க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்...




க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்...




க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்...

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் அதிபர் மூலமாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உரிய அறிவுறுத்தல்களின்படி இணையவழியாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

 

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ அல்லது https://www.onlineexams.lk/eic ஆகியவற்றுக்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

ஜூலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இப்பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியாது என்பதுடன், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.








ஜூலை 7 முதல் 10 வரை நாடாளுமன்ற அமர்வு: நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் தீர்மானம்!


நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு:

 

புதன்கிழமை தவிர்ந்த ஏனைய அமர்வு நாட்களில் முற்பகல் 10:00 மணி முதல் 11:30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் மற்றும் நிலையியற் கட்டளை வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமையன்று பிரதமரிடமிருந்தான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தொல்பொருட்கள் கட்டளைச்சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான விதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

 

கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகள் சட்டம், மோட்டார் வாகன ஒழுங்குவிதிகள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, மாலை வேளையில் புலம்பெயர் தொழிலாளர்களின் சவால்கள் குறித்த எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.

 

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் தொடர்பான மூன்று முக்கிய சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

 

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான உரிமம், பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பு, பாடசாலைகளில் ஆரோக்கியமற்ற உணவு விற்பனைத் தடை மற்றும் யாழ்ப்பாண அபிவிருத்தி உள்ளிட்ட தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

 

 

 

 

 

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

பிரபல பாதாள உலகக் குற்றவாளிக்கு உதவ 12 கோடி ரூபாய் கையூட்டல் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

தொழில்முறை குற்றவாளி ஒருவருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் கையூட்டலாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவரும் டுபாய்க்குச் சென்று இந்த பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

 

இந்த நிலையில் சந்தேகநபர்கள் இந்த கையூட்டல் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக டுபாய் சென்றிருந்த காலப்பகுதியில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயில் தங்கியிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதன்படி, இந்த கையூட்டல் சம்பவத்துடன் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷ சம்பந்தப்பெரும தெரிவித்துள்ளார்.

 

குடிவரவு குடியகல்வு திணைக்களத் தரவுகளின்படி, விஜயதாச ராஜபக்ஷ 21-03-2023 முதல் 28-03-2023 வரை டுபாயில் தங்கியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

அத்துடன், லசந்த மஞ்சுள சில்வா எனப்படும் நபருக்கு மீள வழங்கப்பட்டுள்ள 200 இலட்சம் ரூபாய் பணம், நுகேகொட, நாவல வீதியில் உள்ள விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வைத்தே வழங்கப்பட்டுள்ளது.

 

அந்த வீடு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என்பதும் விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 


தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த இலங்கை துணை உயர்ஸ்தானிகர்!

 

சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் , தமிழக முதலமைச்சர் விஜய்யை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

 

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர்,

 

இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், இரு நாட்டு மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

 

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்தத் தொடர்புகளைத் தொடர்ந்து பேணி வளர்ப்பதில் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதி உயர் ஆணையர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

  

 


 


சுங்கத் திணைக்களம் முதல் 6 மாத வருவாய் இலக்கை கடந்தது


இலங்கை சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1373.7 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.

 

வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக (ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதி) நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட இது கூடுதலானது என சுங்க ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்க பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

முதல் 6 மாதங்களுக்கு சுங்கத் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கு 1,060.5 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், திணைக்களம் அந்த இலக்கைத் தாண்டி 313 பில்லியன் ரூபா மேலதிக வருவாயை ஈட்டியுள்ளது.

 

இவ்வருடத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த வருமான இலக்கு 2,206 பில்லியன் ரூபாவாகும். இந்நிலைமையின் கீழ், கடந்த வருடம் ஈட்டப்பட்ட சாதனை அளவிலான 2.5 ட்ரில்லியன் ரூபா ஒட்டுமொத்த வருமானத்தையும் இவ்வருடத்தில் தாண்டிச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஊடகப் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

ஜூலை மாதத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வருமான இலக்கு 192.4 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன், அதன் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 31 பில்லியன் ரூபா வருவாயை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.

 

எவ்வாறாயினும், மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, அத்துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் சற்றுக் குறைவு காணப்படுவதாக சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 


 

 

டெங்கு பரவல் அதிகரித்தால் பல்கலைக்கழகங்கள் மூடப்படுமா


பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

டெங்கு நோயாளர்கள் பதிவானதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

"தற்போது தேசிய மட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அதேபோல், அதிக அவதானம் மிக்க பல மாவட்டங்களும் பிராந்தியங்களும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

 

கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை இந்த டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

உயர் கல்வி நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாகப் பதிவானால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை மூட வேண்டியேற்படும். கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளமைக்கும் அதுவே காரணமாகும்.

 

அதேபோன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உரிய வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

 

நாங்கள் கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். அதற்கமைய, அதனை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

 

 

 

 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்...

 

 

 

 

No comments

Theme images by fpm. Powered by Blogger.