சமூக ஊடக தளங்களுக்கு --- தடை விதித்த அரசு..... - !

சமூக ஊடக தளங்களுக்கு  ---  தடை விதித்த அரசு..... - !





சமூக ஊடக தளங்களுக்கு  ---  தடை விதித்த அரசு..... - !




 

சமூக ஊடக தளங்களுக்கு  ---  தடை விதித்த அரசு



நேபாளத்தில் , ஃபேஸ்புக்,  ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடகத் தளங்களைத் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


அரசின் பதிவு விதிகளுக்கு இணங்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தளங்களை முடக்குமாறு நேபாள தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்த அறிவிப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 



அரச தரப்பு அறிவிப்பு  ---  விரைவில் மாகாண சபைத் தேர்தல் 



மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.


அத்துடன் தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ” தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை. 


எனவே, பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது. இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும்.


தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு எந்த ஒரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஈபிஆர் எல்எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது .



33 ஆவது நாளாக தொடரும் போராட்டம்



மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) 33 ஆவது நாளாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு கிராம மக்கள்,வர்த்தகர்கள்,பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.


இந்த நிலையிலே 33 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு புனித செபஸ்தியார் பேராலய  பங்கு சபை, மற்றும்  பங்கு மக்கள் பங்கேற்கேற்று தமது ஆதரவை வழங்கினர்.


இதன் போது  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ,அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்று மீண்டும் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.



விபத்தில் தப்பியவரின் வாக்குமூலம்!



எல்ல - வெல்லவாய பள்ளத்தாக்கில் இருந்து பேருந்து விழுவதற்கு முன்பு அதன் பிரேக் செயலிழந்ததாக சாரதி கத்தியதாகவும் அப்போது பயணிகள் அனைவரும் சிரித்ததாகவும் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


பேருந்து விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், பிரேக் செயலிழந்து விட்டதாக சாரதி கூறினார். அப்போது நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் சிரித்தனர்.


சில பயணிகள்,  சாரதியை பார்த்து பொய் கூற வேண்டாம் எனவும் கூறினர். அதனையடுத்து, உண்மையில் பிரேக் செயலிழந்ததை பயணிகள் உணர்ந்துகொண்டனர்.


எதிரே வந்த வாகனத்துடன் மோதியே பேருந்து கீழே விழுந்தது. அதன்பின்னர், நான் இறந்து விடுவேன் என நினைத்தேன். 


வைத்தியசாலையில் கண் விழிக்கும் போதே உயிருடன் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.


கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் எனக்கு சுயநினைவு இருக்கவில்லை. அதன் பின்னர், ஒரு குழந்தை கத்தும் சத்தத்தை கேட்ட பின்னரே சுயநினைவு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு சுமார் 09.00 மணியளவில், எல்ல – வெல்லவாயைச் சாலையில் மகவாங்குவ “மவுண்ட் ஹேவன் ஹால்” அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


வெல்லவாயை நோக்கிச் சென்றிருந்த சுற்றுலா பேருந்தொன்றை, எதிரே வந்த ஜீப் வாகனம் மோதியதில், பேருந்து சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் மோதி, சுமார் 1000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கினுள் கவிழ்ந்துள்ளது. 


விபத்தில் 09 பெண்களும், 06 ஆண்களும் என மொத்தமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும் 05 பெண்கள், 06 ஆண்கள், 03 சிறுவர்கள், 02 சிறுமிகள் என 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்களின் உடல்கள் தியத்தலவ, பண்டாரவெள மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த விபத்துக்கு தொடர்புடைய ஜீப் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள நிலையில்  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் எல்ல பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.



சடலங்களை தோளில் சுமந்து வந்த மக்கள்; நெகிழ்ச்சி சம்பவம்



எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று (05) இரவு பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில்,  15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். 


இந்நிலையில் நேற்று இரவு அங்கிருந்த விளக்குகள் கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மீட்பு குழுவினர் இன்றி போராடிய சந்தர்ப்பத்தில் இந்த இரவில் யாரால் சென்று காப்பாற்ற முடியும் என வினவிய போது பிரதேச மக்கள் நாங்கள் சென்று மீட்கிறோம் என தைரியமாக தெரிவித்துள்ளனர்.


அதற்கமைய, கயிறுகளுடன் சென்று பலமணி நேரம் போராடிய மக்கள் சடலங்களை தோளில் சுமந்துக் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற சென்ற இருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதிக இருள் சூழ்ந்த பகுதியில் அந்த பகுதி மக்கள் காப்பாற்ற முன்வந்ததற்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில்  குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.  





No comments

Theme images by fpm. Powered by Blogger.