வான்பரப்பில் நீண்ட நேரமாக வட்டமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விமானம்

 வான்பரப்பில் நீண்ட நேரமாக வட்டமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விமானம்... . - !





வான்பரப்பில் நீண்ட நேரமாக வட்டமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விமானம்





வான்பரப்பில் நீண்ட நேரமாக வட்டமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விமானம்



தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK733, பாதுகாப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  தரையிறங்கியது


202 பயணிகளுடன் கொழும்பிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட குறித்த விமானத்தில், பயணத்தின் போது திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு அவதானிக்கப்பட்டது. 


அதாவது, பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார். 


அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார். 


இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாகத் தரையிறக்க முடியாமல் போயுள்ளது. 


அதனை தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியுள்ளார்.


தொடர்ந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.


பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு



ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து 5 இலட்சம் யூரோ (500,000 Euro) பெறுமதியான 69,000 கிலோகிராம் எடையுடைய அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு விசேட சரக்கு விமானம் ஒன்று இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 


இந்த விமானத்தில் கூடாரங்கள், சமையல் உபகரணங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.


குறித்த நிவாரணப் பொருட்களை ஏற்றிய போயிங் - 747 (Boeing-747) ரக பாரிய சரக்கு விமானம், இன்று அதிகாலை 04.30 மணியளவில் லீக்  நகரிலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்தது. 


இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக இலங்கைக்கான ஜேர்மனிய பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிபொன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.




 இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்!



இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்


இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 


எதிர்வரும் ஐ.சி.சி. ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்  நிறைவடையும் வரையில் இவரது பதவிக்காலம் செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது. 


இந்திய அணியின் களத்தடுப்புத் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றிய ஸ்ரீதர், தற்போது இலங்கை அணியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



2026 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விலை அதிரடியாக குறைப்பு



2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் நுழைவுச்சீட்டுக்களின் விலைகள் தொடர்பான விமர்சனங்களை அடுத்து, ஃபிபா 60 அமெரிக்க டொலர் விலையிலான மலிவு விலை நுழைவுச்சீட்டுக்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

104 போட்டிகளுக்கும் குறைந்த விலையிலான நுழைவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

 

இது தகுதிபெற்ற நாடுகளின் உண்மையான ரசிகர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு கால்பந்து சங்கத்திற்கும் ஒதுக்கப்படும் நுழைவுச்சீட்டுக்களில் 10 வீதம் இந்த ஆதரவாளர் நுழைவு அடுக்கு எனும் குறைந்த விலைப்பிரிவின் கீழ் வரும். 

 

இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளின் குழுநிலை போட்டிகளுக்கு தலா 400 நுழைவுச்சீட்டுக்கள் இந்த விலையில் கிடைக்கும். 

 

மொத்த ஒதுக்கீட்டில் 50 வீதம் மலிவு விலையிலும் மீதமுள்ள 50 வீதம் ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியர் பிரிவுகளாகவும் பிரிக்கப்படும். 

 

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த முடிவை வரவேற்றாலும், சாதாரண ரசிகர்கள் போட்டிகளைக் காண இன்னும் அதிகமான நடவடிக்கைகளை ஃபிபா எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

 

கால்பந்து ஆதரவாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை ஒரு "வெற்று சைகை" என வர்ணித்துள்ளதுடன், இது ரசிகர்களை ஏமாற்றும் ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளது. 

 

ஆரம்பத் திட்டத்தின்படி, ஒரு ரசிகர் இறுதிப் போட்டி வரை இங்கிலாந்தைப் பின்தொடர 5,000 யூரோவுக்கும் மேல் செலவாகும் நிலை இருந்தது. 

 

இந்த நுழைவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொறுப்பு அந்தந்த நாடுகளின் கால்பந்து சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 

தகுதியான ரசிகர்களைத் தெரிவு செய்வதற்கான விதிகளை அந்தந்த சங்கங்களே தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதிக தொகைக்கு வாங்கப்பட்ட முதல் 10 வீரர்கள் பட்டியல்



2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 77 இடங்களை நிரப்புவதற்காக, 10 ஐபிஎல் அணிகள் ரூ.215.45 கோடியை செலவு செய்துள்ளன. 


இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட முதல் 10 வீரர்களை பார்க்கலாம். 


 கேமரூன் கிரீன் - ரூ. 25.20 கோடி (KKR )


அவுஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், 2026 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக உள்ளார். 


ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR ) அணி அவரை ரூ.25.20 கோடிக்கு வாங்கியுள்ளது.


முன்னதாக மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ளார்.


 மதீஷா பத்திரன - ரூ 18 கோடி(KKR )


இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR ) அணி ரூ.18 கோடிக்கு வாங்கியுள்ளது. 


இவரின் அடிப்படை விலை ரூ.2 கோடி ஆகும். 2022 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வந்துள்ளார்.


 பிரசாந்த் வீர் - ரூ.14.20 கோடி (CSK)


சர்வதேச போட்டிகளில் விளையாடாத உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீர், என்பவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலை ரூ.30 லட்சம் ஆகும்.


 கார்த்திக் சர்மா - ரூ.14.20 கோடி (CSK)


ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது விக்கெட் கீப்பரான கார்த்திக் சர்மா என்பவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலை ரூ.30 லட்சம் ஆகும்.  


 லியாம் லிவிங்ஸ்டோன் - ரூ. 13 கோடி (SRH)


இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை, ரூ.13 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி வாங்கியுள்ளது.


முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார். 


 முஸ்தாபிசுர் ரஹ்மான் - ரூ. 9.20 கோடி (KKR)


வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை, ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR ) அணி வாங்கியுள்ளது.


முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.


 ஜோஷ் இங்கிலிஸ் - ரூ. 8.60 கோடி (LSG)


அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி ரூ.8.60 கோடிக்கு வாங்கியுள்ளது. 

முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.


 ரவி பிஷ்னோய் - ரூ 7.20 கோடி (RR)


இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை , ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி ரூ.7.20 கோடிக்கு வாங்கியுள்ளது.


முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.


 ஜேசன் ஹோல்டர் - ரூ. 7 கோடி (GT)


மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி ரூ.7 கோடிக்கு வாங்கியுள்ளது. 


முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.


 தேஜஸ்வி தஹியா - ரூ 3 கோடி (KKR)


இளம் விக்கெட் கீப்பரான தேஜஸ்வி தஹியாவை ரூ.3 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR ) அணி வாங்கியுள்ளது. 



பண பாவனை தொடர்பில் எச்சரிக்கை



பண்டிகைக் காலத்தில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளமை குறித்து பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் தெரிவித்துள்ளார்.


பணத் தாள்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.


2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட பெரும்பாலான போலி பணத் தாள்கள் 5000 ரூபாய் நாணயத்தாள்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


2024 ஆம் ஆண்டில், குற்றப் புலனாய்வுத் பிரிவினால் போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 596 கைப்பற்றப்பட்டன.


2025 ஆம் ஆண்டில் இதுவரை போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 535 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


போலி பணத்தாள்கள் அச்சிடுதல், அவற்றை வைத்திருத்தல் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடுவதற்கான உபகரணங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



 வானிலை முன்னறிவிப்புக்காக  ----  புதிய கருவிகளை அறிமுகம் 



இலங்கையின் கடும் வானிலை முன்னறிவிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ரேடார் (Doppler radar) கட்டமைப்பை நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

 

இலங்கை அரசாங்கம் இந்த டொப்ளர் ரேடாரை ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. 


இந்த ரேடார் கட்டமைப்பு 2027 ஆம் ஆண்டளவில் முழுமையாகச் செயற்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தத் திட்டம் வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் ஒரு முக்கிய மேம்படுத்தலாகக் கருதப்படுவதுடன், இதனுடன் மேலதிக அத்தியாவசிய உபகரணங்களும் வழங்கப்படும். 

 

இது 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டொப்ளர் ரேடார் அல்ல. முற்றிலும் புதியதொரு கட்டமைப்பாகும். 

 

நாட்டில் இரண்டு ரேடார் கட்டமைப்புகள் இருப்பது, வானிலை தகவல்களை அதிக துல்லியத்துடன் வழங்க உதவும் என அமைச்சர் குறிப்பிட்டார். 

 

இந்தத் திட்டம் வெறும் வானிலை முன்னறிவிப்புடன் மாத்திரம் நின்றுவிடாமல், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.





வான்பரப்பில் நீண்ட நேரமாக வட்டமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விமானம்

No comments

Theme images by fpm. Powered by Blogger.