2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில்... பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!

2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில்... பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!

 


2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில்... பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!



2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில்... பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் முதிர்ந்த வயதில் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், 'டிமென்ஷியா' (மறதி நோய்) பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UK) சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சர்க்கரை நுகர்வு திடீரென அதிகரித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 செப்டம்பர் 1953-இல் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ஒருவர் தினமும் உட்கொள்ளும் சர்க்கரையின் சராசரி அளவு சுமார் 41 கிராமில் இருந்து 80 கிராமாக உயர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 'யூகே பயோபேங்க்' (UK Biobank) திட்டத்தில் பங்கேற்ற சுமார் 65,000 பேரின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டது.

 இதில், இரண்டு வயதுக்கு முன்பாக சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்ந்தவர்களுக்கு டிமென்ஷியா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு இந்த நோய் கண்டறியப்படுவது சராசரியாக இரண்டரை ஆண்டுகள் தாமதமாகியுள்ளது.

 வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது, நீண்ட கால அடிப்படையில் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் என்பதை இந்த முடிவுகள் உணர்த்துவதாக ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த ஜியாஜென் செங் (Jiazhen Zheng) தெரிவித்துள்ளார்.

 இருப்பினும், இந்தத் தொடர்பை முழுமையாக உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 இதேவேளையில், இது ஒரு அவதானிப்பு ஆய்வு (Observational study) மட்டுமே என்பதால், குறைந்த அளவில் சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக டிமென்ஷியாவைத் தடுக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 மேலும், ஆய்வில் பங்கேற்றவர்கள் உண்மையில் எவ்வளவு சர்க்கரை உட்கொண்டார்கள் என்ற துல்லியமான விவரம் அறியப்படவில்லை என்றும், அவர்களின் பிறந்த காலத்தையும் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாட்டு முறையையும் மட்டுமே விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

 1940 மற்றும் 1950-களில் பிறந்தவர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வின் முடிவுகளை, இன்றைய காலகட்டக் குழந்தைகளுக்கு நேரடியாகப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 இருப்பினும், மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கச் சீரான உணவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களும் மிக முக்கியம் என்றும், நல்ல பழக்கங்களைத் தொடங்குவதற்கு எந்த வயதும் தாமதமில்லை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

 

 

 

கொசுக்களால் சீரழியும் உயிர்கள்... 62 ஆக உயர்ந்தது டெங்கு மரணப் பட்டியல்!

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) வரை பதிவாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 29,350 ஆகும்.

 இவ்வாண்டின் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 44,829 ஆகும்.

 தென் மாகாணத்தில் 12,738 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 7,370 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

 

 


 

 

வாகனங்களை செலுத்தும் இளம் வயதினர் குறித்து காவல்துறை எச்சரிக்கை

இளம் வயதினரிடம் வாகனங்களை ஒப்படைக்கும் போது பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இலங்கை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

 அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டம் காரணமாக அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இளைஞர்களை உள்ளடக்கியவையாக இருப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் உதவி அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 இளம் வயதினருக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோர், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டத்தை சட்டங்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 மேலும், இவ்விடயத்தில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

பிறரின் பயணப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் - சுங்கத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 வானூர்தி பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம், வானூர்தி நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

 பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்காக சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், பயணப் பையை தாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 அத்துடன், இலவச வானூர்தி பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், எந்தச் சூழலிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது

 

 

 

 

 

பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் சிறுத்தைகள் நடமாடும் அபாயம் - மாணவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவிப்பு

ஹந்தான மலைத்தொடரில் இருந்து இரவு நேரங்களில் பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் வரும் அபாயம் நிலவுவதால், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 கால்நடை மருத்துவ பீடத்தினால் நடத்தப்படும் கால்நடை பண்ணையில் இருந்த கன்று ஒன்று நேற்று முன்தினம் அதிகாலையில் சிறுத்தை ஒன்றால் கொல்லப்பட்டதுடன், அதன் உடலின் ஒரு பகுதியை சிறுத்தை உட்கொண்டுள்ளது. CCTV காட்சிகள் மூலம் இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாலை நேரத்திற்கு பிறகு பல்கலைக்கழகத்திற்குள் நடமாடும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பல்கலைக்கழக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

 

நாட்டில் நிலவும் வறட்சி: நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!

 நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான மற்றும் வறட்சியான வானிலை நீடித்து வருவதால், பொதுமக்களை நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளது.

 கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார, நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்கனவே கடுமையான நீர் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

 நாட்டின் பிரதான 73 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது சுமார் 40 வீத நீர் மட்டுமே எஞ்சியுள்ளது.

 எதிர்வரும் எல் நினோ காலநிலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாகும் வீதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இந்தநிலையில், மழைபெய்யும் வரை நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களில் உள்ள நீரை வீணாக்காமல் மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார வலியுறுத்தியுள்ளார்.

 இதற்கிடையில்,வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து எல் நினோ நிலையை எதிர்கொள்ள ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

 எல் நினோ என்பது மழை முற்றிலும் பெய்யாது என்பதைக் குறிக்காது. மாறாக மழை வீழ்ச்சி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

 அத்துடன், வெப்பநிலை உயர்வால் ஆவியாதல் வீதம் அதிகரிக்கும் என்பதால் நீர் முகாமைத்துவம் மிக முக்கியமானது என்று அவர் குறிப்;பிட்டுள்ளார்.

 இதேவேளை பெரும்போகப் பயிர்ச்செய்கையை எதிர்வரும் அக்டோபர் 1 முதல் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பாசன அமைப்புகள் மற்றும் விவசாய மண்டலங்கள் முழுவதும் ஒரே நேரத்தில் பயிர்ச்செய்கையைத் தொடங்குவது கணிசமான அளவு நீரைச் சேமிக்க உதவும் என்ற நோக்கத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதேநேரம், வறட்சியான வானிலையைச் சமாளிக்கக் குடிநீர் மற்றும் மின்சார விரையத்தைக் குறைக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

 

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இலங்கையில் தாய்ப்பால் வாரம் பிரகடனம்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நாட்டில் 'தாய்ப்பால் வாரம்' பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப நலப் பணியகத்தின் குழந்தை போசாக்குப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிரண்யா ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

 சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது குறித்த தெளிவை வழங்குவதே இந்த வாரத்தின் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில்... பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!


No comments

Theme images by fpm. Powered by Blogger.