அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை ......!
அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை ......!

அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை ......!
அரசின் அதிகாரபூர்வ அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்துவதற்கும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் அனுமதியில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு அமைப்புகளாலும் வெளித்தரப்பினராலும் முன்வைக்கப்படும், அரசின் உத்தியோகபூர்வ அனுமதி பெறாத எந்தவொரு திட்டத்தையும் அல்லது நிகழ்வையும் பாடசாலை அமைப்பிற்குள் நடத்துவதற்கு எக்காரணம் கொண்டும் இடமளிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள வடமத்திய மாகாண சபை வளாகத்தில் இன்று வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை வலியுறுத்தினார்.
அரசாங்கம் என்ற ரீதியில் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக பெருமளவிலான அர்ப்பணிப்புகளைச் செய்து வருவதால், "பிள்ளைகளுக்கு சிறந்தவற்றையே வழங்க வேண்டும்" என்ற எண்ணத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.
அண்மையில் வீசிய 'தித்வா' சூறாவளி காரணமாக சேதமடைந்த பாடசாலைகளை புனரமைப்பது குறித்தும், தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தரம் (A/L) ஆகிய பரீட்சைகளின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு இந்த 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் சேவை நேர அட்டவணை வௌியீடு....
பதுளை மற்றும் நானுஓயா இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி நிலைமையின் போது, நானுஓயா மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று (17) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தனியார் துறையுடன் இணைந்து, ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நானுஓயா மற்றும் அம்பேவெல இடையே நிலச்சரிவுக்குள்ளான ரயில் பாதையை வழமைக்குக் கொண்டுவந்துள்ளது.
இதற்கமைய, இதுவரையில் அம்பேவெல மற்றும் பதுளைக்கு இடையில் மாத்திரம் பயணித்த பயணிகள் ரயில் சேவைகள், இம்மாதம் 20ஆம் திகதி முதல் நானுஓயாவில் இருந்து இயக்கப்படும்.
அதேவேளை, கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட ரயில் பாதையை வரைபடமாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கடல் குறித்த எச்சரிக்கை விடுப்பு....
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவரம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (18) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (19) பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
எனவே, கடற்சார் மற்றும் மீனவச் சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் -
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது. இந்தப் போரில், வளைகுடா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (17) ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும் கையெழுத்திட்டதாக, ஈரான் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதற்கு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா மோஜ்தபா கொமெய்னிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது இருதரப்புக்கும் இந்த மோதலை இராஜதந்திர ரீதியில் தீர்வைக் காண வேண்டும் என்பதிலுள்ள உறுதிபாட்டை வெளிப்படுத்துகின்றது.
இந்த ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றது. இதன் முதற்கட்டமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக மீண்டும் திறக்கும், அதேவேளையில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்கும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோவால் இலங்கைக்குப் பாரியளவில் பாதிப்பு இல்லை -
எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றங்களினால் இலங்கைக்குப் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட மாட்டாது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி என். ஏ. ஆர். டி. விக்ரமரச்சி தெரிவித்துள்ளார்.
பேராதனை, கண்ணொறுவாவில் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"பசுபிக் சமுத்திரம் உட்பட உலகின் பல பகுதிகளில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக கடல் நீர் வெப்பமடைவதையே 'எல் நினோ' காலநிலை மாற்றம் எனக் குறிப்பிடுகின்றனர். இதனால் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயத்துறை பாதிக்கப்படலாம் என்றும், மழைவீழ்ச்சி குறைந்து, வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், நெல் உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் வீழ்ச்சியடையும் என்றும் சில எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இலங்கையின் புவியியல் அமைவிடம் மற்றும் எமக்குக் கிடைக்கின்ற பருவமழைப் பொழிவு ஆகியவற்றின் காரணமாக, இந்த எல் நினோ தாக்கத்தினால் நாடு கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளாது என்றே நாங்கள் கருதுகின்றோம். தற்போதைய நிலையை விட சற்று அதிகமான வெப்பநிலையும், ஓரளவுக்குக் கூடுதல் மழைவீழ்ச்சியும் ஏற்படலாமே தவிர, அச்சுறுத்தலான சூழல் உருவாகாது.
இருந்த போதிலும், இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, குறைந்த நீர் விநியோகத்தைக் கொண்டு, வறட்சிக்குத் தாக்குப் பிடித்து வளரக்கூடிய உணவுப் பயிர்களை நாம் அடையாளம் கண்டு பயிரிட வேண்டும். எமது நாட்டைப் பொறுத்தமட்டில், குறைந்த காலத்தில் அறுவடை செய்யக்கூடிய, உலர் வலயத்திற்குப் பொருத்தமான நெல் ரகங்களைத் தெரிவு செய்து பயிரிடுவதன் மூலம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
அத்துடன், நாட்டிற்குள் பயிரிடக்கூடிய குரக்கன், பயறு, சோளம் போன்ற உப உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவுக்குத் தீர்வை எட்ட முடியும்.
இவ்வாறான ஒரு காலநிலை மாற்றம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டங்களை கடந்த கால அனுபவங்களின் மூலம் நாம் அறிந்துள்ளோம். நாட்டில் அனர்த்தங்கள் ஏற்பட்ட காலங்களில் எல்லாம் எமது நாட்டு விவசாயிகள் முன்வந்து கைகொடுத்தமையால், எமக்கு உணவுப் பிரச்சினைகள் பாரியளவில் ஏற்படவில்லை.
இலங்கை மக்களின் பிரதான உணவாக அரிசி காணப்படுவதுடன், அதில் நாம் தற்போது தன்னிறைவு அடைந்துள்ளோம். எனவே, எமது பிரதான உணவான அரிசி உற்பத்திக்கு இக்காலநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச அறிவிப்பு
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், பல அத்தியாவசிய நுகர்பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இந்த திருத்தப்பட்ட புதிய விலைகள் இன்று (18) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் அமுலுக்கு வரவுள்ளன.
அதன்படி ,
* கோதுமை மா-169.00 - 159.00
* பொன்னி சம்பா அரிசி-235.00 - 229.00
* உள்நாட்டு வெள்ளை நாடு அரிசி-209.00-204.00
* வெள்ளை பச்சை சம்பா அரிசி - 240.00 -235.00
* சிவப்பு நாடு அரிசி - 239.00 - 234.00
* சம்பா சிவப்பு பச்சை அரிசி - 229.00 - 224.00
* பெரிய கடலை - 344.00 - 339.00
* வெள்ளை பச்சை அரிசி - 199.00 - 196.00
* வெள்ளை சீனி - 219.00 - 217.00
இன்று முதல் பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு லங்கா சதொச விற்பனை நிலையத்திலும் இந்த திருத்தப்பட்ட விலைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை ......!
No comments