பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு ........!
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு ........!
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஊவா மாகாணத்தில் 'டித்வா' சூறாவளியால் மூடப்பட்ட 888 பாடசாலைகள் ஏனைய அரச பாடசாலைகளை போலவே ஜனவரி 5 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் மனோகரி பொன்சேகா 28/12/2025 இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊவா மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் ஜனவரி 5 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பசறை கல்வி வலயத்தில் உள்ள மடுல்சிம தமிழ் பாடசாலை, பண்டாரவளை கல்வி வலயத்தில் உள்ள தொட்டலகல தமிழ் பாடசாலை, கஹகல தமிழ் பாடசாலை மற்றும் கவரகல தமிழ் பாடசாலை ஆகிய நான்கு பாடசாலைகளும் குறித்த தினத்தில் மீண்டும் திறக்கப்படாது.
மேலும் அந்த பாடசாலைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊவா மாகாணத்தில் 181 பாடசாலைகள் சூறாவளியால் சேதமடைந்துள்ளதாகவும், இராணுவத்தினர், பொலிஸ், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், வெளி மாகாணங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஒரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீட்டெடுக்க இணைந்து பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊவா மாகாணத்தில் 50 பாடசாலைகளில் பாதுகாப்பு மையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், நேற்றைய (28) நிலவரப்படி 46 பாடசாலைகளில் இருந்து பாதுகாப்பு மையங்கள் அகற்றப்பட்டுள்ளன குறிப்பிட்டிடருந்தார்.
இதனையடுத்து ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுமியை தேடி வேட்டை
வென்னப்புவ நைனமடம பாலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை 28/12/2025 மாலை 5.30 மணியளவில் ஜின் ஓயாவில் குதித்ததாகக் கூறப்படும் 17 வயது சிறுமியை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
காணாமல் போனவர் ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த 17 வயது உமயங்கனா சத்சரணி என்ற பெண் ஆவார்.
சம்பவம் நடந்த அன்று, மாலை 5.30 மணியளவில் சிலாபம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நைனமடம பகுதியில் உள்ள ஜின் ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஒரு இளைஞனுடன் சிறுமி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, சிறுமி உடனடியாக ஜின் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவளைக் காப்பாற்ற அந்த இளைஞனும் ஜின் ஓயாவில் குதித்தார்.
அருகிலுள்ள ஹோட்டலில் இருந்து இரண்டு ஊழியர்கள் ஜின் ஓயாவுக்கு கயிற்றை வீசினர். இளைஞன் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், இளம் பெண் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
வென்னப்புவ, நைனமடம பகுதியைச் சேர்ந்த 18 வயது ருமேஷ் லக்ஷன் என்பவர் உயிர் பிழைத்து, ஆம்புலன்ஸில் மாரவில அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஜின் ஓயாவில் காணாமல் போன இளம் பெண்ணின் உடலைத் தேடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று படகு உதவியுடன் நடவடிக்கை எடுத்தது, ஆனால் உடல் கிடைக்கவில்லை, திங்கட்கிழமை 29/12/2025 கடற்படை உடலைத் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டது.
எச்சரிக்கை!- முகக்கவசம் அணிவது சிறந்தது
இலங்கையின் பல நகர்ப்புறங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரம் 'சற்று ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
முக்கியமாக யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 ஆகப் பதிவாகியுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 48 முதல் 112 வரை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம் (100–108) மற்றும் புத்தளம் (104–112) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 'சற்று ஆரோக்கியமற்ற' (Slightly Unhealthy) மட்டத்தில் இருக்கும்.
அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் காற்றின் தரச் சுட்டெண் மிகக் குறைந்த அளவாக 46ஆக பதிவாகியுள்ளது.
மேலும் காலை 8:00 முதல் 10:00 வரையும், மாலை 3:00 முதல் 5:00 வரையும் காற்றின் மாசு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் தரச் சுட்டெண் (AQI) முக்கியமாக PM2.5 எனப்படும் நுண் துகள்களின் அளவை வைத்தே கணக்கிடப்படுகிறது.
இவை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.
காற்றின் தரம் குறைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மாசு அதிகம் உள்ள நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும், தேவையேற்படின் முகக்கவசம் அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
'Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பதில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி வை.ஏ. ஜயதிலக, பிரதான நிதி அதிகாரி எம்.பி. ருவன் குமார மற்றும் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி சமீர தில்ஷான் லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புது வருடத்தில் பாராளுமன்றம் கூடும் திகதி
2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 31/12/2025 நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பாராளுமன்றம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளது. 2026 ஜனவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 3.30 மணி வரை கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 2371/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் 2428/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 3.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2025.12.28 ஆம் திகதி 2468/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், இந்தத் தீர்மானம் மீதான விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட காலம் போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது குழுவில் அறிவித்துள்ளனர்.
அத்துடன், அன்றைய தினம் பி.ப. 5.30 மணிக்கு ஒழுங்குப் புத்தக இல. 3 இல் திகதி குறிப்பிடப்படாததாக சேர்க்கப்பட்டுள்ள ‘மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை அங்கீகரிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2026 ஜனவரி 7 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப. 10.30 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. அதனையடுத்து பி.ப. 5.00 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இலங்கை தொடர்பில்
உலக சுகாதார அமைப்பின் (WHO) 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கையின் சுகாதார துறை 158ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறைந்தளவான மருத்துவ வளங்களை கொண்ட நாடுகளில் 40 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்ட புள்ளிகள் 54.55 ஆகும்.
இது சராசரியை விட குறைவானது என்பதால் சுகாதார குறிகாட்டிகளின் படி ஆரோக்கியமற்றதாகும் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட உலகளாவிய சுகாதார குறியீட்டின் படி, நிச்சயிக்கப்பட்ட பத்து படிமுறைகளை கொண்டு கணிப்பிடும் போது நாடுகளுக்கு இடையிலான சுகாதாரம் கணிசமளவு வேறுபாடு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த கணிப்பீடுகளில் ஆயுட்காலம், இரத்த அழுத்த அளவுகள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் (நீரிழிவு அபாயத்தின் முக்கிய குறிகாட்டி), உடல் பருமன், மனச்சோர்வு, மகிழ்ச்சி, மது அருந்துதல், புகையிலை பாவனை, உடலாரோக்கிய தன்மை மற்றும் சுகாதார சேவைகளுக்கான அரசாங்க செலவு ஆகியவை அடங்கும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இலங்கையில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இருப்பினும், இலங்கையில் பிறக்கும் போதான ஆயுட்காலம் , 2000 ஆம் ஆண்டில் 71.5 வருடங்களில் இருந்து 2021 இல் 77.2 வருடங்களாக அதிகரித்துள்ளது.
அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் கால எல்லை நீடிப்பு...
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 செப்டம்பர் 01 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க முடியும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2026 ஜனவரி 31 ஆம் திகதிக்குப் பின்னர் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பது துப்பாக்கிக் கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும், 2026/2027 ஆம் ஆண்டுகளுக்கான தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கான காலலெல்லையும் ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணங்கள் அறவிடப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு ........!

No comments