவும், முக்கியமான தகவல்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காகவுமே இந்த 'View-once text' முறை கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு வசதியானது, தற்போது முதற்கட்டமாக ஒரு சில ஐபோன் (iPhone) பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் (Beta Version) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததும், அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் இந்த புதிய அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைபவ் சூர்யவன்சி உலக சாதனை
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து இந்திய 'ஏ' அணியின் வைபவ் சூர்யவன்சி இன்று (21) உலக சாதனை படைத்துள்ளார்.
இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்று வரும் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதில் வெறும் 11 பந்துகளில் அவர் அரைச்சதம் கடந்தார்.
அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 5 ஆறு ஓட்டங்களும், 5 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.
எவ்வாறாயினும், 29 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் சஹான் ஆராச்சிகேவின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு இடையிலான முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி தற்போது தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 45,756 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதுடன், நாடு முழுவதும் டெங்கு பரவும் அபாயம் கொண்ட சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
பாடசாலைகளில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நடப்பு ஆண்டில் இதுவரை 633 பாடசாலைகள் விசேட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுகளின் போது, 263 பாடசாலை வளாகங்களில் நுளம்புக் குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாடசாலைகள் தவிர, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவையும் நுளம்புகள் பெருகும் பொதுவான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை...
No comments