இலங்கையை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு........ - !
இலங்கையை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு........ - !
இலங்கையை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு........ - !
அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெறும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டப்படிப்பு முடித்தவுடன் இலங்கையை விட்டு வெளியேறுவதாக புதிய புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு வெளியேறுவோர் மீண்டும் நாட்டுக்கு வருவதில்லை என ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோர் நடத்திய ஆய்விற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
விசேடமாக அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் துறைகளில் கற்ற மாணவர்களின் இடம்பெயர்வு மேலும் அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக கல்விக்காக 87 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. இந்த பணம் வரி செலுத்துவோரின் மூலமாக நேரடியாகவும், பல்கலைக்கழகங்களின் சொந்த வருமானம் மூலமும் செலவிடப்படுகின்றது.
ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவருக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 400,000 முதல் 1.4 மில்லியன் ரூபாய் வரை செலவிடுகிறது.
இலவச கல்வி பெற்ற மாணவர்கள் இலங்கையை விட்டு சென்றுவிட்டால், அதற்கு அரசாங்க செலவினை திருப்பிச் செலுத்தும் ஒரு பொறுப்புணர்வு அவசியமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டை நிரந்தரமாகவோ, நீண்டகாலத்திற்கு விட்டு செல்லும் பட்டதாரிகள் குறைந்தது 10,000 – 15,000 டொலர்கள் வரை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். அல்லது தங்கள் குடும்பத்தினருக்காக ஆண்டுக்கு 50,000 டொல் வரை வரை நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் நாட்டில் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது. வேலையின்மை மற்றும் குறைந்த ஊதிய வாய்ப்புகள் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாடு செல்லுமாறு தூண்டுகின்றனர்.
இந்த ஆய்வு இன்னும் தொடரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தொழில்துறை வலயங்கள்: ரொக்ஸ் குழுமம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் (MSB) தலைவர் டிரன் அன் துவன் (Tran Anh Tuan) உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் தற்போதைய ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக ரொக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர்.
அதன்படி, இந்நாட்டில் ஒரு தொழில்துறை வலயத்தை நிறுவுவதற்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதேபோன்று புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் ஆதன விற்பனைத் துறைகளில் முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக காணியை அடையாளம் காணவும், தேவையான நிறுவன ஆதரவைப் பெறவும் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் ஊழல் இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், முதலீடுகளுக்கு நிறுவன மட்டத்தில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்நாட்டில் பாரிய அளவிலான முதலீடுகளுக்குத் தயாராக இருப்பதாகவும் ரொக்ஸ் குழுமத்தின் தலைவர் உட்பட ஏனைய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ரொக்ஸ் குழுமத் தலைவர் குயென் தி குயெட் ஹுவொங் (Nguyen Thi Nguyet Huong), பிரதான அதிகாரி (வலுசக்திப் பிரிவு) லு லெ சி( Luu Le Chi) ஆகியோருடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
இலங்கை பெயரில் --- எந்த செயற்கைக்கோளும் இல்லை!
சர்வதேசத் தொலைத்தொடர்பு தரவுகளின்படி, இலங்கையின் பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் இல்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union - ITU) என்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. இதில், இலங்கை சார்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுப்பினராக உள்ளது.
ITU தரவுகளின்படி, புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கைக்காக 121.5 மற்றும் 50 ஆகிய இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த இடங்களில் ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, நேபாளம், தஜிகிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் தங்கள் செயற்கைக்கோள்களை இயக்க முடியும்.
இந்த இரண்டு சுற்றுப்பாதைகளிலும் தற்போது இலங்கை என்ற பெயரில் எந்தச் செயற்கைக்கோளும் இல்லை என்பது ITU மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுப்ரீம் சாட்-1 (SupremeSAT-1) என்ற செயற்கைக்கோள் ITU மூலம் இயக்கப்படுகிறதா என ஆராயப்பட்டபோதும், அவ்வாறு எதுவும் இல்லை என உறுதியானதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக --- அமெரிக்கா ஆழ்ந்த கவலை
அரசு காவலில் உள்ள தனிநபர்களின் கொலைகள், காவலில் உள்ள சந்தேக நபர்களின் கொலை, பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மனித உரிமைகள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஏழு காவல் மரணங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
‘போராட்டத்திற்கு’ப் பிறகு 2022 தேர்தல்களில் மகத்தான வெற்றியில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ‘குறைந்தபட்ச நடவடிக்கை’ மட்டுமே எடுத்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கான சித்திரவதை குற்றச்சாட்டுகள் மற்றும் கைதுகள், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துதல் மட்டுமல்லாமல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் பிற பிரச்சினைகள், பெண்களை கட்டாயமாக கருத்தடை செய்தல், போர்க்கால காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணையில் மெதுவான முன்னேற்றம் மற்றும் மனித புதைகுழிகள் ஆகியவையும் இந்த அறிக்கையில் அடங்குகின்றன.
போராட்டங்களை அடக்குவதற்கு இணைய பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையையும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கையைப் பற்றி மட்டுமல்ல, பல நாடுகளைப் பற்றிய தகவல்களும் உள்ளன.
வரவு செலவுத்திட்டத்திற்கு முந்தைய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு முந்தைய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
விவசாய, கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் தனித்தனி கலந்துரையாடல்களை நடத்திய ஜனாதிபதி, அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்த்து தரவுத்தளமொன்றைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் திட்டமிடும்போது நாட்டை தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அதன்படி, விவசாயம், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளில் பரந்த அளவில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அதேவேளை உள்ளூர் பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளை கைத்தொழில்களாக மேம்படுத்த இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் போதாது என்றும், சம்பந்தப்பட்ட திட்டங்களின் நன்மைகள் மக்களுக்குச் செல்கிறதா என்பதை ஆராய்ந்து தேவையான பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
பத்து இலட்சம் பேரை ஜப்பான் இழந்துவிடும்
ஜப்பானில் மக்கள் தொகை அண்மைக்காலமாக வெகுவாக சரிந்து வரும் நிலையில், 2025 இறுதிக்குள் 10 இலட்சம் பேரை ஜப்பான் இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் தொகை பிரச்சினையை சமாளிக்க செயற்கை நுண்ணறிவுதான் ஒரே வழியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில், பிறப்பு விகிதத்துக்கும் இறப்பு விகிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டு அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் குறைந்துவரும் மக்கள் தொகையானது கவலைதரும் சவாலான விடயமாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ செலவினங்கள், சமூக சேவை தொடர்பான அழுத்தங்களால், மக்கள் தொகை குறைவதால், தொழிலாளர் வளம் குறையும், புவியியல் அமைப்பில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இங்கு பிரச்னைகளை கையாள செயற்கை நுண்ணறிவுதான் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு மக்கள் தொகை வீழ்ச்சியால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகத்தின் மீதான தாக்கங்களை செயற்கை நுண்ணறிவு தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்
இலங்கையை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு........ - !
No comments