புதிய விசாரணைப் பிரிவு ஆரம்பம்......... - !
புதிய விசாரணைப் பிரிவு ஆரம்பம்......... - !
புதிய விசாரணைப் பிரிவு ஆரம்பம்......... - !
குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க இலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குற்றச் செயல்கள் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துச் சட்டத்தின்படி இந்த விசாரணை பிரிவு தொடங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
நேற்று (23) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
PCID என்ற குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஊடகங்களிடம் கருத்துரைத்த பிரதி பொலிஸ்மா அதிபர், விரைவில் தொடங்கப்பட உள்ள புதிய விசாரணைப் பிரிவு, பொலிஸ்மா அதிபரின் தலைமையில் பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விசேட நடவடிக்கைகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் 4.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் கூறினார்.
அவற்றில் கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள், காணிகள், நகைகள், படகுகள் மற்றும் 57 மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அடங்கியுள்ளன.
அதன்படி, பணமோசடிச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இலக்கத்தகடு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு...
நீண்டகாலமாக நிலவும் வாகன இலக்கத்தகடு பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட டெண்டர் குழு,கிடைப்பெற்ற டெண்டர்களை மீளாய்வு செய்து வருகிறது. குறித்த குழு டெண்டர் ஏலங்களை அதிகாரப்பூர்வமாகத் திறந்து சிறந்த வழங்குனரை விரைவில் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''இந்த நடவடிக்கை முடிந்ததும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்க தகடுகளை விநியோக்கும்.
தற்போது, 15,000 க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வான்கள் மற்றும் 80,000 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகாரப்பூர்வ இலக்க தகடுகளை வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு பெப்ரவரியில் தனியார் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் இந்த வாகனங்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டனவாகும்.
பெண்ணை துண்டாக்கி வீசிய காதலன்
திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி, இளம்பெண்ணொருவரின் தலையும் உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.
பொலிஸ் விசாரணையில், அது Mahewa என்னுமிடத்தில் காணாமல் போன ரச்னா யாதவ் (35) என்னும் பெண்ணுடைய உடல் என தெரியவந்தது.
ரச்னா, கிராமத் தலைவரான சஞ்சய் பட்டேல் (25) என்பவருடன் இரண்டு ஆண்டுகளாக தொடர்பிலிருந்தது தெரியவந்தது. ரச்னா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சஞ்சயை வற்புறுத்திவந்ததுடன் அவரை அவ்வப்போது மிரட்டி பணமும் வாங்கிவந்துள்ளார்.
எப்படியாவது ரச்னாவை ஒழித்துக்கட்ட முடிவு செய்த சஞ்சய், தன் உறவினரான சந்தீப் பட்டேல் மற்றும் தீபக் அஹிர்வார் ஆகியோருடைய உதவியுடன் ரச்னாவைக் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.
பின்னார் ரச்னாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அவரது கைகளையும் உடலையும் ஒரு கிணற்றிலும், தலையையும் கால்களையும் ஒரு நதியிலும் வீசியிருக்கிறார்கள்.
சஞ்சயும் சந்தீப்பும் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகிவிட்ட தீபக்கைக் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு 25,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளார்கள்.
சிங்கப்பூரிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான நேற்று (22) சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் அவர்களை அவர் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் இலங்கையின் சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் எஸ். சந்திரா தாஸ் மற்றும் பேட்ரிக் டேனியல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதில் இரு தரப்பினரும் சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்குக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
1950 மற்றும் 1960களில் சிங்கப்பூர் இலங்கையின் வளர்ச்சி நோக்குநிலையைப் பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்து, தற்போது காணப்படும் விரைவான வளர்ச்சியை அடைந்தது.
ஆனால் இன்று இலங்கை வெற்றியின் முன்மாதிரியாக சிங்கப்பூரைப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
ஒரு நாடாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று, சமூக-பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதார சேவைத் துறைகளில் சிங்கப்பூர் அடைந்த முன்னேற்றத்திலிருந்து இலங்கைக்குக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் குறித்து அமைச்சர் கே. சண்முகம் கருத்துத் தெரிவிக்கையில், தனது தேசம் விரைவான முன்னேற்றத்தை அடைவதற்கு நீண்டகால நோக்கத்துடன் செயல்பட்டது என்றும், சிங்கப்பூர் கணிசமான சவால்களை எதிர்கொண்டது, தூரநோக்குத் திட்டமும், ஆட்சி குறித்த மரபுவழி முடிவுகளும், பிரதமர் லீ குவான் யூவின் உறுதியான தலைமையும், துணிச்சலான முடிவெடுத்தலும் மூலம் நாடு புதிய பாதையில் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்கால வெற்றி தேசிய ஒற்றுமை, நிறுவன ஒருமைப்பாடு மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒழுக்கமான, நீண்டகால நோக்கத்தைப் பின்பற்றுவதில் தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.
சிங்கப்பூரின் முன்மாதிரியிலிருந்து உத்வேகம் பெறுவதன் மூலம், இலங்கைக்கு ஸ்திரத்தன்மை, செழுமை மற்றும் சமூக முன்னேற்றம் நோக்கிய நிலையான பாதையை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதியை சந்தித்த 07 புதிய தூதரகத் தலைவர்கள்
07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியை நேற்று (22) சந்தித்தனர்.
இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது ஒரு தூதுவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதரகத் தலைவர்களுடன் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தூதரகப் பிரதானிகளை வாழ்த்திய ஜனாதிபதி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாகச் செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உன்னிப்பாகக் கவனம் செலுத்தி உடனடியாகத் தலையிடுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், எனவே நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறிப்பாக வெளிநாட்டு வருமானம் ஈட்டுவதில் முதலீடு, ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய 04 துறைகளில், தூதரகங்களுக்கு விசேட பொறுப்பு இருப்பதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பொருளாதாரத்தின் வெளிப்புற ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் முக்கிய காரணியாக இருக்கும் அனைத்து அந்நிய செலாவணி வழிகளும் தூதரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். மேலும், வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகளைச் செய்வது காலத்தின் தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட புதிய இராஜதந்திரிகள் பின்வருமாறு.
1. இந்தோனேசியத் தூதுவர் - எஸ்.எஸ். பிரேமவர்தன
2. பிரேசில் தூதுவர் - சி.ஏ.சி.ஐ. கொலொன்ன
3. மாலைதீவு உயர்ஸ்தானிகர் - எம்.ஆர். ஹசன்
4. துருக்கியின் தூதுவர் - எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி.பி. கதுருகமுவ
5. நேபாளத் தூதுவர் - ருவந்தி தெல்பிடிய
6. தென் கொரியாவின் தூதுவர் - எம்.கே. பத்மநாதன்
7. ஓமான் தூதுவர் - டபிள்யூ.ஏ.கே.எஸ். டி அல்விஸ்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதிய விசாரணைப் பிரிவு ஆரம்பம்......... - !
No comments