16 வயதுக்குட்பட்டவர்கள் ---- பாவிப்பதற்கு தடை... . - !
16 வயதுக்குட்பட்டவர்கள் ---- பாவிப்பதற்கு தடை... . - !
16 வயதுக்குட்பட்டவர்கள் ---- பாவிப்பதற்கு தடை
மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் சமூக ஊடகங்களை பாவிப்பதற்கு தடை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் சமூக ஊடக பயன்பாட்டிற்கான வயதுக் கட்டுப்பாடுகளை விதிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை மலேசிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நேற்று (23) தெரிவித்துள்ளார்.
இதேவேளை சைபர்புல்லிங், நிதி மோசடிகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற ஒன்லைன் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"16 வயதுக்குட்பட்டவர்கள் பயனர் கணக்குகளைத் திறப்பதைத் தடைசெய்யும் அரசாங்கத்தின் முடிவை சமூக ஊடக தளங்கள் அடுத்த ஆண்டுக்குள் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் சூதாட்டம் மற்றும் இனம், மதம் மற்றும் அரச குடும்பத்துடன் தொடர்புடைய பதிவுகள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் அதிகரிப்புகளால் மலேசியா சமீபத்திய ஆண்டுகளில் சமூக ஊடக நிறுவனங்களை அதிக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளங்கள் மற்றும் செய்தி சேவைகள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் புதிய ஒழுங்குமுறையின் கீழ் உரிமத்தைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களில் அதிகமானோர் மன அழுத்தத்தால்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் அதிகமாக இருப்பதாக பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழங்கள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ஆசியாவைப் பொறுத்தவரையில் 16.1 சதவீதமானோர் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
2023ஆம் ஆண்டில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 39 சதவீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக 19 வயதுக்குட்பட்டவர்களிடையே 7.0 சதவீதமானோர் உயிர்மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகவும் மற்றும் 35.0 சதவீதமானோர் ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை அனுபவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வருடந்தோறும் சுமார் 200,000 பேர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். அவ்வாறு புலம்பெயரும் பெண்களில் 75 சதவீதமானோர் திருமணமானவர்கள்.
இவ்வாறு புலம்பெயரும் பெண்களின் பிள்ளைகளுக்கே இந்த மன அழுத்தம் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை பகுதி வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை, 5 பேரை கடித்த நிலையில் தலைமறைவாகி ---- இறந்த நிலையில் சுகாதார அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் அந்த பூனை திடீரென இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில் இச்சம்பவம் அண்மையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பூனை 5 பேரை கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளதுடன் நீண்ட தேடுதலின் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவ்வதிகாரிகள் குறித்த பூனையை மீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் மேலதிக பரிசோதனைக்காக அப்பூனையின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அதே போன்று அண்மையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் பல பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் பதிவாகி இருந்தது.
இதற்கமைய குறித்த நபர்களுக்கு கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப் பிரதேசத்தில், பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு, கடந்த ஆண்டை விட 18% அதிக வருமான இலக்கு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த வாரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச வருமான இலக்கான 2 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டி வருமானம் ஈட்ட முடிந்தது.
இந்த நேரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,080 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என்றார்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு இதன் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட இந்த முன்மொழிவு இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதருக்கு அறிவிக்கப்பட உள்ளது.
அதன் பிறகு, இத்தாலியில் ஓட்டுநர் உரிமங்களுக்குப் பொறுப்பான நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது,
மேலும் 2 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய்
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் 6.0% நிலையான முன்னேற்றத்தையும் கண்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை குறிப்பிடுகிறது.
இலங்கை சுங்கத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களுடன் சேர்த்து, மொத்த ஏற்றுமதி வருவாய் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட ஒப்பீட்டளவில் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருவாய் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தக் காலகட்டத்தில், தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி முதல் முறையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் தகவல் முறைமை
இலங்கை காவல்துறை, குற்றவியல் அல்லது போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காக முறைப்பாடளிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கும் தகவல் முறை என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் ஒரு நபர் இதற்கு முன் ஏதேனும் குற்றத்திற்காக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளாரா என்பதை அதிகாரிகள் உடனடியாக பரிசோதிக்க முடியும்.
இந்தத் தகவல் முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அணுகக் கூடியதாக உள்ளது.
சந்தேகநபரின் விபரங்களை இதில் உள்ளிடும்போது, முந்தைய முறைப்பாடுகள் எதுவும் இல்லையெனில், அவர்களை உடனடியாக விடுவிக்க இந்த முறை வழி செய்கிறது.
அத்துடன் நீதிமன்ற அழைப்பாணைகளை வேண்டுமென்றே தவிர்ப்பவர்களை இது அடையாளம் காண உதவுகிறது.
உதாரணமாக, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறியிருந்தால், அவர் AMIS மூலம் அடையாளம் கண்டு உடனடியாகக் கைது செய்யலாம் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
சாரதிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியவும் புதிய திட்டம்
அனைத்துப் பேருந்துகளும் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அடிப்படை வீதித் தகுதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் வீதித் தகுதிப் பரிசோதனை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பேருந்தும் அதிகாரப்பூர்வச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சான்றளிக்கப்பட்ட சோதனை மையங்களில் பேருந்துகளை பரிசோதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் பயணிகள் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட நடமாடும் பரிசோதனைப் பேருந்து ஒன்றைத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்தப் புதிய முன்முயற்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நடமாடும் பிரிவு, நாடு முழுவதும் உள்ள பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு திடீர் சோதனைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடமையில் இருக்கும்போது போக்குவரத்து ஊழியர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனைகள் உதவும்.
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் கணிசமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இத்தகைய நபர்களின் அலட்சியமான நடத்தை காரணமாகவே பயணிகள் பேருந்து விபத்துகளில் கிட்டத்தட்ட 53 சதவீதம் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
தொழில்சார் தரங்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால், பேருந்துத் தொழில் சரிவை நோக்கிச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
மாகும்புர நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் பேருந்தில், ஓட்டுநர்கள் தங்கள் வேலையைத் தொடங்கும் முன்னர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்கள் ---- பாவிப்பதற்கு தடை... . - !

No comments