பரபரப்பாகும் இலங்கை அரசியல்.. ..............!
பரபரப்பாகும் இலங்கை அரசியல்.. ..............!
பரபரப்பாகும் இலங்கை அரசியல்
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், தான் அதிலிருந்து விலகத் தயார் என பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர், இன்று (23) காலை நாட்டிற்கு வருகை தந்தார்.
அதன் பின்னர் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டார்.
“ஜனாதிபதியை நீக்க முடியவில்லை. குறைந்தபட்சம் பிரதமரையாவது நீக்க முயற்சி செய்தார்கள் தானே. எங்கே அது? நான் இன்று காலை வந்ததும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கவே ஓடிவந்தேன்.
அது வரும் வரை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொண்டு வரவில்லையா? வீண் வேலை. நாங்கள் தயாராகவே இருந்தோம்.”
“நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரத் தேவையில்லை. பிரதமர் மாற வேண்டும் என இந்நாட்டு மக்கள் தீர்மானித்தால்… நாங்கள் வீட்டுக்குச் செல்லவும் தயார்.
நாங்கள் இந்நாட்டு மக்களுக்கே பொறுப்புக்குரியவர்கள். அதற்கமைய நாங்கள் செயற்படுவோம்,” எனவும் அவர் தெரிவித்தார்.
தெற்கு அதிவேக வீதியில்
தெற்கு அதிவேக வீதியில் (24/01/2026) மாலை இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து மத்தளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறத்திலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 30 மற்றும் 36 வயதுடைய இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட விசாரணைகளின்படி, காரைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பின்னதூவ போக்குவரத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் போதிய ஓய்வுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய
கடந்த 2025 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமான சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த சைபர் குற்றவாளிகளின் இலக்காக நாட்டின் இளம் சமூகத்தினர் மற்றும் முதியவர்கள் மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இணையத்தளத்திற்குப் புதிதாகப் பிரவேசிப்பவர்களும் இந்தக் குற்றவாளிகளின் இலக்காகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், தமது கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை இவ்வாறான தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர்,
யாராவது ஒருவர் மிகவும் பிரபலமான ஒரு நபராகவோ அல்லது பிரபலமான நிறுவனத்தின் பெயரிலோ உங்களுடன் தொடர்புகொண்டு, உங்களின் தொலைபேசி இலக்கம், கடவுச்சொற்கள் மற்றும் OTP இலக்கங்களைப் பெற்றுக்கொண்டு உங்களின் இலட்சக்கணக்கான பணத்தைக் கொள்ளையிட முடியும்.
அதேபோல் நீங்கள் இலட்சாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள், இலட்சக்கணக்கான சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்ற செய்தியுடன் உங்களை ஏமாற்றுகின்றனர்.
அந்த இலட்சக்கணக்கான பணப்பரிசைப் பெறுவதாயின் நீங்கள் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என வழிகாட்டுகின்றனர்.
பின்பற்ற வேண்டிய முறை என்ன? உங்களின் OTP இலக்கம், தனிப்பட்ட தகவல்கள், வங்கித் தகவல்கள் இவற்றை நாம் திரும்பத் திரும்பக் கூறினாலும், சில தாய்மார்கள், தந்தைமார்கள் மற்றும் இளைஞர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஒரு குற்றவாளிக்கு அல்லது மோசடிக்காரருக்கு வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தனியார் - அரச சார்பு துறையினருக்கு ஓய்வூதியம்
தனியார் துறை மற்றும் அரச சார்பு நிறுவனங்களுக்கு (Semi-government) ஓய்வூதியம் ஒன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதி தொழில் அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
(23/01/2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
"EPF மற்றும் ETF ஆகிய இரண்டு நிதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை நான் மிகத் தெளிவாகக் கூறினேன்.
நாங்கள் EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றப்போவதாக நான் கூறவில்லை. நான் கூறிய விடயம் தவறாகப் போய்ச் சேர்ந்துள்ளது.
இந்த EPF நிதியானது சமூகப் பாதுகாப்புக்காகவே உள்ளது. தனியார் துறை மற்றும் அரச சார்பு நிறுவனங்களுக்கு ஓய்வூதியம் ஒன்றை வழங்குவது குறித்தே நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
மாறாக, EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றப்போவதாக நான் கூறவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
கழுத்து வெட்டப்பட்ட நிலையில்
மகா ஓயா – பெரகல காப்புக்காட்டிலுள்ள நீரோடைக்கு அருகில், கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வராபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த 23ஆம் திகதி தனது கால்நடைகளை (மாடுகளை) மேய்ச்சலுக்குக் கட்டி விடுவதற்காகக் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டபோது இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் கொலைக்கான காரணம் என்ன அல்லது கொலையைச் செய்தது யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் மகா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பரபரப்பாகும் இலங்கை அரசியல்.. ..............!

No comments