க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 7 பாடங்கள்...

க.பொ.த. சாதாரண தரப்

 பரீட்சையில் 7 பாடங்கள்



க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 7 பாடங்கள்...



 

க.பொ.த. சாதாரண தரப்

 பரீட்சையில் 7 பாடங்கள்


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும்,


10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும்,

 

12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

 

2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள்,

 

ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும்,

 

10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும்,

 

12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

 

முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,

 

முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல்,

 

ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.

 



நாய்களுக்கு ஆண்டுதோறும்

 தடுப்பூசி, பதிவு கட்டாயம்…

 

நாட்டில் வெறிநோயை முற்றிலும் ஒழிப்பதையும், நாய் தொகையைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

இந்த புதிய சட்டத்தின் மூலம் தற்போதைய விசர்நாய் கடி ஒழிப்பு அவசரச்சட்டம் மற்றும் நாய் பதிவு அவசரச்சட்டம் ஆகியவை இரத்து செய்யப்பட்டு, புதிய சட்டக் கட்டமைப்பு அமுலுக்கு வரும்.

 

06 வாரங்களுக்கு மேற்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள், தங்கள் நாய்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை விசர்நாய் கடி தடுப்பூசி போடுவதையும்,

 

சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தில் பதிவு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

 

கட்டணம் செலுத்தி பதிவு செய்த பின், உள்ளூராட்சி சபையில் பதிவு எண் மற்றும் சான்றிதழை வழங்கும்.

 

அதிகாரம் பெற்ற அதிகாரி கேட்கும்போது செல்லுபடியாகும் தடுப்பூசி அல்லது பதிவு சான்றிதழைக் காட்டத் தவறினால்,

14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

 

தகுந்த காரணம் இருந்தால் மேலும் 14 நாட்கள் வழங்கப்படும்.

 

குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றாவிட்டால், பதிவு கட்டணத்துடன் ரூ. 2,000 தண்டப்பணம் விதிக்கப்படும்.

 

உள்ளூராட்சி சபைகள் விசர்நாய்களைப் பிடித்து கருத்தடை/ஸ்டெர்லைசேஷன் செய்து, அவை குணமடைந்த பிறகு பிடித்த இடத்திலேயே மீண்டும் கொண்டு போய் விட வேண்டும்.

 

வர்த்தக ரீதியாக நாய்களை இனப்பெருக்கம் செய்யும் மையங்கள் உள்ளூராட்சி சபைகளிடம் உரிமம் பெற வேண்டும்.

 

விதியை மீறினால் ரூ. 10,000 வரை தண்டப்பணம், 2 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

பொது இடங்களில் நாய்களைக் கைவிட்டால் ரூ. 10,000 வரை தண்டப்பணம், 3 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கும்.

 

நாய்கள் நபர்களையோ அல்லது பிற விலங்குகளையோ தாக்கினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் காயங்களுக்கு நாய் உரிமையாளரே சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டும்.

 

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

 

இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு முழுமையாக அமுலுக்கு வரும்.

 

 

 

மகளிர் ஆசிய கிண்ணத்தை

 கைப்பற்றியது இந்தியா

 

மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி கிண்ணத்தை தம்வசமாக்கியுள்ளது.

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி டுபாயில்

(13-09-2026) இடம்பெற்றது.

 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

 

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

 

ஆரம்ப துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய சுமிர்த்தி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிவிரைவான ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுசேர்த்தனர்.

 

ஷபாலி வர்மா 68 ஓட்டங்களையும், சுமிர்த்தி மந்தனா 59 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றனர்.

 

அதன்பிறகு ஆடுகளம் வந்தவர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை.

 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் பின்னர் இந்திய ஓட்ட எண்ணிக்கையை இலங்கை அணி வெகுவாக கட்டுப்படுத்தினர்.

 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மிதாலி அயோதா, சமதி அத்தபத்து, சமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

 

இந்நிலையில் 184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

 

இதன் மூலம் 8 வது தடவையாக இந்தியா அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

உலக சந்தையில் மீண்டும்

 அதிகரித்த கச்சா எண்ணெய்

 விலை…

 

உலக சந்தையில் மீண்டும் (14-09-2026) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

 

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீதான புதிய ஹூதி தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீதான ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு சடுதியாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

 

அதற்கமைய ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் 3.03% உயர்ந்து பீப்பாய் ஒன்று 107.51 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

 

அதேநேரம் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.72% உயர்ந்து 102.08 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

 

ஈராக்கில் இருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால்,

 

விநியோகத்திற்கான அபாயங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இன்று எண்ணெய் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து சவூதி அரேபியா தனது ஏற்றுமதியை மாற்று வழியில் அனுப்ப உதவிய இந்த எண்ணெய் குழாயின் இழப்பு, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% வரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 


 

இலங்கை காதலியைப் பார்க்க

 இந்தியாவிலிருந்து படகில் வந்த…


முகனூலில் அறிமுகமான இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன் (காதலன்) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

 

வரப் பணமில்லாமல் படகோட்டிக்கு தங்கச் சங்கிலியைக் கொடுத்துள்ள சிறுவன்,

 

ரானேஷ்வரன் பகுதியில் இருந்து 280 ருபா இந்திய பணத்துடன் இலன்கை வந்துள்ளார்.

 

சிறுவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில்,

 

தலைமன்னார் நீதிமன்றம் குறித்த சிறுவனை சிறுவர்கள் காப்பாகத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

 

 

15 வயது சிறுமிக்கு பாலியல்

 தொல்லை…

 

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

சந்தேகநபர் திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதனையடுத்து, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றி பரிசோதித்துள்ளனர். அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி,

 

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலூகா பாலிபான தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 7 பாடங்கள்...


No comments

Theme images by fpm. Powered by Blogger.