விந்தணு வங்கி சேவை மூலம் நடந்தது என்ன?
விந்தணு வங்கி சேவை மூலம் நடந்தது என்ன?
விந்தணு வங்கி சேவை மூலம் நடந்தது என்ன?
கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் தம்பதிகள் மற்றும் தனிநபர்களிடையே மலட்டுத்தன்மையை நிவர்த்தி செய்வதில் விந்தணு வங்கி பாரிய திருப்புமுனையை எற்படுத்தியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விந்தணு வங்கியில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள் விந்தணு தானம் செய்ய பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பத்து பெண்கள் கருத்தரித்துள்ளனர்.
மேலும் 200க்கும் மேற்பட்டோர் தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளனர். மலட்டுத்தன்மையால் போராடும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்குவதே இந்த சேவையின் முதன்மை நோக்கம் ஆகும்.
விந்தணு தானம் செய்ய விரும்பும் ஆண்கள், தானம் செய்வதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும், விந்தணுவை தானம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் உதவி கோரும் தம்பதிகள் வைத்தியசாலையை தினமும் தொடர்பு கொள்கிறார்கள்.
இந்தச் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்னர், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்துள்ளன.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 6.17 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகி இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் 6.24 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.
இணைய மோசடிகள் குறித்து காவல்துறை முக்கிய அறிவிப்பு!
இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட இலங்கை காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
"இணையம் வழியாக நடைபெறும் மோசடிச் செயல்கள், குறிப்பாக டெலிகிராம் (Telegram), வட்ஸ்அப் (WhatsApp) போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தினசரி பதிவாகின்றன.
இதில், மோசடிக்காரர்கள் தனிநபர்களை ஏமாற்றி, அவர்களது பயனர்பெயர், கடவுச்சொற்கள் (User Name/Password), QR குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
மேலும், இணையவழியான வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, பல்வேறு கணக்குகளுக்குப் பணத்தை வைப்பிலிடச் செய்து மோசடிகள் நடைபெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இணையத்தைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற மோசடிகள் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நீங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகக் கணக்குகளில் (டெலிகிராம்/வட்ஸ்அப் அல்லது வேறு) அறியப்படாத நபர்கள் மற்றும் அறியப்படாத குழுக்கள் மூலம் வழங்கப்படும் வருமான வழிகள் தொடர்பான மோசடியான தூண்டுதல்களுக்கு ஆளாகாமல் இருப்பது.
அறியப்படாத நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் வெளியிடும் இணைய இணைப்புகள் (Links) மற்றும் ஸ்கேன் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
இணைய வெளியிலுள்ள அறியப்படாத நபர்களின் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றுவது, அவர்களுடன் வங்கித் தகவல்களைப் பகிர்வது, உங்கள் வங்கிக் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பது ஆகியவற்றைத் தவிர்த்தல்.
கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள், OTP குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களை வெளி நபர்களுடன் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.
அறியப்படாத நபர்கள் வழங்கும் கைபேசி எப்ளிகேஷன்களை (Mobile Applications) நிறுவும்போதும் மற்றும் இணைய இணைப்புகளைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கவனமாக இருப்பதுடன், இலத்திரனியல் சாதனத்தின் இருப்பிட அனுமதியைக் (Location Permission) கொடுப்பதை தவிர்த்தல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

No comments