அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

அடுத்தடுத்து சக்திவாய்ந்த

நிலநடுக்கம் -  மக்கள் அச்சம்!

 



அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் -  மக்கள் அச்சம்!




அடுத்தடுத்து சக்திவாய்ந்த

நிலநடுக்கம் -  மக்கள் அச்சம்!


சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தில், வெறும் 18 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.

 

இன்று (28) அதிகாலை 11:16 மணி மற்றும் 11:34 மணி வரை நிலநடுக்கமானியில் முறையே 5.7 மற்றும் 5.8 ரிச்டர் அளவுகளாகப் பதிவாகியுள்ளன.

 

இது பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இந்த அதிர்வுகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.

 

இந்நிலையில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கிங்ஹாய் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், அண்டை மாகாணமான கான்சுவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லான்சூ வரையிலும் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.

 

நிலநடுக்கத்தின் போது வீடுகளுக்குள் இருந்த விளக்குகள் குலுங்கியதாகவும், மலைப் பகுதியிலுள்ள செங்குத்துப் பாறைகளிலிருந்து புழுதி மேகங்கள் கிளம்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் பாதுகாப்பிற்காகத் தஞ்சம் அடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது






டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 நெருங்கியது

 

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய, நேற்று (27) வரையில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 82,838 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

ஜூலை மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 27,464 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

தற்போது அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகி வருகின்றனர். இது சதவீத அடிப்படையில் 21.25% ஆகும்.

 

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 16,457 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,685 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

இன்றைய தின நிலவரப்படி 61 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இது சதவீத அடிப்படையில் 0.07% ஆகும்.

 

 

 

 

 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

 

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஐபிஎல் தொடரின் போது உபாதைக்கு உள்ளான ரவீந்திர ஜடேஜா முழுக் குணமடைந்து மீண்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில், உபாதை காரணமாக விலகிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான சாராந் ஜெயின் முதன்முறையாக இந்திய குழாமுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

அதன்படி, சுப்மன் கில் தலைமையிலான இந்திய குழாமில், துணைத் தலைவராக கே.எல். ராகுலும் செயற்படவுள்ளதுடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவதத் படிக்கல் மற்றும் சாராந் ஜெயின் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.

 

இதேவேளை, சாய் சுதர்சன் மற்றும் பும்ரா ஆகியோரின் பங்கேற்பு உடற்தகுதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தெரிவித்துள்ளது.

 

எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகும் நான்கு நாள் பயிற்சிப் போட்டியுடன் இந்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகவுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, முதல் டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15 முதல் 19 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23 முதல் 27 வரையிலும் நடைபெறவுள்ளன.

 

 

 

 

கம்பளையில் 20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது

 

20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பணத்தைக் கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.

 

பேராதனைப் போதனா மருத்துவமனைக்கு, 2027 ஆம் ஆண்டுக்காக உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு, தமது தந்தை மற்றும் மாமனாரின் பெயர்களில் விலைமனு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காகவும், அதன் மூலம் போட்டித்தன்மையைத் தவிர்ப்பதற்காகவும் ஆரம்பத்தில் 30 இலட்சம் ரூபாவை முதலாவது சந்தேக நபர், முறைப்பாட்டாளரிடம் கோரியுள்ளார்.

 

பின்னர் இந்த தொகை 25 இலட்சம் ரூபாவாகக் குறைக்கப்பட்டு, இறுதியாக 20 இலட்சம் ரூபாய் கையூட்டலாக பெறப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், நேற்று காலை கம்பளை அஞ்சல் நிலைய வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து கையூட்டல் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் கம்பளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவரும் சுமார் 30 நிமிட இடைவெளிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 


 

குழந்தை பிறந்தால் தந்தையருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்புத் திட்டம்!

 

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுப்புத் திட்டம்' பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இதுவரை சுமார் 75,000 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஒப்புதல் பெற்றுள்ள நிலையில், இந்நடவடிக்கை பணிபுரியும் குடும்பங்களுக்கும், குறிப்பாகப் புதிய தந்தையர்களுக்கும் பெரும் நன்மையை அளிப்பதாக 'பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம்' (CEPR) தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த விடுப்புச் சட்டம் இல்லாத சூழலில், கலிஃபோர்னியாவைத் தொடர்ந்து மின்னிசோட்டா உட்பட 15 மாநிலங்கள் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

 

இத்திட்டத்தின் மூலம் புதிய தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் தொடக்கக் காலத்தில் நேரத்தைச் செலவிட முடிகிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், மனநல ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

 

மின்னிசோட்டாவில் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 36% பேர் ஆண்கள் என்பதும், பாதிக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு 78,000 டொலருக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இக்கொள்கை வேலைத்தளங்களில் ஊழியர்களின் உற்பத்தித்திறனையும் மனஉறுதியையும் அதிகரிப்பதோடு, பாலினச் சமத்துவத்தையும் ஊக்குவிக்கிறது.

 

அமெரிக்க மக்களில் 76% பேர் இத்தகைய விடுப்புத் திட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 


இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு! வெளிவிவகார அமைச்சர் தகவல்

 

இந்த ஆண்டுக்குள் 10,000 இலங்கைத் தொழிலாளர்களை இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள 164 தொழிலாளர்களுக்குப் பயண அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை அறிவித்தார்.

 

இந்த வேலைவாய்ப்புத் திட்டம் முறையான மற்றும் வெளிப்படைத்தன்மையான நடைமுறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

நடப்பு ஆண்டில் இதுவரை 2,500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 6,500 தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அத்துடன், புதிய துறை ஒன்றில் மேலும் 1,000 பணியிடங்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 10,000 தொழிலாளர்கள் என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

 

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்வதன் மூலம், இலங்கையர்கள் குறைந்த செலவிலும் நம்பகத்தன்மையுடனும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் வலியுறுத்தினார்.

 


 அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் -  மக்கள் அச்சம்!


No comments

Theme images by fpm. Powered by Blogger.