சமூக நகர்வு ( Social Mobility ).............!
சமூக நகர்வு ( Social Mobility )..... ..............!
சமூக நகர்வு ( Social Mobility )
பொதுவாக மனிதர்கள் அவர்கள் சமூகத்தில் கொண்டிருக்கும் அந்தஸ்தினாலும் மற்றும் வசிக்கும் பாத்திரங்களாலுமே அளவிடப்படுகி;ன்றார்கள். மனிதன் சமூகத்தில் தான் கொண்டிருக்கும் அந்தஸ்து உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு கைங்கரியங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றான். தாழ் நிலையிலிருந்து உயர் நிலையை நோக்கிச் செல்வதற்கான உத்திகளையும் உபாயங்களையும் அவன் வகுத்துக் கொள்கின்றான். அதே நேரம் பல்வேறு காரணிகள் மனிதனை உயர் நிலையிலிருந்து தாழ் நிலையை நோக்கி தள்ளி விடுவதும் உண்டு. சமூகத்தில் வாழும் இத்தகைய மனிதர்களின் உயர்வு நோக்கிய மற்றும் தாழ்வு நோக்கிய அசைவையே சமூக நகர்வு ( Social Mobility ) எனும் பதம் குறிக்கின்றது. சமூக அடுக்கமைப்பின் பிரிக்க முடியாத ஒரு கூறாக சமூக நகர்வு கொள்ளப்படுகின்றது.
ஒரு சமூக அந்தஸ்திலிருந்து மற்றுமொரு சமூக அந்தஸ்துக்கு ஒரு தனியன் அல்லது தனிநபர்கள் நகர்வதனை சமூக நகர்வு குறிக்கின்றது என வலஸ் (Wallace) குறிப்பிடுகின்றார்.
ஒரு சமூக வகுப்பிலிருந்து மற்றொரு சமூக வகுப்பிற்கு அல்லது ஒரு சமூக படையமைபப் pல் இருந்து மற்றொரு சமூக படையமைபப் pற்கு ஒரு தனிநபர் அல்லது ஒரு குழு நகர்வதனை சமூக நகர்வு குறிப்பதாக ஸ்கொட் (W.P.Scott) கூறுகின்றார்.
ஒரு தனியன் அரசியல் ரீதியாக அதிகாரத்தைப் பெறும் போது அல்லது பணத்தையும் பட்டத்தையும் பெறும் போது அவன் தனிநபர் நகர்வை அடைந்து கொண்டதாக கொள்ளப்படுகின்றது. ஜிம்மி காட்டர் (Jimmy Carter) ஒரு விவசாயியின் மகனாக இருந்தும்,
அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறினார். ஆர்.பிரேமதாச சாதாரணதொரு ஏழையின் மகனாக இருந்தும் இலங்கையின் ஜனாதிபதியாக மாறினார். இப்படி ஏராளமான தனிநபர் வரலாறுகளை தனிநபர் நகர்வுக்கு உதாரணமாக கூறலாம்.
அதேபோல் சமூக நகர்வு மூலம் ஒரு குழுவில் ஏதாவது நிலை மாற்றங்கள் தோன்றுமானால் அது குழு நகர்வாக கொள்ளப்படுகின்றது.
சமூக நகர்வு : வகைகள்
சமூக நகர்வு குறித்த பல்வேறு வரையறைகளுள் சொறோகினின் (P.A.Sorokin) வகைப்பாடு முக்கியமானது.
அவர், இரு வகையான சமூக அசைவு குறித்துப் பேசுகின்றார்.
கிடையான சமூக நகர்வு
குத்தான சமூக நகர்வு
கிடையான சமூக அசைவு
அந்தஸ்தில் மாற்றமில்லாது நிலைப்பாட்டில் ( Position )
ஏற்படும் மாற்றம் இதுவாகும.; இங்கு அவரது அந்தஸ்து மாற்றமடையாமல் நிலமைதான் மாற்றமடைகின்றது. ஒரு பொறியியலாளர் தான் பணியாற்றிய கம்பனியிலிருந்து விலகி, மற்றுமொரு கம்பெனிக்கு அதே பொறியியளாளர் பதவிக்கு செல்வதனை கிடையான சமூக அசைவுக்கு உதாரணமாக கூறலாம்.
இங்கு அவரது அந்தஸ்து மாற்றமடையவில்லை, மாற்றமாக தொழில் செய்யும் இடம் தான் மாறியிருக்கின்றது.
உண்மையில் கிடையான சமூக நகர்வு குடும்ப வாழ்விலும் சமுதாய உறவிலும் சில உடைவுகளை ஏற்படுத்துகின்றது.
எனும், கருத்து பரவலாக நிலவுகின்றது. அடிக்கடி நிகழும் இடமாற்றம் தேவையற்ற பல இடர்பாடுகளை சமுதாயத்தில் தோற்றுவிப்பதாக பொதுவாக சுட்டிக் காட்டப்படுகின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் தூர இடங்களுக்குச் சென்று தொழில் புரிவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.
தான் பிறந்து வளர்ந்த இடங்களை அண்டிய பகுதிகளில் தொழில் புரியவே பெரும்பாலும் விரும்புகின்றார்கள். இலங்கை போன்ற நாடுகளில் ஆசிரியத் தொழிலில் அடிக்கடி இடம்பெறும் இடமாற்றங்கள் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கின்றது.
என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
உண்மையில்,ஆசிரியர் இடமாற்றம் அந்தஸ்தில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லையெனினும், அது பல அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது என்பதே இதற்கான காரணங்களாகும்.
குத்தான சமூக நகர்வு
ஒரு தனிமனிதன் அல்லது குழு அல்லது மக்கள் ஒரு சமூக அந்தஸ்திலிருந்து மற்றொரு சமூக அந்தஸ்த்துக்கு நகர்வதனை குத்தான சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது.
வகுப்பு, தொழில், அதிகாரம் போன்றவற்றில் இடம்பெறும் மாற்றங்களையே இது குறிக்கின்றது. இம் மாற்றம் ஒரு தனியனின் வாழ்வு முழுவதும் உயர்வு நிலை நோக்கியோ அல்லது தாழ்வு நிலை நோக்கியோ அசைந்த வண்ணமே இருக்கும்.
ஏழ்மை நிலையினரின் மத்திய வகுப்பை நோக்கிய நகர்வு மற்றும் கடைநிலை ஊழியனாக இருந்த ஒருவர் பதவி உயர்வு பெற்று செல்லுதல் போன்றவற்றை குத்தான சமூக அசைவுக்கு
உதாரணங்களாக கூறலாம்.
குத்தான சமூக நகர்வு பின்வரும் வடிவங்களைக் கொண்டது.
அ. மேல் நோக்கிய நகர்வு (Upward mobility )
ஒரு தனியன் அல்லது குழு அந்தஸ்தில் (Status) ஏறிச் செல்வதை அல்லது மேல்நோக்கிச் செல்வதனை இப்பதம் குறிக்கின்றது. ஒரு சில்லறை வியாபாரி மொத்த வியாபாரியாக உயர்வடைதல், ஒரு கொத்தனாரின் (Mason) மகன் கல்வி அடைவின் மூலம் பல்கலைக்கழக பேராசிரியராக மாறுதல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.
ஆ. கீழ்நோக்கிய சமூக நகர்வு (Downward mobility)
கீழ்நோக்கிய சமூக நகர்வு ஒருவகை சமூக இறங்கு நிலையை (Social descendant) அல்லது சமூக தோல்வி நிலையை (Social failure) குறிக்கின்றது. எவ்வளவு தான் முயன்றாலும் சில தனியன்களால் உயர்வை நோக்கிச் செல்ல முடிவதில்லை. அதே போல் தனது சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை தற்காத்துக் கொள்ள முடியாத தனியன்களும் அந்தஸ்த்தை இழந்து கீழ்நிலைக்குச் செல்ல வேண்டியேற்படுகின்றது. இதனையே கீழ்நோக்கிய சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது. வியாபாரத்தில் மிகப் பெரிய முதலீடுகளை செய்த ஒரு வியாபாரி நஸ்டமடைந்து ஏழையாக மாறலாம். அதே போல் ஒரு உயர் அதிகாரி அவரது ஊழல் நடத்தை காரணமாக பதவியை இழக்கலாம். இவை கீழ்நோக்கிய சமூக நகர்வுக்கான உதாரணங்களாகும்.
இ. இரு தலைமுறைகளுக்கிடையிலான சமூக நகர்வு (Inter-generational social mobility)
சமூக அசைவிலே தொழிற்படும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு இரு தலைமுறைகளுக்கிடையிலான நகர்வு (movement between generation) கணிக்கப்படுகின்றது. ஒரு குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களின் அந்தஸ்தானது அடுத்த தலைமுறைக்குள் எவ்வாறு மாறியிருக்கின்றது என்பதனைக் கருத்திற் கொண்டு இந்நகர்வு கணிக்கப்படுகின்றது. ஒரு சாதாரண விவசாயியின் மகன் ஒரு மருத்துவராக மாறுவதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இங்கு தந்தையின் தலைமுறையிலிருந்து மகனின் தலைமுறைக்குச் செல்லும் போது அசைவு நிகழ்ந்திருக்கின்றது. ஒரு தலைமுறை மாற்றத்திற்குள் எத்தகைய மாற்றங்களை ஒரு சமூகம் கடந்து வந்துள்ளது என்பதனை இந்த சமூக நகர்வு சுட்டிக் காட்டுகின்றது.
ஈ. ஒரு தலைமுறையில் நிகழும் சமூக நகர்வு
(Intra generational mobility)
ஒரு தலைமுறைக்குள் நிகழும் மாற்றத்தை (Movement within one generation) இந்நகர்வு குறிக்கின்றது. அதாவது, ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சமூக மட்டத்தில் பெறும் அசைவுகளைக் குறிக்கின்றது. சாதாரண மேற்பார்வையாளராக (Supervisor) ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தவர் பதவி உயர்வு காரணமாக முகாமையாளராக மாறுவதனை இதற்கு உதாரணமாக கூறலாம்.
உ. கட்டமைப்பு நகர்வு
(Structural mobility)
ஒரு தனிமனிதனின் முயற்சிக்கு அப்பால் கட்டமைப்பு மாற்றங்களால் இந் நகர்வு இடம்பெறுவதனால் இதனை ஒரு வகை பலாத்காரப்படுத்தப்பட்ட நகர்வாக (forced mobility) கொள்ளப்படுகின்றது. ஊழியச் சந்தையில் தோன்றும் மாற்றங்கள் பலர் தொழில்களை இழக்க காரணமாகுவதையும், அபரிமிதமான குடிவரவால் வர்க்க அமைப்பில் தோன்றும் மாற்றங்களையும் இதற்கு உதாரணங்களாக் குறிப்பிடலாம்.
சமூக நகர்வைத் தூண்டும் காரணிகள்
எல்லா சமூகங்களும் அதன் அங்கத்தவர்களுக்கு சமூக நகர்விற்கான சந்தர்ப்பங்களை வழங்கிய போதும், சமமான சந்தர்ப்பம் எல்லா அங்கத்தவர்களுக்கும் கிடைப்பதில்லை. திறந்த வர்க்க சமூகங்களில் (Open class society) கூட மேல் நோக்கிய சமூக நகர்வு சமமாக இருப்பதில்லை. கீழ் வர்க்க சமூகங்களில் வாழும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் கல்வி வசதிகளை விட மத்திய தர வகுப்பு சிறுவர்களுக்கு, மேல் நோக்கி நகர்வதற்கான கல்வி வசதிகள் அதிகமாக வழங்கப்படுவதனை இதற்கு உதாரணமாக காட்டலாம்.
ஒரு சமூகத்தில் காணப்படும் கட்டமைப்பு காரணிகள் (structural factors) கூட சமூக நகர்வில் பங்களிப்புச் செய்கின்றன. பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் இவற்றில் முக்கியம் பெறுகின்றன. இத்தகைய சட்டங்கள் கீழ்வர்க்கத்தினரையும் தலித் மக்களையும் காப்பதோடு சமூக நகர்விற்கான சந்தர்ப்பங்களையும் வழங்குகின்றன.
கட்டமைப்பு காரணிகளுடன் தனிநபர் காரணிகளும் (Individual factors) ஒரு தனியனின் உயர் அந்தஸ்து நிலையைத் தீர்மானிக்கின்றன. ஆற்றலுள்ள செயற்திறனுள்ள தனியன்கள் அவை அல்லாத தனியன்களை விட அதிக அந்தஸ்தை அடைந்து கொள்கின்றார்கள். ஒரு தனிநபருக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அவனின் ஆற்றல்களும் சமூக நகர்விலும் அதன் வேகத்திலும் தாக்கம் வெலுத்துகின்றன.
கல்வி
சமூக நகர்வைத் தூண்டும் முக்கியமானதொரு கருவியாகவும் சமூக கட்டமைப்பில் மேல் நோக்கிய நகர்வை கொண்டு செல்லும் ஏணியாகவும் கல்வி தொழிற்படுகிறது. உயர் பதவிகள் மூலம் பலர் சமூகத்தில் உயர் அந்தஸ்தை பெற்றுக் கொள்ளவும் வாழ்வில் முன்னேற்றங்களை அடைந்து கொள்ளவும் கல்வி ஒரு மந்திர சக்தியாக (Magical power) தொழிற்படுகிறது. அதனால்தான் கல்வியை அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான மூலமாக மாத்திரமன்றி உயர் அடைவை பெறுவதற்கான அற்புத வழியாகவும் அறிஞர்கள் கருதுகின்றார்கள். சாதியிலும் வர்க்கத்திலும் கீழ்நிலையிலுள்ளோருக்கு அவர்களின் அந்தஸ்தை அதிகரித்துக் கொள்ளவும் உயர்வை பெற்றுக் கொள்ளவும் கல்வியே முக்கிய கருவியாக கை கொடுக்கின்றது.
நவீன கைத் தொழில் சமூகத்தில் ஒருவர் பெற்றுக் கொள்ளும் தொழிலின் தராதரம் அவர் கொண்டிருக்கும் கல்வியின் தராதரத்திலேயே தங்கியிருப்பதனால் மேல் நோக்கிய சமூக நகர்வில் கல்வி முக்கிய பாத்திரம் வகிப்பதாக சமூகவியலாளரகள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்க சமூகத்தில் தந்தையை விட அவரது மகன் உயர் சமூக அந்தஸ்த்தை நோக்கி நகர்கின்றான். என்றால் அது மகன் பெறறுக்கொண்ட கல்வியின் உயர் அடைவினாலேயே சாத்தியமாகின்றது, என பீட்டர் பிளா மற்றும் ஒடிஸ் டங்கன் (Peter Belau and Otis Duncan) குறிப்பிடுகின்றார்கள். மறுபுறம் குறைந்த கல்வித்தரம் கொண்ட மக்களுக்கும் அவர்களது சமூக நகர்வின் தன்மைக்கும் தொடர்பிருப்பதனையும் சமூகவியலாளர்கள் சுட்டிக்காடடுகின்றார்கள். குறைந்த கல்வித் தரம் சமூக நகரவின் வாயிலை திறந்துவிடுவதில் கட்டுப்பாட்டை விதிக்கின்றது.
பாரம்பரிய சமூக அடுக்கமைவு முறைமையை கண்டிப்பாக பின்பற்றி வரும் சமூக அமைப்பில் கல்வியானது அச் சமூகத்தில் காணப்படும் சமமின்மைகளை உடைத்து விடுவதில் ஓரளவு பங்களிப்புச் செய்கின்றது. முறைசார் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், சாதி முறையின் ஆதிக்கத்திற்குட்பட்டு குறைந்த அல்லது மத்திய சமூக அந்தஸ்த்தைக் கொண்ட மக்கள் உயர் சமூக அந்தஸ்த்தை
நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.
கல்வியும் சமூக நகர்வும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த ஒன்று. வளர்ச்சியை தூண்டிவிடவும் பின்னடைவை அகற்றி விடவும் கல்வி சக்தி பெற்றிருக்கின்றது. உயர்நிலை மற்றும் உயர் அந்தஸ்த்து போன்றவற்றை நோக்கி தனிநபர்களை தூண்டி விடுவதில் கல்வி மகத்தான ஒரு கருவியாகும். சமூகத்தில் உயர்நிலையை அடைந்து கொள்ள முனையும் ஒருவர் கல்வியை பெற்றுக் கொள்ள முண்டியடிப்பதை அதிகம் காணலாம்.
(அ) கல்வியின் அளவு (Amount of Education)
ஒருவர் பெற்றுக் கொள்ளும் கல்வியின் அளவைப் பொறுத்து அவரின் சமூக அந்தஸ்த்தின் அளவும் வேறுபடுகின்றது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரை விட பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு அதிக அந்தஸ்த்தும், பேராசிரியர் ஒருவருக்கு இவர்கள் இருவரையும் விட அதிக அந்தஸ்த்தும் சமூகத்தால் கொடுக்கப்படுகின்றது. இந்தக் கல்வியின் அளவு பல்வேறு முன்னேற்றங்களை அதன் உறுப்பினர்கள் மீது ஏற்படுத்தி விடுகின்றது.
(ஆ) பாடத்திட்டம் (Educational Curriculum)
சமூக நகர்விற்கும் பாடத்திட்டத்திற்கும் தொடர்பிருப்பதாக கல்வியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஒவ்வொரு கற்கைக்கும் ஒவ்வொரு பெறுமதி இருக்கின்றது. பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற விஞ்ஞானம் சார்ந்த பாடங்கள் ஏனைய சமூக விஞ்ஞானப் பாடங்களைவிட முதன்மையானதாக சமூகத்தால் கருதப்படுகின்றன. இதனால் சமூக விஞ்ஞானிகளை விட இயற்கை விஞ்ஞானிகளுக்கு சமூக அந்தஸ்த்து ஒப்பீட்டு ரீதியில் அதிகமாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
(இ) கல்வியடைவு (Academic Achievement)
கல்வியடைவிற்கும் சமூக நகர்விற்கும் தொடர்பிருக்கின்றது. சில மாணவர்கள் உயர் அந்தஸ்த்தை சில கற்கைகளில் சிறப்புத் தேர்ச்சி, பாண்டித்தியம் மற்றும் ஆராய்ச்சி போன்ற கல்வி அடைவு மட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்கின்றார்கள்.
(ஈ) கல்வி நிறுவனங்களின் முக்கியம்.
(Importance of Educational Institution)
பிரபல்யமான பாடசாலைகள், நன்மதிப்பு பெற்ற பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் கற்ற மாணவர்களுக்கு ஏனைய கல்வி நிறுவனங்களில் கற்ற மாணவர்களை விட அதிக மதிப்பும் மரியாதையும் அந்தஸ்த்தும் கிடைக்கின்றது. பல பொழுதுகளில் தொழிலுக்கான நேர்முகப்பரீட்சையில் கூட இவ்விடயம் கருத்தில் கொள்ளப்படுகின்றது.
தொழிலும் பொருளாதார செயல்களும்
தந்தை செய்த தொழிலிருந்து தனயன் வேறு தொழில் செய்யும் போதும், தான் செய்த சாதாரண தொழிலிருந்து வேறு தொழிலை செய்யும் போதும், ஒரே தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும் போதும், தொழிலில் முதுநிலையை அடையும் போதும் சமூக நகர்வு இயல்பாக தூண்டப்படுகின்றது. சமூக நகர்விற்கான சந்தர்ப்பங்களை பொருளாதார நடவடிக்கைகள் வழங்குகின்றன. இந் நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானம் மேல் நோக்கிய சமூக நகர்வை தூண்டுகின்றன.
சமய நிறுவனங்கள்
சமயங்களும் சமய நிறுவனங்களும் சமூக நகர்வை முடுக்கி விடுகின்றதா அல்லது பின் தள்ளுகின்றதா என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும், நிலைக்குத்தான சமூக நகர்வை நோக்கி சமூகத்தை நகர்த்தி விட்டதில் சமயத்திற்கும் பங்கிருக்கின்றது என்பது மெக்ஸ் வெபர் போன்ற சமூகவியலாளர்கள் கருத்தாகும். அபரிமிதமான வளர்ச்சியுடன் கூடிய இன்றைய மேற்கு நாடுகளின் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும் அந்நாடுகளில் வாழும் தனிநபர்களின் முன்னேற்றத்திற்கும் புரட்டஸ்தாந்து சமயத்தின் தோற்றமே காரணமென்பது அவர் கருத்து.
இலங்கையில் வாழும் பௌத்தர்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பல பௌத்த சமய அமைப்புக்கள் இயங்குகின்றன. அதே போல் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் இந்து சமயத்தைப் பின்பற்றுவோரிடையே பல தளமாற்றங்களை கொண்டுவருவதற்காக இந்து சமய அமைப்புககள் மும்முரமாக இயங்குகின்றன.
அரசியல் நிறுவனங்கள்
சமூக நகர்வை முன்னெடுத்துச் செல்வதில் அரசியல் நிறுவனங்களுக்கு பங்கிருக்கின்றன. அரசியல் வாழ்வுக்குள் நுழையும் ஒருவருக்கு கிடைக்கும் அதிகாரத்தினால் பல நிலைமாற்றங்களை பெறுகின்றார். அவர் சார்ந்த சமூக உறுப்பினர்களும் பல மாற்றங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றார்கள். இந்திய அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒதுக்கீடு கொள்கை (Reservation Policy) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் ஏறு நிலையை அடைந்து கொள்ள உதவியது. போரக் களத்தில் காட்டிய அதி தீவிர அர்ப்பணங்கள் காரணமாக சாதாரண குடிமகன் கூட தேசிய வீரனாக மாறிய பல சந்தர்ப்பங்கள் வரலாற்றிலே உண்டு. அரசியல் சந்தர்ப்பங்கள் பல தனிநபர்களை பெரும் தலைவர்களாகவும் பெரும் நிர்வாகிகளாகவும் மாற்றியிருக்கின்றன. குண்டு ராவோ போக்குவரத்து கம்பெனியில் தான் வேலை செய்தார். ஆனால், அவருக்கு கிடைதத் அரசியல் சந்தர்ப்பம் கர்நாடகத்தின் முதல்வராக வலம் வர கை கொடுத்தது.
குடும்பமும் திருமணமும்
பீட்டர் வேர்ஸ்லி (Peter Worsley) சுட்டிக் காட்டுவது போல் மேல்
நோக்கிய சமூக நகர்வை கொண்டுவருவதில் குடும்பம் பிரதானமானதொரு கருவியாக காணப்படுகின்றது. படிப்பில் அல்லது வியாபாரத்தில் பல உன்னத நிலைகளை அடைந்து சமூகத்தில் உயர் நிலையை தமது பிள்ளைகள் பெற வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் பெற்றோர் பலர் இருக்கின்றார்கள். வெளிநாடு சென்று இரவு பகலாக உழைத்து அனுப்பும் பணத்தினால் தமது பிள்ளைகள், சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள் மிளிர வேண்டும், வாழ்வு ஒளி பெற வேண்டும் என எண்ணும் உள்ளங்கள் குடும்பத்தில் பல இருக்கின்றன. கணவனின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஏணியாய் தூக்கி விடும் மனைவியும் குடும்பத்திலே தான் காணப்படுகின்றாள்.
திருமணங்கள் கூட பலரது வாழ்வில் நகர்வைக் கொண்டு வந்திருக்கின்றன. கீழ் வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி, மேல்வர்க்கத்தைச் சேர்ந்த ஒருத்தி அல்லது ஒருவனை திருமணம் முடிக்கும் போது கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தோர் மேல் நிலை நோக்கி தள்ளப்படுவதோடு வாழ்வு முறையும் மாறத் தொடங்குகின்றது.
எதிர்பாராத அதிஷ்டம் (Windfall or the luck factor)
முடியுமான எல்லா வழிகளில் முயன்றும் வெற்றியின் கதவை பலரால் திறக்க முடிவதில்லை. ஆனால், சிலருக்கு அதிஷ்டம் வெற்றியின் சாவியை கையில் கொடுத்து விடுகின்றது. சிலரது முயற்சி விரைவில் வெற்றிக் கனியைக் கொடுத்து விடும் அதேவேளை பலரின் முயற்சி பாலைவனத்தில் விழுந்த மழைத் துளியாய் போய்விடுகின்றது. பலரது வாழ்வில் அதிஷ்டம் மேல் நோக்கிய நகர்வை கொண்டு வரும் காரணியாகி விடுகின்றது என சில சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். எத்தனையோ வறியவர்கள் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பின் மூலம் சமூக உயர்நிலைக்குச் சென்றிருக்கின்றார்கள்.
அடைவுகளும் தோல்விகளும்
(Achievements and Failures)
ஒரு மனிதன் பெற்றுக் கொள்ளும் அடைவுகள் பெரும்பாலும் அவனை இன்னும் மேலே செல்லத் தூண்டுகின்றது. ஒரு அறியப்படாத எழுத்தாளன் கலையுலக விருது ஒன்றை பெறும் போது அது அவனை மேலும் தூண்டி விடுகின்றது. அதே போல் தோல்வி, அவமானம், இழப்பு போன்றவை ஒரு தனியனை கீழ் நோக்கி நகர்த்தி விடுகின்றது. சில காரணிகளால் பணத்தை இழந்து விட்ட ஒரு தனியன் உயர் வகுப்பிலிருந்து கீழ் வகுப்பை அடைவதனை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
திறமையும் பயிற்சியும் (Skills and Training)
ஒவ்வொரு சமூகமும் தமது இளையவர்களது திறமையையும் பயிற்சியையும், விருத்தியாக்கிக் கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. விருத்தியாக்கப்பட்ட திறமையும் பயிற்சியும் உயர்பதவியை அடைந்து கொள்வதற்கான உபாயமாகவும் பொருளாதார பலன்களை ஈட்டிக் கொள்வதற்கான வாய்க்காலாகவும் அமைந்து விடுகின்றது.
புலம் பெயர்தல் (Migration)
விரும்பியோ அல்லது நிர்ப்பந்தத்திலோ இடம்பெறும் புலம் பெயர்வுகள் உயர் அல்லது தாழ் சமூக நகர்வை நோக்கி ஒரு தனியனை அல்லது சமூகத்தை நகர்த்தி விடுகின்றது. புலம் பெயர்ந்து வரும் புதிய சூழல் உயர்ந்து செல்வதற்கான பெருவெளியையும், சந்தர்ப்பங்களையும் அள்ளி வழங்கும் அதேவேளை முன்னரிலும் படுமோசமான நிலையை அடையவும் சில நேரம் காரணமாக அமைந்து விடலாம்.
வறிய மக்களாக வாழ்ந்த பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பணத்துடன் திரும்பி வந்து நிலம் வாங்கி, வீடு கட்டி, கார் வாங்கி, காணி வாங்கி சமூக அந்தஸ்த்திலே உயர்வானவர்களாக மாறியிருக்கின்றார்கள். அதே போல் கிராமத்தில் வாழ்ந்த பலர் கொழும்பு போன்ற நகரங்களுக்கு சென்று முன்னேறியிருக்கின்றார்கள். அதேநேரம் கிராமத்தில் தொடர்ந்து வசிக்கும் அவர்களது உறவினர்கள் பலர் அதே அந்தஸ்த்தில் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கைத்தொழில்மயமாக்கம்
கைத்தொழில் மயமாக்கம் புதியதொரு சமூக முறைமையினை (social system) கட்டமைத்து, அந்தஸ்த்தானது ஒரு சமூகம் கொண்டிருக்கும் ஆற்றலினாலும் பயிற்சியினாலும் தீர்மானிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை உருவாக்கியிருக்கின்றது. ஒரு திறந்த சமூக அமைப்பில் சாதி, மதம், மரபினம் (race) , இனத்துவம் போன்றவை செல்லாக் காசுகளாக வலுவிழந்து போகும் நிலையும் தோன்றும். மக்கள் உழைப்பின் பால் ஊக்கப்படுத்தப்பட்டு அந்தஸ்த்து அடைந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான் என்பதனை கைத்தொழில் மயமாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.
சட்டமியற்றல் (Legislation)
சமூக நகர்வை ஏற்படுத்துவதில் சட்டத்துக்கு பாரிய பங்கிருக்கின்றது. அரசாங்கம் கொண்டு வரும் சட்டங்களுக்கு குடி மக்கள் கட்டுப்படும் போது திட்டமிட்ட மாற்றங்கள் சமூகப் பரப்பிலே தோன்றுகின்றன. நீதி, குற்றம், சமவுரிமை, பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் தொடர்பான சட்டங்கள் பல்வேறு நகர்வுகளை சமூகப் புலத்திலே ஏற்படுத்தியிருப்பதனை பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்காவில் இயற்றப்பட்ட இனப் பாகுபாட்டுக்கெதிரான சட்டங்கள் (Racial Anti-Discrimination) அங்கு வாழும் கறுப்பினத்தவரிடையேயும், பெண்களிடையேயும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தன என்பது ஆய்வாளர்கள் கூறும் கருத்தாகும்.
நவீனமயமாக்கம் (Modernization)
விஞ்ஞான அறிவையும் நவீன தொழிநுட்பத்தையும் பயன்படுத்துவதையே நவீனமயமாதல் செயன்முறை குறிக்கின்றது. மேலும், நவீனமயமாக்கம் பகுத்தறிவின் பயன்பாட்டையும், சமயச்சார்பற்ற வாழ்வு முறையையும் குறித்து நிற்கின்றது. விஞ்ஞானத்தினதும், தொழிநுட்பத்தினதும் இராட்சத வளர்ச்சி பல்வேறு அதிர்வுகளையும், மாற்றங்களையும் சமூகத்தில் முடுக்கி விட்டிருக்கின்றது. புதிய புதிய தொழில்களும் அதனை மையப்படுத்திய உயர் அந்தஸ்த்துக்களும் தனி நபர்களுக்கு
நவீன மயமாக்கம் மூலம் கிடைக்கின்றன. அதே நேரம் விரக்தி, ஏமாற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற உளவியல் நோய்களையும் சமூக விரிசல்களையும் நவீனமயமாக்கம்
தோற்றுவித்திருக்கின்றது.
சமூக நகர்வு: விளைவுகள்
சமூக இயங்கு நிலையின் வெளிப்பாடே சமூக நகர்வாகும். சமூகம் ஒரே நிலையில் தேக்கமடைந்து உறைந்து போய் இருப்பதில்லை, மாறாக, அது காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமூக நகர்வு நேர் மற்றும் எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துவதனை சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நேர்விளைவுகள்
திறமைவாய்ந்த தனியன்கள் சமூக ஏறு நிலையை (Social ascendance) அடைந்து கொள்வதற்கு சமூக நகர்வு வழியமைக்கின்றது என பாலு மற்றும் டுங்கன் (P.M. Balu and O.D. Duncan) குறிப்பிடுகின்றார்கள். சமூகத்தின் வேறுபட்ட தேவைகளை அடைந்து கொள்வதற்கு ஆற்றலுள்ள மனிதர்களை சமூக நகர்வு தூண்டுவதனால் தனிமனித திறன்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு காரணமாக அமைகின்றது. அடைக்கப்பட்ட பாத்திரத்திலிருந்து நீராவியை வெளியேற்றி பாத்திரத்தை எப்படி அதன் வால்வு பாதுகாக்கின்றதோ அப்படி அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் அரணாக சமூக நகர்வு தொழிற்படுவதாக லிப்சட் மற்றும் பென்டிக்ஸ் (S.M. Lip set and R. Bandits) குறிப்பிடுகின்றார்கள். கீழ் வர்க்க மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் அவர்களை சமூக முன்னேற்றத்தின்பால் நகர்ந்து செல்ல தூண்டுகின்றன. இந்நிலை அவர்களுக்கு சமூக அந்தஸ்துக்கள் கிடைக்க காரணமாக அமைவதனால் தேவையற்ற முரண்பாடுகள் தோன்றுவதிலிருந்து சமூகம் பாதுகாப்பு பெறுகின்றது. இதனால் சமூக நகர்வு ஒரு பாதுகாப்புக் கருவியாக தொழிற்படுவதாக கூறப்படுகின்றது.
சமூக நீதி (Social Justice) சமுதாயத்தில் பேணப்படுவது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்த ஜனநாயகம் சமூகத்தில் தோன்றுவதற்கும் ஒரு சமத்துவ சமுதாயம் மிளிர்வதற்கும் சமூக நகர்வு பாதை போடுகின்றது.
சாதியின் ஆதிக்கம் ஓங்கிக் காணப்படும் பாரம்பரிய சமூகங்களில் தொழில் தெரிவு மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ தந்தையின் தொழிலையே பிள்ளைகளும் செய்ய வேண்டிய சூழ்நிலை அங்கு காணப்படுகிறது. ஆனால், இன்றைய நவீன கைத்தொழில் சமூகங்களில் தொழில் தெரிவுக்கான வாயில் திறந்து விடப்பட்டிருப்பதனால் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தொழிலையே செய்ய வேண்டும் எனும் நிலை மாறிப் போயுள்ளது. இந்நிலை தொழில் திருப்தியை (Job satisfaction) அதனைச் செய்வோருக்கு கொடுத்துள்ளது. ஒரு மனிதன் பெறும் தொழில், தொழில் மூலம் கிடைக்கும் வருமானம், அவன் இதுவரை வாழ்ந்த வாழ்வு முறையில் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றது. கீழ் வர்க்க மனிதன் ஒருவன் மத்திய வகுப்பை அடையும் போது அவனது வாழ்வு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த அவன் முனைகின்றான். விலை உயர்ந்த ஆடைகளை, கைக்கடிகாரத்தை, பாதணிகளை, வாசனைத் திரவியங்களை வாங்க முனைகின்றான். தனது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுக்க விளைகின்றான். தனக்கான ஒரு வீட்டைக் கட்டிக் கொள்வதற்கான முயற்சியில் இறங்குகின்றான். இப்படி பல மாற்றங்களை தனிமனித வாழ்வில் சமூக நகர்வு ஏற்படுத்துவதனைக் காணலாம்.
சமூக நகர்வின் முக்கிய சிறப்புக்களில் ஒன்று அது தனிநபர்களின்
இயலுமையை, செயற்படும் ஆற்றலை, தயார் நிலையை உயிர்ப்புடன் வைக்க உதவுகின்றது. இந்த இயங்கு நிலை போட்டித் தன்மையை மனிதனுக்குள் உண்டாக்கி அடைவுகளை கிடைக்கச் செய்து வாழ்வை செழுமைப்படுத்துகின்றது.
எல்லா சமூகங்களிலுமுள்ள சராசரி தனியன்கள் சில மாற்றங்களை தமது வாழ்வில் எதிர்பார்க்கிறார்கள் அல்லது தமது வாழ்வு செம்மைப்பட வேண்டும் என விரும்புகின்றார்கள். உயர் அந்தஸ்தை அடைந்த மனிதர்கள் கூட மேலும் உச்ச நிலையை தொட வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். இருக்கும் சமூக முறைமை முன்னேற்றத்துக்கான பாதையில் எத்தகைய தடைக்கல்லையும் வைக்கவில்லை என உணரும் தனியன்கள் வாழ்வில் உயர்ந்திட தொடர் எத்தனம் செய்கின்றார்கள். ஏனெனில், அவர்கள் சமூக முறைமையில் பூரண நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்களின் கடின உழைப்பும் தொடர்தேர்ச்சியான போராட்டமும் இன்றோ அல்லது அண்மைய எதிர்காலத்திலோ பிரதிபலன்களை தரும் என நம்புகின்றார்கள்.
எதிர்மறை விளைவுகள்
சமூக நகர்வுக்கு உட்படுத்தப்படும் ஒருவர் பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. உயர் பதவிகளை நோக்கிச் செல்லும் ஒருவர் பல அபாயங்களையும் பாதுகாப்பற்ற தன்மைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகின்றது. அரசியலில் உயர் பதவியை பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு தனது நடமாட்டங்கள் அனைத்தையும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே செய்ய வேண்டி ஏற்படுகின்றது. எதிரிகள் தன்னை தாக்கி விடக் கூடும் எனும் அச்சம் அவருக்குள் எப்போதும் மையம் கொள்கின்றது. நீதிபதியாக மாறும் ஒருவர் சகல விடயங்களையும் பாதுகாப்புடன் செய்வதோடு சமூக அங்கத்தவர்களுடனான உறவை மட்டுப்படுத்துகின்றார். அதே போல் பதவி உயர்வு பெற்று இடம்மாறிச் செல்லும் போது அவருடைய குடும்பத்தை விட்டு, நண்பர்களை விட்டு தூரமாவதோடு பல்வேறு இடங்களுக்கு பயணிக்க வேண்டிய அசௌகரியங்களும் ஏற்படுகின்றன.
வாழ்வில் புதிய நிலைகளை அடைந்து கொள்ளும் செயற்பாட்டில் ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு மனிதன் பயணப்பட வேண்டி ஏற்படுகின்றது. சமூக பிணைப்பினை கத்தரிக்கும் ஒரு வலிமிகு விளைவை மனிதனுக்கு இந்நிலை ஏற்படுத்துகின்றது. இதன் போது வரும் புதிய சூழல், புதிய சமூகம், புதிய
இடம் அவனுக்கு பல அசௌகரியங்களையும் அச்
சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிலையையும் தோற்றுவிக்கின்றது. ஈற்றில் சோகத்தை அவனுக்குள் தோற்றுவித்து விடுகின்றது.
புதிய பதவி உயர்வு மேலதிக பொறுப்புக்களை ஒருவர் பெறவும் அதனை நிறைவேற்றவும் அழுத்தத்தைக் கொடுக்கின்றது.
இது உளவியல் ரீதியான சுமையாகும். இதனை கச்சிதமாக செய்து முடிக்க தவறும் போது பதற்றத்தை தோற்றுவிக்கின்றது. புதிய இடத்தை நோக்கிச் செல்லும் இத்தகைய பயணத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் உடன் வர சில நேரம் மறுக்கலாம். இதன் போது மனக்கவலை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது. அதே
போல் பதவி உயர்வு பெற்றவரோடு ஒன்றாக வேலை செய்தவர்கள் இவரது உயர்வை எண்ணி பொறாமை கொள்ளவும், சூழ்ச்சிகள் செய்யவும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதே போல் கீழ் நோக்கிய சமூக நகர்வு வறியநிலை, தரமற்ற சுகாதாரம், குடும்ப உடைவு, அந்நியமயப்படுத்தப்பட்ட மனோநிலை, சமூக தொலைவு போன்ற நிலைகளை உருவாக்கி ஒரு தனியனின் மனதை வெகுவாக பாதிப்பதனை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேல் நோக்கிய சமூக நகர்வு எப்போதும் சமூகத்துக்கு பிரயோசனமானது எனக் கூறமுடியாது. ஒரு தனியன் மேல்நிலை சமூக நகர்வுக்கு உட்படும் போது அவனுக்குள் வளரும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாமல் போகும் நிலைமை கூட தோன்றுவதுண்டு. மேல் நோக்கிய சமூக நகர்வில் ஏறிச் செல்லும் எல்லோரும் வெற்றியடைந்தவர்கள் எனக் கூறமுடியாது எனும் சமூகவியலாளர்களின் கூற்றும் கவனயீர்ப்புக்குரியது.
சமூக நகர்வு ( Social Mobility ).............!

No comments