எச்சரிக்கை !

எச்சரிக்கை !




எச்சரிக்கை !




எச்சரிக்கை !


மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை அறிவித்தல், இன்று பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், அந்தப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




9 மாதங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 364!


இந்த ஆண்டின் கடந்த முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 364 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

குறிப்பிட்ட காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 114 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய 9,613 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் அதிகளவிலான (1,554 முறைப்பாடுகள்) கடந்த செப்டம்பர் மாதத்திலேயே பதிவாகியுள்ளன.

 

இந்த முறைப்பாடுகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான 169 முறைப்பாடுகள், பாலியல் அத்துமீறல் தொடர்பான 8 முறைப்பாடுகள், சிறுவர் கடத்தல் தொடர்பான 40 முறைப்பாடுகள், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களைப் பயன்படுத்துவது தொடர்பான 37 முறைப்பாடுகள் மற்றும் சிறுவர்களைக் கொடூரமாக நடத்துவது தொடர்பான 1,889 முறைப்பாடுகள் அடங்குகின்றன.

 

இது தவிர, இந்த ஆண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் சிறுவயது கர்ப்பம் தொடர்பான 51 முறைப்பாடுகள், சிறுவர் திருமணம் தொடர்பான 9 முறைப்பாடுகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.

 

அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான இணையவழி வன்முறைகள் தொடர்பான 196 முறைப்பாடுகளும், குடும்ப வன்முறைகள் தொடர்பான 46 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 


இலங்கையில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கம்: முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

 

இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம், புதுப்பிக்கத்தக்க சக்தி, சுற்றுலாத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற '2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில்' (Sri Lanka Economic and Investment Summit 2026) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

முதலீடுகளுக்குப் உகந்த சூழலை உருவாக்குவதற்காக வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக முறைமையைப் பேணுதல், தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திலும் (Budget) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அத்துடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து சிறப்பாகச் செயல்படக்கூடிய வலுவான வணிகச் சமூகம் நாட்டிற்கு அவசியமானது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் இணைந்துகொள்ளுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

 

 

 

 

 இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குள் போதைப்பொருள் விநியோகம்: பெண்கள் உள்ளிட்ட ஜமைக்கா பிரஜைகள் கைது!

 

கொழும்பிலுள்ள இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாகக் கூறப்படும் நான்கு ஜமைக்கா பிரஜைகள், கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (12) கொள்ளுப்பிட்டியிலுள்ள உணவகம் மற்றும் வணிக வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குவதாகப் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

யோஷித ராஜபக்‌ஷ, முன்னாள் கடற்படைத் தளபதி தொடர்பான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஓப்ஃ த ப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, இந்த மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

 

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் உள்ள இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

 

இதன்போது, வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தார்.

 

2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், யோஷித ராஜபக்‌ஷவை பிரித்தானியாவில் உள்ள ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி நெறியில் பங்கேற்கச் செய்வதற்கு முறையற்ற வகையில் ஏற்பாடுகளைச் செய்ததன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக வசந்த கரன்னாகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

இந்த நடவடிக்கையின் மூலம் முறையற்ற அனுகூலத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்‌ஷ மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.





புதிய 75 எரிபொருள் நிலையங்கள்! ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்புக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன?

 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் புதிதாக 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களை அதிகளவில் சார்ந்துள்ள பகுதிகளில், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

களஞ்சியங்களில் எரிபொருள் கையிருப்பில் இருந்தும், சில தனியார் நிறுவனங்கள் அதன் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்த ஜனாதிபதி, தனியார் நிறுவனங்கள் இலங்கையின் எரிபொருள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் போட்டியை ஊக்குவிப்பதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

எனினும், சில தனியார் நிறுவனங்களால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு இணையாக எரிபொருளை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எச்சரிக்கை !


No comments

Theme images by fpm. Powered by Blogger.