இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்........ - !

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்........ - !





இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்........ - !




 

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்...

    


நேபாளத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் வீட்டிலேயே இருக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


இலங்கை தூதரக அதிகாரிகளை +977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தண்ணீர் மற்றும் உலர் உணவுப் பொருட்களை எப்போதும் தங்களிடம் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் அவற்றை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேபாளத்தில் 99 இலங்கையர்கள் உள்ளனர், அதில் தூதரக ஊழியர்கள் உட்பட 22 மாணவர்கள் உள்ளனர்.


இதேவேளை இப் போராட்டத்தினால் இலங்கையர்கள் யாரும் காயமடைந்ததாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது




வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை



வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 08 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். 


அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, 


பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு முழு ஆண்டு ஆன பின்னும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை. 


அமைச்சர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் எனக் கூறினாலும், எளிதில் செய்யக்கூடியவை கூட முயற்சிகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இன்னும் நீக்கப்படவில்லை. 


PTAக்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியது. 


PTA சட்ட நீக்கம் செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை (moratorium) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (Online Safety Act) சட்ட நீக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 


வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளதும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு (Sri Lanka Accountability Project) எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மிகவும் கண்டனத்துக்குரியது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும் , எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. 


இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 240 எலும்புக்கூடுகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள. இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக இருப்பினும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை. 


இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை. இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது. 


அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 


இந்தியா, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அழைத்துள்ளது. 


மாறாக, இலங்கை அரசாங்கம் தன் எழுத்திலான பதிலில், எல்லை நிர்ணயிப்பு செயல்முறை முடிந்த பிறகு மட்டுமே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலை எடுத்துள்ளது. இது பல ஆண்டுகள் தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணப்பாட்டை காட்டுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி, அவர்களின் வாக்குரிமையை தொடர்ந்து உதாசீனப்படுதலை காட்டி நிற்கிறது. 


எமது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்வைத்த தனி நபர் சட்டமூலத்தினை அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கி, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 05 நாடுகள் அனுசரணை



இந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைவு செய்யப்பட்டுள்ளது. 


பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்கியுள்ளன. 


இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 


குறித்த அறிக்கையை ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் செண்டர்ஸ் சமர்ப்பித்துள்ளார். 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயம் மற்றும் அவரது அறிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகளை நடத்துவது மிகவும் முக்கியம் என்றும், அது சர்வதேச தரத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஐக்கிய இராச்சியம் சுட்டிக்காட்டியுள்ளது. 


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யத் தவறியது, அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கவலை வௌியிடப்பட்டுள்ளது. 


மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்த ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் பணிகளை ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் ஐக்கிய இராச்சியம் வலியுறுத்தியுள்ளது. 


இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை ஐக்கிய இராச்சியம் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் முக்கியக் குழு, கடந்த பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. 


ஐ.நா.வுக்கான ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி குமார் அய்யரால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள செயல்களாக மாற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியதுடன், நிகழ்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறினார்.




350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்



கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 


பொலிஸை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.



எல்ல பேருந்து விபத்தின்போது துணிந்து செயலாற்றிய  பெண் ---  கௌரவித்த இலங்கை அரசு



எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நடந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு முக்கியமான உதவிகளை வழங்கியதற்காக எமி விக்டோரியா கிப் என்ற குறித்த பிரித்தானிய பெண் சுற்றுலா அமைச்சினால் பாராட்டப்பட்டார்.


அவசர சேவைகள் வரும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆறுதல் அளிப்பதற்காக அவர் சம்பவ இடத்தில் முன்வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற அவருக்கான கௌரவிப்பு நிகழ்வில் கருத்து வெளியிட்ட சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க "மனிதகுலத்திற்கு எல்லைகள் எதுவும் தெரியாது என்பதை அவரது தன்னலமற்ற செயல்கள் நமக்கு நினைவூட்டுகின்றன" என்று குறிப்பிட்டார்.




வைத்தியர் கைது   ----   ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த 



தெல்தெனிய வைத்தியசாலையில் வைத்திய கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, அதே வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தெல்தெனிய வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பாளர் சுனில் செனரத் யாப்பா பொலிஸில் அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வைத்தியசாலையின் ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அவர்களை அச்சுறுத்தியதாகவும் புகாரில் குற்றச்சாட்டுகள் இருப்பதாக பொலிஸ் கூறுகிறது.


சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியர், வைத்தியசாலையின் ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் கூறுகிறது.


கைது செய்யப்பட்ட வைத்தியர், தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் 10 / 09/ 2025 மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்........ - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.