க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான.........!

 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான.........!


க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான.........!



க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான.........!


  2025ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளை அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பரீட்சை முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றது.


இந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று பரீட்சை விசேட ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.



மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன்



தனது மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த - அங்கொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.கடந்த 18ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த அவர், குறித்த பெண்ணின் தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.


இதனால் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அவரது முகம் மற்றும் மார்புப் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இப்பெண்ணின் சட்டப்பூர்வ கணவரே இந்த தீ வைப்பை மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


இதற்கமைய செயற்பட்ட பொலிஸார், முல்லேரியா பொலிஸ் பிரிவில் வைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் போத்தல் மற்றும் முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தான் தீ வைத்தது தனது சொந்த மனைவிக்கே என சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.அவர்கள் இருவரும் தங்களது முந்தைய திருமணங்களிலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இருப்பினும், இந்த பெண் பல்வேறு நபர்களுடன் பழகியதாகவும், பல நாட்களாகியும் வீட்டிற்குத் திரும்புவதில்லை என்றும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தீ வைத்த பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சந்தேகநபர் அப்பெண்ணிடம் கூறியிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சந்தேகநபர் இதற்கு முன்னர் எவ்வித குற்றச்செயல்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ உள்ளாகாத ஒருவர் எனவும், முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரிந்த ஒருவரே என பிரதேசவாசிகள் தெரிவித்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.


சந்தேகநபர் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை இலக்கம் 08 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




தரமற்ற இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு 




அதிகாரப்பூர்வ பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் நிலவிய போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்திய வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுரை விடுத்துள்ளனர்.


அதிகாரப்பூர்வ இலக்கத் தகடுகள் இதுவரை வழங்கப்படாத போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களைச் செலுத்துவது சட்டவிரோதமானது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


இருப்பினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைய, வாகன இலக்கத்தை A4 அளவிலான காகிதத்தில் அச்சிட்டு காட்சிப்படுத்துவதற்கு சாரதிகளுக்கு அனுமதி உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.


வழங்குனர் ஒருவர் இல்லாத காரணத்தினால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் பணிகள் கடந்த 10 மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.


அறிக்கைகளின்படி, இதன் விளைவாக சுமார் 400,000 இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


வருகின்ற ஜூன் மாதம் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையில், இவ்வாறு தற்காலிகமாக அல்லது தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்தும் வாகனங்களுக்கு பொலிஸார் அபராதம் விதிப்பது குறித்து சாரதிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸார், அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்காத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு உரிமை உண்டு எனக் கூறியுள்ளனர்.




Powerbank  ---   விமானங்களுக்கு ஆபத்து




உலகெங்கிலும் இயக்கப்படும் விமானப் பயணங்களின் போது ‘பவர் பேங்க்’ (Power Bank) காரணமாக கடுமையான பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது.


விமான நிறுவனங்களால் விதிக்கப்பட்டுள்ள விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அந்த அதிகாரசபை பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த கையடக்க சார்ஜர்கள் அதிகளவில் சூடாகவோ அல்லது தீப்பற்றவோ கூடும் என்பதால், அவற்றை முறையாக கையாளாவிட்டால் கடுமையான ஆபத்தாக மாறக்கூடும் என்று அந்த ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.


பவர் பேங்க்களை பிரதான பயணப் பொதிகளுக்குள் (Checked luggage) வைப்பதைத் தடை செய்வது போன்ற விதிகள் சாதாரணமாக விதிக்கப்பட்டவை அல்ல என்றும், அவை பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்ட மிக முக்கியமான விதிகள் என்றும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஜொனாதன் நிக்கல்சன் குறிப்பிடுகையில், பயணிகள் கண்டிப்பாக பவர் பேங்க்களை தங்களது கைப்பைக்குள் (Hand luggage) மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்றும், ஒரு நபர் இரண்டு பவர் பேங்க்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.


அதேபோல், விமானப் பயணத்தின் போது அவற்றை பயன்படுத்துவதையோ அல்லது மீண்டும் சார்ஜ் செய்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் அவை அதிகளவில் சூடாகும் அபாயம் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்த வாரம் எகிப்திலிருந்து லண்டன் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ‘ஈஸிஜெட்’ (easyJet) விமானம் ஒன்று, அவசரமாக ரோம் நகரை நோக்கித் திருப்பப்பட்டமைக்கும், பயணி ஒருவர் தனது பவர் பேங்க் ஒன்றை விமானத்தின் சேமிப்பகத்தில் இருந்த பயணப் பொதிக்குள் வைத்திருந்ததே காரணமாகும்.


இதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை அவசரமாக தரையிறக்க நேரிட்டதுடன், பயணிகள் இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருக்க வேண்டியும் ஏற்பட்டது.


லித்தியம்-அயன் (Lithium-ion) பேட்டரிகளைக் கொண்ட இவ்வாறான சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளமையுடன், அது தொடர்பான விபத்துகளும் அதிகரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.


அவர்களின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் பேட்டரிகள் அதிகளவில் சூடாவது தொடர்பான சம்பவங்கள் வாரத்திற்கு சராசரியாக இரண்டு விமானப் பயணங்களில் பதிவாகியுள்ளன.


இருப்பினும், இது குறித்து பொதுமக்களிடையே உள்ள விழிப்புணர்வு இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதுடன், பெரும்பாலான பயணிகள் இவ்வாறான விதிகள் இருப்பதை அறிந்திருந்த போதிலும், அந்த விதிகள் என்ன என்பது குறித்து முறையான புரிதல் இல்லை என்பது கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.




இலங்கையில் மீண்டும் அமுலாகிறது 



டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் போன்று மீண்டும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறியமுடிகிறது.


விரைவில இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படலாமென அரசாங்க உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.தற்போதைய நிலைமையில் குறிப்பாக, டீசல் உள்ளிட்ட எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, அவற்றைச் சேமிப்பதற்காக அவசர தேவை அரசாங்கத்துக்கு எழுந்துள்ளதாக அந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


அண்மைய நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 342.63 ரூபாவாகவும் விற்பனை விலை 354.03 ரூபாவாகவும் அதிகரித்தது. கடந்த புதன்கிழமை பதிவான 332.23 ரூபாவை விட அதிகமாகும்.


பின்னர் ரூபா மதிப்பு சிறிதளவு உயர்ந்தது. நிலைமை மேலும் மோசமடைந்தால் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படுமென்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.


இந்த நிலைமைக்கு மத்திய கிழக்கு போரின் தாக்கமே காரணமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இறக்குமதிச் செலவு, ஏற்றுமதி வருமானத்தை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளது.


பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், வாகன இறக்குமதிக்காக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா, ஏப்ரல் மாதத்தில் இறக்குமதிசெய்யப்பட்ட எரிபொருளுக்காக மட்டும் 522 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


“தற்போது அந்தக் கட்டணத்தைச் செலுத்த முயற்சித்து வருகிறோம். மாதாந்த எரிபொருள் செலவு முன்பு 100–110 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. ஆனால், தற்போது அது 500 மில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.


அதேவேளை, தற்போதைக்கு எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாகவும், உலகச் சந்தையில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையே எங்களுக்கான முக்கிய பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

          



க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான.........!


No comments

Theme images by fpm. Powered by Blogger.