பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி --- விளக்கிய பிரதமர்.....!
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி --- விளக்கிய பிரதமர்.....!
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி --- விளக்கிய பிரதமர்
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
"6 ஆம் தரத்திற்காக, வயதுக்கு ஏற்ற வகையில் ஒரு புத்தகத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.
பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு, குறிப்பாகக் குடும்பநல சுகாதாரப் பிரிவு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
நம் நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்குக் பிள்ளைகள் உள்ளாகும் போக்கு அதிகரித்து வருவதால், இதிலிருந்து பாதுகாக்க பிள்ளைகளுக்கு இது பற்றி கற்பிக்க வேண்டும் என்று குடும்பநல சுகாதாரப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு தொடர்ந்து எங்களிடம் கூறி வருகின்றன.
அதேபோல், இது ஒரு பாரதூரமான பிரச்சினை என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் எங்களிடம் கூறியுள்ளது.
தங்களது உடலைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துக் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் அதிகார சபைகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அவர்களின் பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எந்த வயதில், எவ்வாறு, எப்போது இதை அறிமுகப்படுத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்தக் கலந்துரையாடல்களின்படி, பிள்ளைகளுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விதம் மற்றும் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வயதுக்கு ஏற்ற வகையில் சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
இந்தக் விடயங்களை நாங்கள் சுகாதாரத் துறையின் நிபுணர்களின் ஆலோசனையின்படியே செய்வோம்." என்றார்.
இணைய மோசடிகள் தீவிரம்; பொலிஸாரின் எச்சரிக்கை
இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.
மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர் நிகழ்நிலை (online) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.
அண்மைக்காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாகவும் கூறி, பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இணையத்தளத்தைப் பயன்படுத்தும் போது இத்தகைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயல்படுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் இன்று பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோஹோகுவின் கிழக்கே 10 கி.மீ ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் இவாட் மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடற்கரையோரத்தில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான தொடர்பில் ஆய்வு
இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவது தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் சமீபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு (2026-2035) செயல்படுத்தப்படவுள்ள தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப நாட்டின் இலவச சுகாதார அமைப்பை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்காகப் பின்பற்ற வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால முறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு மூலோபாய கட்டமைப்பை நிறுவுதல், டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சர்வதேச ஆதரவுடன் முக்கிய திட்டங்களை (HIQI, HSEP, PHSEP) ஏற்றுக்கொள்வது மற்றும் செயல்படுத்துதல், டிஜிட்டல் மாற்றத்திற்கான முக்கிய கருத்துக்கள் மற்றும் தேவைகள், வழிநடத்தல் குழு கருத்துக்கள், வரைவு கருத்துக்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டன.
தொடர்புடைய தரவுகளின் பாதுகாப்பான சேமிப்பு, மனிதவள மேம்பாடு மற்றும் இந்தப் பணியை திறம்பட நிறைவேற்றுவதற்குத் தேவையான பயிற்சி குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேற்கண்ட விடயங்கள் தொடர்பான சட்ட வரைவு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜுன திலகரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த மூத்த ஜனாதிபதி ஆலோசகர் வைத்தியர் ஹான்ஸ் விஜேசூரிய, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
வாகன விலையில் தாக்கம் ---- அரசாங்கத்தின் புதிய வரிகள்
அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள யோசனைகளின்படி பெறுமதி சேர்க்கப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்பு வரிகளின் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 150 பில்லியன் வரி வருமானத்தை நோக்காகக்கொண்டு, 25,000 முதல் 30,000 புதிய வரி கோப்புகள் திறக்கப்படும் என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில், இந்த இரண்டு வரிகளின் வரம்பு வருடம் ஒன்றுக்கு 60 மில்லியன்களில் இருந்து 36 மில்லியன் ரூபாய்களாக குறைக்கப்பட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டம் டிசம்பரில் நிறைவேற்றப்பட்டதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சமூக பாதுகாப்பு வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்த வாகன இறக்குமதியாளர்களும் புதிய வரி நடவடிக்கைகளின் கீழ் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை கொள்வனவு செய்ய ---- மக்களுக்கு வெளியான அறிவிப்பு
விலை ஏற்றத்தைத் தொடர்ந்து தற்போது சந்தை நிலைத்தன்மையை கொண்டிருப்பதால், நுகர்வோர் வாகனங்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
வாகன விலைகள் மீதான அண்மைய மேல்நோக்கிய அழுத்தம் தணிந்துள்ளது. தற்போது சந்தை மிகவும் சமநிலையான நிலையை எட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே கூறியுள்ளார்.
2026 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி குறித்து கருத்து தெரிவித்த மெரென்சிகே, இது ஒரு புதிய வரி அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
வாகன விற்பனைக்குப் பிறகு அல்லாமல் சுங்கத்தின்போது இந்த வரியை வசூலிக்கக் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விற்பனைக்குப் பிறகு வரி வசூலிப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு தேவையற்ற சிக்கல்களை உருவாக்கியதால் இந்த மாற்றம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி கையிருப்பில்
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 ஒக்டோபர் மாத இறுதியில் 6,216 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 2025 செப்டம்பர் மாத இறுதியில் பதிவான உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் பெறுமதியான 6,244 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 0.4% ஆல் சரிந்துள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு, உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களில் உள்ள பிரதான அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, 2025 ஒக்டோபர் மாதத்தில் 6,179 மில்லியன் டொலர்களிலிருந்து 6,100 மில்லியன் டொலர்கள் வரை 1.3% இனால் குறைவடைந்தமை பிரதான காரணமாகும்.
எனினும், 2025 ஒக்டோபர் மாதத்தில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 58 மில்லியன் டொலர்களிலிருந்து 80 மில்லியன் டொலர்கள் வரை, 36.6% இனால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
கடந்த மாதத்தில் உலகளாவிய தங்க விலை வேகமாக அதிகரித்ததன் காரணமாகவே மத்திய வங்கியின் தங்க கையிருப்பு பெறுமதியும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

No comments