பல்கலைக்கழக மாணவி பரிதாபகரமாக...

பல்கலைக்கழக மாணவி பரிதாபகரமாக...



பல்கலைக்கழக மாணவி பரிதாபகரமாக...



பல்கலைக்கழக மாணவி பரிதாபகரமாக...


அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில்,

 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி உயிரிழந்துள்ளார்.

 

நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

 

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு,

 

வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இச் சோக விபத்து நேர்ந்துள்ளது.

 

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை பின் சக்கரத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்குண்டதால்,

 

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்,

 

தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

உயிரிழந்த மாணவிக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் அடங்குவதுடன்,

 

அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இச் சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன்,

 

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

 

அத்துடன் பிரேத பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு,

 

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 




கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு…

 

ஈஸ்டர் தின பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு,

 

இன்றைய தினம் (22ஆம் திகதி) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது.

 

ஆரம்பத்தில் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

 

அவர்களில் 17ஆவது பிரதிவாதி சிறையில் இருந்தபோது உயிரிழந்தார்.

 

அதனையடுத்து, 24 பேருக்கு எதிராக வழக்கு நடைபெற்றது.

 

இவர்களுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகளை சட்ட மா அதிபர் தாக்கல் செய்தார்.

 

அவற்றில் - ஈஸ்டர் தின தாக்குதல்களை நடத்த சதி செய்தமை, தாக்குதல்களுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கியமை,

 

தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு ஆதரவளித்தமை முக்கியமான குற்றச்சாட்டுகளாகும்.

 

சந்தேக நபர்களில் நௌபர் மௌலவி என அழைக்கப்படும் மொஹமட் நௌபர்,

 

'கபூர் மாமா' என அழைக்கப்படும் ஆதம் லெப்பை மற்றும் மில்ஹான் ஆகியோர் முக்கியமானவர்களாவர்.

 

இந்த வழக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நீடித்தது.

 

அரச தரப்பு சாட்சியங்கள் 2022 ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்கி 2026 ஓகஸ்ட் 13ஆம் திகதி நிறைவடைந்தன.

 

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

 

அவை : -

- 10 ஒப்புதல் வாக்குமூலங்கள்

- 2,076 வழக்குச் சான்றுப் பொருட்கள்

- வெடிபொருட்கள்

- குண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள்

- கத்திகள்

- துப்பாக்கிகள்

- அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள்

- DNA அறிக்கைகள்

- சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகள் ஆகும்.

 

இந்த வழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர், பொலிஸாரிடம் வழங்கிய 10 ஒப்புதல் வாக்குமூலங்களை, சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதித்தது.

 

இவை வழக்கின் முக்கிய சான்றுகளாக அரச தரப்பால் முன்வைக்கப்பட்டன.

 

அரச தரப்பு சாட்சியங்களை முடித்த பின்னர், பிரதிவாதிகளின் பாதுகாப்புத் தரப்புச் சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்கள் முன்வைக்கப்பட்டன.

 

சந்தேக நபர்களில் 20 பேர் தமிழில் வாக்குமூலமளித்தனர்.

 

இன்றைய தீர்ப்பை வழங்கவுள்ள மூவரடங்கிய Trial-at-Bar அமர்வில்,

 

நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க,

 

ராமநாதன் கண்ணன்,

 

சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் உள்ளனர்.

 

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் - ஒரு மண்ணளவு கூட தொடர்புபட்டவர்களும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

 

அந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

 

மேலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுதன் மூலம் - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பழி - களையப்பட வேண்டும்.

 

 

 

 

அனோஜனை காப்பாற்ற சவூதி செல்லும் ஜனாதிபதி சட்டத்தரணிகள்…

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் ஆராய,

 

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரபெரும,

பைஸர் முஸ்தபா ஆகியோர் தமது சொந்த செலவில் சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளனர்.

 

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

 

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்  (22.09.2026) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

 

 

 

 

தீர்ப்பு அறிவிப்பு…


குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை.!

 

தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததுடன்,

 

குற்றம் சாட்டப்பட்ட 15 பேரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

 

 

 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு….

 

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் நேற்று, செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

 

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களுக்கு வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விபரங்கள்:

 

5 குற்றவாளிகளுக்கு – தலா 200 ஆண்டுகள்

5 குற்றவாளிகளுக்கு – தலா 220 ஆண்டுகள்

4 குற்றவாளிகளுக்கு – தலா 240 ஆண்டுகள்

ஒரு குற்றவாளிக்கு – 260 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 9 பிரதிவாதிகள் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

 

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியமை,

 

அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 

இந்த வழக்கில் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்தனர்.

 

சாட்சி விசாரணைகள் கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி நிறைவடைந்திருந்தன.

 

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி வாகனங்கள் உள்ளிட்டவற்றுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 

 


 

நேற்று பன்னலையில் இடம்பெற்ற வாகன மறிப்பு சம்பவம்…

 

குருநாகல் – பன்னலையில் இடம்பெற்ற பரபரப்பான வாகனம் மறிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

 

இதன்போது நபர் ஒருவரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதுடன்,

 

ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணம் மற்றும் போதைப்பொருள் பொதியிடும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, மோட்டார் கார் ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய,

 

செப்டம்பர் 22 ஆம் திகதி கிரிஉல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கிரிஉல்ல நகரிலிருந்து குறித்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் குழுவினர்,

 

பன்னலை பகுதியில் வைத்து அதனை மறித்து சோதனை செய்ய முயன்றனர்.

 

இருப்பினும், காரில் இருந்தவர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறி, உத்தியோகத்தர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

 

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது,

 

பொலிஸார் வாகனத்தின் பின் சக்கரத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

காரில் இருந்தவர்கள் கதவுகளைத் திறக்க மறுத்ததால், பொலிஸார் முன் இடதுபக்கக் கதவின் கண்ணாடியை உடைத்து, அவர்களை வெளியேற்றி சோதனையிட்டனர்.

 

காரைச் சோதனையிட்டதில் 15.260 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 924,770 ரூபாய் பணம் என்பன கண்டெடுக்கப்பட்டன.

 

இச்சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய ஆண் ஒருவரும், 39 மற்றும் 16 வயதுடைய இரு பெண்களும் வாகனத்துடன் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் நெலும்தெனிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

விசாரணைகளின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை புலனாய்வாளர்கள் பின்னர் சோதனையிட்டனர்.

 

அந்த சோதனையின் போது, மேலும் 62 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1.68 மில்லியன் ரூபாய் பணம்,

 

போதைப்பொருள் பொதியிடலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 500 போத்தல் மூடிகள்,

 

ஒரு ரோல் வெளிப்படையான குழாய் மற்றும் போதைப்பொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படவிருந்ததாக நம்பப்படும் 2,235 பிளாஸ்டிக் குழாய்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்,

 

பணம் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இச்சம்பவம் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 பல்கலைக்கழக மாணவி பரிதாபகரமாக...



No comments

Theme images by fpm. Powered by Blogger.