செயற்கை நுண்ணறிவு குறித்து........!
செயற்கை நுண்ணறிவு குறித்து........!
செயற்கை நுண்ணறிவு குறித்து........!
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு கடந்த 16 ஆம் திகதி முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
‘AI for Transforming Public Service’ என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பத்து அமைச்சுக்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும், அரச சேவை அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் அரச சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இந்த செயலமர்வில் முக்கிய உரை நிகழ்த்தினார். இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க, ஸமிச அபேசிங்க செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர்.
தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிச்ச, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
நடுவானில் தீப்பற்றிய விமானம்
கிரீஸில் இருந்து ஜெர்மனி சென்ற போயிங் 757 விமானம் நடுவானில் தீப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் விமானம் அவசரமாக இத்தாலிக்கு திருப்பிவிடப்பட்டதுடன், பயணிகள் பாதுகாப்பாக தரை இறங்கப்படதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி கிரீஸ் நாட்டின் கோர்புவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் போயிங் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியுள்ளது.
விமானத்தில் 273 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சம்பவம் நடந்த நிலையில்,
இத்தாலியின் பிரிண்டிசி நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு நன்றி - பெருந்தோட்ட பிரதியமைச்சர் புகழாரம்!
சபரிமலை யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.
இதனை அறிவிக்க சபரிமலை புனித யாத்திரை தொடர்பான கலந்துரையாடலொன்று கொழும்பு-11, செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.
மஹா குரு - ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டதுடன் கடற்றோழில் நீரியல் வழங்கல் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத்தன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புக்கள், குரு சுவாமிகள் மற்றும் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் இருந்து வருகைதந்த ஐயப்பசாமி குருமார்களின் முக்கியஸ்தர்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பொறுப்பு வாய்ந்த அமைச்சை எனக்கு வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் திட்டம் நிறுத்தம்!
தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது.
தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அதிகாரபூர்வ தரப்புக்களின் தகவல்படி, நாடு திரும்பிய 54 வயதான ஒருவர், 2025 ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று 2025 மே 28, மற்றொரு தமிழ் ஏதிலி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பிறகு கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஐக்கிய நாடுகளின் உதவியில்லாமல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இலங்கை தமிழ் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 1996 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் ஏதிலிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இலங்கையின் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பொலஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளை இலங்கை அதிகாரிகள் கைது செய்வது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகின்றது.
2002 முதல், யு.என்.எச்.சீ.ஆர் என்ற ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் 18,643 இலங்கை தமிழ் ஏதிலிகளை, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே தற்போதைய நடவடிக்கைக்கான காரணம் என்று ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
பொதுவில், இன மோதலில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பயந்து ஏதிலிகள் நாட்டை விட்டு வெளியேறியதால் குடியேற்றச் சட்டங்களை மீறுவது மன்னிக்கப்படுகிறது என்றும் அந்த உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம், இராஜதந்திர வழிகளில் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
குடியேற்ற விதிகளை மீறியதற்காக இலங்கை ஏதிலிகள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை, அவர்களை திருப்பி அனுப்பும் செயல்முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பணம் அச்சிடுவது குறித்து --- அரசாங்கத்திடம் இருந்து வந்த அறிவிப்பு
நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த 2014 ஆம் ஆண்டில் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகளுக்கு, புதிய இயந்திரக் கருவிகளைப் பயன்படுத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்தார்.
"நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையான அளவில் மட்டுமே பணம் அச்சிடுகிறோம். இது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறுகிறது. நீங்கள் பொருளாதாரத்தின் குறிகாட்டிகளைப் பார்க்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது, வருமான-செலவு இடைவெளியை 33%க்கும் அதிகமாகக் குறைத்துள்ளோம். கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அரச வருவாய் ரூ. 1.8 டிரில்லியனாக இருந்தது. இந்த ஆண்டு, இது ரூ. 2.3 டிரில்லியனாக உயர்ந்து, வருவாய் 24.7% அதிகரித்துள்ளது. செலவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரம் நிலையாக உள்ளது. எந்தச் சந்தேகமும் வேண்டாம்."
கேள்வி: பணம் அச்சிடப்படும்போது பணவீக்கம் அதிகரிக்காதா?
"அப்படியானால், பணவீக்கம் அதிகரித்திருக்க வேண்டும்தானே? அந்த ஒரு விடயத்தைப் பற்றி நீங்கள் யோசித்தால், தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. அவை நிலையாகிவிட்டன. பணவீக்கம் குறைந்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக பங்குச் சந்தை 20,000ஐ எட்டியுள்ளது. நீங்கள் தனிப்பட்ட புள்ளிவிவரங்களை எடுத்து அவற்றை முழுமையாக ஒப்பிட முடியாது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பொருளாதாரம் நிலையானது."
No comments