பரீட்சையை ஒத்திவைக்க கோரி மனு...

பரீட்சையை ஒத்திவைக்க கோரி மனு...

 


பரீட்சையை ஒத்திவைக்க கோரி மனு...




பரீட்சையை ஒத்திவைக்க கோரி மனு...


எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் (16.07.2026) தெரிவித்துள்ளது.

 

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

இதன்படி, மனுவை முழுமையான விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது

 

 

 

 

 

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் - வரவு செலவுத் திட்டத்தில் இணைக்க உத்தரவு

 

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு மற்றும் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கலந்துரையாடல் (16.07.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

தற்போது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றாக விளங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, மிகவும் முறையான ஓய்வூதியத் திட்டமொன்றின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

சுற்றுலாத் துறை சார்ந்த முன்மொழிவுகளை மாவட்ட மட்டத்தில் மிகவும் செயற்திறனுடன் முன்னெடுப்பதற்காக, அந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களுக்கான நிதி இருப்புக்கு நேரடியாக வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இதன் மூலம், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலாத் குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடன் சம்பந்தப்பட்ட சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாகச் செயல்படுவதற்குப் பதிலாக, ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயல்படுவதன் மூலம் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

திட்டங்களைச் செயல்படுத்தும்போது கொள்முதல் செயல்முறையில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக எழுந்துள்ள சிக்கல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான தீர்வாக, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலிருந்தே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்கக் கூடிய வகையில் நிதி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

 

மேலும், சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள நிர்மாணத்துறை போன்ற தனித்துவமான கொள்முதல் தேவைகளுக்காக தனியான தலையீட்டை மேற்கொண்டு, அந்தச் செயல்முறையை விரைவுபடுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

 

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக எதிர்வரும் காலத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு போன்ற திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், தூதரக சேவைகளை மேலும் செயற்திறனுள்ளதாக மாற்றுவதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தொடர்ந்து திட்டங்களை தயாரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் குறித்த முறையான அறிக்கை கடந்த அரசாங்கங்களின் கீழ் தயாரிக்கப்படவில்லை என்பது இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், அது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

 

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத் துறைக்கு 8 இலட்சம் மனித வளம் தேவைப்படும் என இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக தற்போது ஹோட்டல் பாடசாலைகள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே, கபில ஜனக பண்டார, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

 

 




NIC இன்றியும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்..!

 

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு,

 

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன்,

 

எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு,

 

விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி,

 

விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர்,

 

தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாமையானது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும்.

 

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

 

 வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனைக்கு தடைவிதிமீறினால் சிறை அல்லது அபராதம்!

 

இலங்கையில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக இனி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார். 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டம் மற்றும் 2016 வர்த்தமானி ஆகியவற்றின் கீழ் இத்தடை அமல்படுத்தப்படவுள்ளது.

 

நாட்டில் ஆண்டுதோறும் 1,750 முதல் 1,900 வரையிலான வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாவதால், மக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இதுவரை கலாசாரக் காரணங்களுக்காக விழிப்புணர்வு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இனி விதிமீறுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய நேற்று (16) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 73,455 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

அத்துடன் 50 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,025 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,700 ஆக காணப்படுகின்றது.

 

மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15,341 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 14,625 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 16 நாட்களில் 18,076 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,538 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

 

 



பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை - சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

 

நுவரெலியாவில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நேற்று (16) சிறைச்சாலை அதிகாரிகளினால் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் இந்த வழக்கு பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, சந்தேகநபருக்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குண்டசாலை பிரதேச சபையின் சாரதியும், மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகரும் அடங்குகின்றனர்.

 

 

 

 

 

 

 எரிபொருள் QR முறைமை நீக்கப்படுமா? வௌியானது புதிய அறிவிப்பு

 

எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

 

உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் இல்லாமை காரணமாக, எரிபொருள் QR நடைமுறையை மேலும் தொடரவுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

 

QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மாத்திரமன்றி டொலர் இருப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 

மீண்டும் மத்திய கிழக்கில் யுத்த நிலைமை தீவிரமடைந்தால் நாட்டில் எரிபொருள் வரிசைகள் ஏற்படுவதையும், அதன் மூலம் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதையும் தடுப்பதற்காக QR நடைமுறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.

 

அத்துடன், மீண்டும் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக நாட்டின் எரிபொருள் விநியோகக் கட்டமைப்புக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், எரிபொருள் சந்தையில் விலைகள் மீண்டும் அதிகரிக்குமா என்பது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.



பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு...



No comments

Theme images by fpm. Powered by Blogger.