இளைஞர்கள் மத்தியில் ... நோய்கள் அதிகரிப்பு...

இளைஞர்கள் மத்தியில் ... நோய்கள்

அதிகரிப்பு...

 



இளைஞர்கள் மத்தியில் ... நோய்கள் அதிகரிப்பு...




இளைஞர்கள் மத்தியில் ... நோய்கள்

அதிகரிப்பு...


இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.

 

இளம் தலைமுறையினர் செயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் கூறுகிறார்.

 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க இதனைத் தெரிவித்தார்.

 

"நமது குடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு சிக்கலான தொடர்பு உள்ளது. அதை நாம் 'குடல்-மூளை அச்சு' (gut-brain axis) என்று கூறுகிறோம்.

 

அதாவது நாம் அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது பதற்றத்தில் இருந்தாலோ, அது தானாகவே நமது குடலிலும் உணரப்படும்.

 

இந்தச் சிக்கலான செயல்முறை மற்றும் நாம் உட்கொள்ளும் உணவுப் பிரச்சனைகள் ஆகியவற்றின் சேர்க்கையால் IBS (Irritable Bowel Syndrome - எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி) நிலை ஏற்படலாம்.

 

இந்த நிலை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது வாழ்க்கை முறை இப்போது மாறியுள்ளது.

 

உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளன. காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவு முறையிலிருந்து பல இளைஞர்கள் விலகி, இலகுவாகக் கிடைப்பதால் செயற்கை உணவுகளை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன்.

 

இதன் காரணமாக, அவர்களிடம் தற்போது IBS நிலை அதிகமாகக் காணப்படுகிறது." என்றார்.




டெங்கு மரணங்கள் 68ஆக உயர்வு: 91,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

 

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

 

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

 

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98% ஆனோர், அதாவது 48,244 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

 

மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதோடு, அங்கு 19,406 நோயாளர்கள் (21.31%) பதிவாகியுள்ளனர்.

 

கொழும்பு மாவட்டத்தில் 18,101 நோயாளர்களும் (19.88%), கண்டி மாவட்டத்தில் 6,491 நோயாளர்களும் (7.13%) இனங்காணப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,971 ஆகும்.

 

இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 5,714 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

எவ்வாறாயினும், 119 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து டெங்கு அதிஅபாய வலயங்களாகச் சுகாதாரப் பிரிவினரால் பெயரிடப்பட்டுள்ளன.

 

 

 

நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : முதலிடத்தில் எந்த மாவட்டம் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

 

இலங்கையில் ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 277 ரூபாயால் அதிகரித்துள்ளது.

 

ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாதமொன்றுக்கு தேவையான குறைந்தபட்ச தொகையே உத்தியோகபூர்வ வறுமைக் கோடாக அடையாளப்படுத்தப்படுகிறது.

 

அதன்படி, ஜூன் மாதத்தில் கொழும்பு மாவட்டத்தின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 18,973 ரூபாயாகவும், கம்பஹா மாவட்டத்தில் 18,876 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

 

அதேவேளை, குறைந்தபட்ச உத்தியோகபூர்வ வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு அது 16,821 ரூபாயாக உள்ளது.

 

தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 18,500 ரூபாயாகவும், யாழ்ப்பாணத்தில் 17,169 ரூபாயாகவும், மன்னார் மாவட்டத்தில் 18,019 ரூபாயாகவும் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு பதிவாகியுள்ளது.

 

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,688 ரூபாயாகவும், கிளிநொச்சியில் 16,996 ரூபாயாகவும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17,671 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2026 ஜூலை மாதத்திற்கான பெறப்பட்ட பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

வரி செலுத்தத் தவறுதல் அல்லது தாமதித்து செலுத்துதலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

 

காசோலை (Cheque), வங்கி வரைவோலை (Bank draft) அல்லது கொடுப்பனவு உத்தரவு (Payment order) மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் கிடைப்பதும் தாமதமான கொடுப்பனவாகவே கருதப்படும்.

 

அத்துடன், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகளை ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

 

அந்த அறிக்கைகள் இணையவழி (Online) முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, பிடித்தம் செய்யப்பட்ட வரிகளை (Withholding Tax) ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவோரைக் கேட்டுக்கொள்கிறது.

 

மேலும், ஜூலை மாதத்திற்குரிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் நினைவூட்டுகிறது.

 

 

 

இலங்கை பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு

 

இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரை கூட்டம் இடம்பெற்றிருந்தது.

 

இந்நிகழ்வில் தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் உரையாற்றுகையில், இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். கடந்தாண்டு சுற்றுலா வந்த 2.5 கோடி பேரில் 33 சதவீதம் பேர் இந்தியர்கள். வரும் 2030 க்குள் இலங்கையின் சுற்றுலா பயணிகள் 5 மில்லியனாக அதிகரிக்கும்.

 

இலங்கை பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா உதவுகிறது. இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சிறப்பு பொருளாதார உதவிகளை செய்துள்ளார். இந்தியாவில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிலம், பத்தாண்டு வரிவிலக்கு, இயந்திர தளவாட சலுகைகளை அளிக்கிறோம்.

 

ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும் இலங்கை அரசு தருகிறது. இலங்கை நிர்வாகம் தொழில் வளர்ச்சிக்காக நிலவளத்தையும் தருகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் 800 மில்லியன் டொலர் பால்மா நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

 

அடுத்து மருந்து வகைகளை ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. அவற்றை அங்கு உற்பத்தி செய்யலாம். வரியில்லா வர்த்தக சேவை மூலம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு ஒரு கேட்வே போல இலங்கை அமைந்துள்ளது.

 

இந்தியாவின் 5400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனையாகிறது. இதுபோல வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ளது.

 

இந்தியாவில் இறக்குமதி வரிவிதிப்பு 22 முதல் 40 சதவீதம் வரி உள்ளது. அதேசமயம் இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது எனக் கூறினார்.

 

  

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செல்வோருக்கு அவசர எச்சரிக்கை

 

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர் இன்று (13.08.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

 

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைதாகியிருந்தனர்

 

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



இளைஞர்கள் மத்தியில் ... நோய்கள் அதிகரிப்பு...




No comments

Theme images by fpm. Powered by Blogger.