கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின..... - !
கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின..... - !
கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின..... - !
2022/2023(2025) ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்ச்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்களைப் பார்வையிட்டு முடிவுகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு 2025.05.19 முதல் 2025.05.25 வரை நடைபெற்றது, இதில் 238 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ரணிலை சந்திக்க --- சிறைச்சாலைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் பலர் மற்றும் அரசியல்வாதிகள் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உடல் நலக் குறைவின் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை --- தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பில் பணியாற்றவும் - கோப் குழு
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தமது பிரதான பணியான 'ஒழுங்குபடுத்தல்' பணியை முறையாக செய்வதற்கு தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பில் பணியாற்றுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) ஆலோசனை வழங்கப்பட்டது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனைப் பரிசீலிப்பதற்காக, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், 2008 மே 22ஆம் திகதிய 1550/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் 07 மற்றும் 08 ஆம் பிரிவுகளின்படி, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அறவிடப்பட்ட வெளிநாட்டு விற்பனைக்கான மிகைக்கட்டணம் (OSS) ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைக்கப்பட வேண்டுமாக இருந்தாலும், வர்த்தமானி அறிவிப்பு வெளியானதிலிருந்து, இந்த வெளிநாட்டு விற்பனைக்கான மிகைக்கட்டணம் ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைக்கப்படாமல், அதிகாரசபையின் வருமானமாகவே அடையாளம் காணப்பட்டு, அதிகாரசபையினால் தக்கவைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், 2023 நவம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, அறவிடப்பட்ட இந்த வருமானத்தில், அதிகாரசபையின் செலவுகளுக்காக மாதாந்தம் 90 மில்லியன் ரூபாய் தக்கவைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை திறைசேரிக்கு அனுப்பப்பட வேண்டும் என்றாலும், 2018 முதல் 2023 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட 20,630 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்பது கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு தக்கவைக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்படும் வருமானமே இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதானமான வருமான வழியாகும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
எவ்வாறாயினும், தக்கவைக்கப்பட்ட இந்த நிதி மூலம் ஒழுங்குபடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெற்றனவா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியதுடன், இந்த நிதி தொடர்பான அமைச்சரவை தீர்மானமும் மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் வீரவிலவில் பராமரிக்கப்படும் பங்களாவின் புனரமைப்புப் பணிகள் குறித்து குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கொள்வனவுத் திட்டத்தில் 4.5 மில்லியன் ரூபாய்க்கு அங்கீகரிக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகளின் இடைநடுவில் அது 24 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகளிடம் குழு வினவியது.
எனினும், இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்தத் தகவல்கள் சரியானவை அல்ல என்றும், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பின்னர் கணக்காய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அதற்கமைய , சரியான தகவல்களை கணக்காய்வுக்கு வழங்காதது குறித்து குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சரியான தகவல்களை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், கட்டுநாயக்கவில் அமைந்துள்ள அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், அதற்கு முன்னர் இருந்த பிரதான குறைபாடுகள் அப்படியே தொடர்வதாக பௌதீக பரிசோதனைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கதவுகளைப் பழுதுபார்ப்பதற்காக மாத்திரம் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது குறித்தும் இதன்போது குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, இந்தக் கட்டடங்களில் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட செயன்முறை குறித்து மீண்டும் முழுமையான விசாரணை நடத்துமாறு குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் நிலவும் பணியாளர் வெற்றிடங்கள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, தற்போது 14 சிரேஷ்ட நிலை வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிலவி வருவது குறித்து அதிகாரிகளிடம் குழு வினவியது.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொள்ளும் பணிகளின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன், திறன் மற்றும் அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் சம்பள வேறுபாடுகள் காரணமாக இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதில்லை எனத் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் சம்பந்தப்பட்ட அனுமதிகள் கிடைத்தவுடன் இந்த பதவிகள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், தற்போது இலங்கையைப் பற்றி பிரஜைகளிடையே ஒரு நல்ல மனப்பாங்கு உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக திறமையும் தகுதியும் கொண்டவர்கள் சம்பளத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொழில்களின் மீதுள்ள விருப்பம் காரணமாக பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் உள்ள பதவிகளுக்கான சம்பளங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
அத்துடன், இந்தத் துறை தொடர்பான அறிவுடைய நபர்களை நாட்டிற்கு உருவாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் குழு அறிவுறுத்தியது.
ரயில் சேவை - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும் நாளை (24) பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தின் பல ரயில் சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்துள்ளார்.
அதன்படி, காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8319 மற்றும் மருதானை ரயில் நிலையத்திலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு காலிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8788 ஆகிய ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8327 சமுத்திரதேவி காலி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும்.
காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் ரயில் எண் 8320, காலை 08.50 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரசபை உபதலைவர், உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்!
சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால், கோவில்குடியிருப்பு உப்புக்கேணிக்குளம் தூர்வாரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுள்ளது.
தூர்வாரும் பணிகளை கண்காணிக்கச் செல்லும் நகரசபை உறுப்பினர்களை அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவதூறான வார்தைகளில் பேசி கலைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சபை அமர்வில் உறுப்பினர்களால் குறித்த விடயம் விவாதிக்கப்பட்டதோடு உறுப்பினர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து மாதாந்த அமர்வு நிறைவடைந்ததும் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உப்புக்கேணிக்கு களவிஜயம் மேற்கொண்டனர்.
இதன்போதும் குறித்த பெண் நகராட்சி மன்ற உறுப்பினர்களை தகாத வார்த்தைகளில் பேசியதோடு வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து உபதவிசாளர் கிஷோர் உறுப்பினர்களோடு மரியாதையோடு நடந்து கொள்ளுமாறும் நகரசபையின் பணிகளில் தலையிட வேண்டாம் எனவும் குறித்த பெண்ணை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் உபதவிசாளர் கிஷோர் மற்றும் வட்டார உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதனால் உபதவிசாளர் கிஷோர் மற்றும் உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
இதன்போது முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நகரசபையின் அபிவிருத்திப் பணிகளிலும் உறுப்பினர்களின் பணிகளிலும் குறித்த பெண் தலையிட முடியாது என்றும் அபிவிருத்தி பணிகளில் குறைபாடு இருந்தால் நகரசபைக்கு எழுத்துமூலமாக அறிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தி வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முடிவுறுத்தினார்.
ரணிலை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரை
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது.
அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் அதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர்.
அதன்படி, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதி இதற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின..... - !
No comments