அரச வேலைக்காக காத்திருப்போருக்கு ---- வெளியான தகவல்..... - !
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு ---- வெளியான தகவல்..... - !
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு ---- வெளியான தகவல்..... - !
பொதுச்சேவையில் கடந்த 8 மாதங்களில் 62,000க்கும் மேற்பட்டோரை உள்வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவைக்கேற்பவே அரச நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், “இதுவரை காலமும் பட்டதாரிகளுக்கு அரசியல் ரீதியாகவே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமையவே அந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
எனினும் யார் நியமனத்தை வழங்கியிருந்தால் ஆட்சியிலிருக்கும் எந்தவொரு அரசாங்கமாயினும் அவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதை தவிர்க்க முடியாது.
எனவே இனிவரும் காலங்களில் தேவைக்கேற்பவே அரச நியமனங்கள் வழங்கப்படும் என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம்.
இதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய இடைக்கிடை பல நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த 8 மாதங்களில் 62,314 பேரை அரச சேவையில் உள்வாங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில நியமனங்கள் நிறைவடைந்துள்ளன. சிலவற்றுக்கு போட்டிப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. சிலவற்றுக்கு நேர்காணல்கள் இடம்பெறவுள்ளன.
இந்த 62,314 நியமனங்களில் பாதுகாப்பு அமைச்சு, தபால் திணைக்களம் உள்ளிட்ட பல துறைகள் உள்ளடங்குகின்றன. ஒரே சந்தர்ப்பத்தில் 50,000 முதல் 60,000 பேருக்கு நியமனத்தை வழங்கி நெருக்கடிகளை உருவாக்க நாம் விரும்பவில்லை.
எனவே தேவைக்கேற்ப உரிய கால கட்டத்தில் நியமனங்கள் வழங்கப்படும். எனவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு நியமனங்களைக் கோர வேண்டியதில்லை“ என தெரிவித்தார்.
வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்
குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
அதன்படி, இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி ஒரு மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டார்.
இருப்பினும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசைக் காட்டி பண மோசடி செய்த அதிகாரி கைது
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ருமேனியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உதவியாளராக வேலை வாங்கித் தருவதாக கூறி, 2023 ஆம் ஆண்டு முதல் பல சந்தர்ப்பங்களில் தன்னை ஏமாற்றி வருவதாக பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேற்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ளதோடு, கைது செய்யப்படும் போது சந்தேகநபர் அந்த நிறுவனத்தின் கணினிப் பிரிவில் உதவி முகாமையாளராக பணிபுரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இன்று (13) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையை சீதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பெருமளவான கஞ்சா போதைப்பொருள் மீட்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை கடற்கரை பகுதியில் நிலத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற மன்னாரில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர் நிலத்தின் கீழ் புதைத்து வைத்திருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேலணையை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கஞ்சா போதைப்பொருளை இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வந்து , அவற்றை கடற்கரையை அண்டிய பகுதியில் நிலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதையை கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெவ சந்தியில் நேற்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியில் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று துவிச்சக்கரவண்டியை தள்ளிக்கொண்டு பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அந்நபர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி மரணித்துள்ளார்.
உயிரிழந்த நபர் 54 வயதுடைய நொச்சியாகம, மொரவக கந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சடலம் தற்போது நொச்சியாக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெலிகொப்டர் விபத்து ; விமானி வழங்கிய வாக்குமூலம்
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு தெஹியத்தகண்டிய நீதவான் பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார்.
ஹெலிகொப்டர் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.
விமான விபத்து தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு ---- வெளியான தகவல்..... - !
No comments