பொதுமக்களே, எச்சரிக்கை .........!

  பொதுமக்களே, எச்சரிக்கை .........!



பொதுமக்களே, எச்சரிக்கை .........!



பொதுமக்களே, எச்சரிக்கை .........!



போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டியுள்ளதாகக் கூறி, 


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி முன்னெடுக்கப்படும் இணையவழிப் பணமோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஊடாக தனிநபர்களைக் குறிவைத்து இத்தகைய ஏமாற்று வேலைகள் நடப்பதாக பொலிஸாருக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


இந்த இணைய அச்சுறுத்தல்களில் சிக்கி பொதுமக்கள் ஏமாறாமல் தடுப்பதற்காக, இலங்கை பொலிஸார் 7 முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


பொதுமக்களுக்கான பொலிஸாரின் 7 முக்கிய அறிவுறுத்தல்கள்


சந்தேகத்துக்கிடமான இணைப்புகளைத் தவிர்க்கவும்: குறுஞ்செய்தி (sms), மின்னஞ்சல் (E-mail) அல்லது வேறு ஏதேனும் தொடர்பாடல் செயலிகள் மூலமாக வரும் சந்தேகத்திற்கிடமான linkகளை எக்காரணம் கொண்டும் க்ளிக் செய்ய வேண்டாம்.


அனுப்பியவரின் விபரங்களைச் சரிபார்க்கவும்: ஏதேனும் இணைப்பிற்குள் செல்வதற்கு முன்னதாக, அதனை அனுப்பியவரின் விபரங்களை மற்றும் அந்த இணையப் பக்கத்தின் உண்மைத் தன்மையை நன்றாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.


இரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம்: தெரியாத இணைப்புகள் மற்றும் செயலிகள் ஊடாக உங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் தற்காலிக நேர கடவுச்சொற்களை யாருடனும் பகிரக்கூடாது.


அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவும்: இவ்வாறான தகவல்களின் உண்மைத் தன்மையை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலமாகவோ அல்லது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையவழிச் செயலிகள் ஊடாகவோ மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.


அதிகாரிகளின் உதவியை நாடவும்: சந்தேகத்திற்கிடமான தகவல்கள், இணையவழிச் செயலிகள் மற்றும் சமூக ஊடகக் குறிப்புகள் தொடர்பாக, அது குறித்துச் சட்ட ரீதியான அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும்.


செயலிகளைப் புதுப்பிக்கவும் : பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக உங்களுடைய கையடக்கத் தொலைபேசி மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்க வேண்டும்.


அவசரப்படுத்தினால் எச்சரிக்கையாக இருக்கவும்: "உடனடியாக பணம் செலுத்த வேண்டும்" என்றோ, அவசரம் அல்லது அச்சுறுத்தும் வகையிலோ ஏதேனும் விடயங்கள் முன்வைக்கப்பட்டால், அது குறித்து மிக அதிக கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


மேற்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பொதுமக்கள் தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும், சைபர் குற்றங்களைக் குறைப்பதற்கு இது பெரும் துணையாக அமையும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.



எரிபொருள் விலைகள் குறைய வாய்ப்பில்லை...



உலக சந்தையில் அண்மைக் காலமாக எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் உள்நாட்டில் எரிபொருள் விலைகள் குறைவடைய வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.


இந்த மாதத்திலோ அல்லது செப்டெம்பர் மாதம் வரை விலை குறைப்பு ஒன்றை எதிர்பார்க்க முடியாது. விலை அதிகரிப்பு ஏற்படுமா என்பதை இந்த நேரத்தில் கூற முடியாது. நாங்கள் இன்னும் அது குறித்து ஆராய்ந்து வருகிறோம், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் மயூரா நெத்திகுமாரகே இன்று (29) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்றைய தினம் பிற்பகுதியிலேயே அறிவிக்கப்படும் என்றும், வழக்கமாக கூட்டுத்தாபனம் ஒவ்வொரு மாதமும் 31ஆம் திகதியே விலைகளை மறுஆய்வு செய்யும் என்றும் அவர் விளக்கினார். 


எனினும், மே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், கூட்டுத்தாபனம் ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் இன்றைய உலகளாவிய விலை நிலவரங்களை கணக்கில் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.


இது தொடர்பாக பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நேரத்தில் எதையும் திட்டவட்டமாகக் கூற முடியாது. ஒருவேளை விலை இதே மட்டத்தில் நீடிக்கலாம் அல்லது சிறிய அளவில் அதிகரிக்கலாம், இது குறித்து ஆராயப்பட வேண்டும். எனினும், தெளிவாக ஒரு பெரிய விலை அதிகரிப்பு இருக்காது. இது குறித்து தேவையில்லாத அச்சத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.


முன்னர் காணப்பட்ட உச்சக்கட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போது விலைகள் சற்று தணிந்துள்ள போதிலும், அவை இன்னும் யுத்தத்திற்கு முந்தைய காலகட்டத்தை விட கணிசமான அளவு அதிகமாகவே உள்ளன என்று நெத்திகுமாரகே குறிப்பிட்டார்.


கடந்த ஏப்ரல் மாதத்தில் 290 அமெரிக்க டொலராக இருந்த ஒரு கொள்கலன் டீசல், தற்போது 140 முதல் 150 அமெரிக்க டொலர்களுக்கு இடையில் விற்பனையாகிறது. ஆனால், யுத்தத்திற்கு முன்னர் இதன் விலை 80-90 அமெரிக்க டொலர்களாகவே காணப்பட்டது. எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன, ஆனால் அவை யுத்தத்திற்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை, என்று அவர் கூறினார்.


எவ்வாறாயினும், ஒகஸ்ட் மாதம் வரையிலான எரிபொருள் கொள்வனவிற்கான கட்டளைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏற்கனவே இறுதி செய்துள்ளதால், செப்டெம்பர் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாங்கள் முன்பதிவு செய்த எரிபொருள் எமக்குக் கிடைத்தால், இந்த ஆண்டு செப்டெம்பர் வரை எங்களிடம் போதுமான எரிபொருள் கையிருப்பு இருக்கும். ஒகஸ்ட் மாதத்திற்கான அனைத்து முன்பதிவுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன, அவை செப்டெம்பர் மாதத்திலும் நாட்டை வந்தடையும், என்று நெத்திகுமாரகே உறுதிப்படுத்தினார்.



 கடல் கொந்தளிப்பு தொடர்பான அறிவிப்பொன்றை விடுத்துள்ளது...


காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடல் கொந்தளிப்பாக இருப்பதோடு பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று (29) விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (30) மாலை 4.30 மணி வரையில் அமுலில் இருக்கும். 


மேற்குறித்த கடல் பகுதிகளில் மணிக்கு 60-65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் குறித்த கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படை மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



கொழும்பு பணவீக்கம் சற்று அதிகரிப்பு... 



கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (CCPI) ஆண்டிற்கு ஆண்டு புள்ளி விபர மாற்றத்தினால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம், 2026 மே மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது. 


இதற்கமைய, ஆண்டிற்கு ஆண்டு புள்ளி விபர அடிப்படையில் முதன்மைப் பணவீக்கமானது 2026 ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2026 மே மாதத்தில் 5.5 சதவீதம் வரை சற்றே அதிகரித்துள்ளது. 


ஆண்டிற்கு ஆண்டு புள்ளி விபர அடிப்படையில், உணவுப் பணவீக்கமானது 2026 ஏப்ரல் மாதத்தில் பதிவான 2.8 சதவீதத்திலிருந்து 2026 மே மாதத்தில் 0.9 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. 


ஆண்டிற்கு ஆண்டு புள்ளி விபர அடிப்படையில், உணவு அல்லாத பணவீக்கமானது 2026 ஏப்ரல் மாதத்தில் பதிவான 6.8 சதவீதத்திலிருந்து 2026 மே மாதத்தில் 7.8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.



விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் - தந்தை கைது..!


மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 


அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபரை நேற்று (28) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வௌியாகியுள்ளன.


கைதான சந்தேகநபர் உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.


மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்வையிடுவதற்காக தமது தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகள் பதுளையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்றிருந்தனர்.


இதன்போது அவர்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, 


விடுதிக்குள் ஏற்பட்ட தீப்பரவலில் 3 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும், 5 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். 


இந்த நிலையில் குறித்த தந்தையின் அடையாள அட்டையை பரீசீலித்த போது, அது வேறு ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது.


அந்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் அவரது அடையாள அட்டை கடந்த 2023 ஆண்டு காணாமல் போன நிலையில், 


சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் அவர் வசித்து வருகின்றார் எனவும் தெரியவந்துள்ளது.


அவரது அடையாள அட்டையை தம்முடையது எனக்கூறி, கைதான அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் குறித்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தியுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


இந்நிலையில் மனைவி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவருவதாக கூறிய விடயமும் போலியானது என்பதுடன் அவரது மனைவி மாத்தறையில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.


சந்தேகநபர் தமது மனைவிக்கு புற்றுநோய் எனக்கூறி பல இடங்களில் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.


கைதான சந்தேகநபருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் காணப்படுவதாகவும், 


அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இந்நிலையிலேயே இந்த சந்தேகநபரை நேற்று (28) இரவு பொலிஸார் கைது செய்ததுடன், 


அவரது தாயாரையும் விசாரணைக்கு அழைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




பொதுமக்களே, எச்சரிக்கை .........!



No comments

Theme images by fpm. Powered by Blogger.